Published : 10 Dec 2022 06:30 AM
Last Updated : 10 Dec 2022 06:30 AM

FIFA WC 2022 | பிரான்ஸூடன் இன்று மோதல்: கிளியான் பாப்பேவை சமாளிக்குமா இங்கிலாந்து? 

தோகா: கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு அல் பேத் மைதானத்தில் நடைபெறும் கால் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி, 1966-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்தை எதிர்த்து விளையாடுகிறது. உலகக் கோப்பை வரலாற்றில் பிரேசில் அணி 1962-ம் ஆண்டு சாம்பியன் பட்ட அந்தஸ்துடன் களமிறங்கி கோப்பையை மீண்டும் வென்றது.

இந்த சாதனையை இதுவரை எந்த அணியும் தகர்க்கவில்லை. இம்முறை கத்தாரில் இந்த சாதனையை முறியடிக்கும் முயற்சியில் பிரான்ஸ் அணி ஈடுபட்டுள்ளது. நடுகள வீரர்களான பால் போக்பா, கோலோ கண்டே மற்றும் முன்கள வீரரான கரீம் பென்சீமா ஆகியோர் காயம் காரணமாக விலகிய போதிலும் கிளியான் பாப்பே, ஆலிவர் ஜிரவுடு ஆகியோர் அபாரமாக செயல்பட்டு வருகின்றனர்.

பாப்பே 5 கோல்கள் அடித்துள்ள நிலையில் இரு கோல்கள் அடிக்க உதவியுள்ளார். அதேவேளையில் ஆலிவர் ஜிரவுடு 3 கோல்கள் அடித்துள்ளார். எனினும் பிரான்ஸ் அணி உலகத் தரம் வாய்ந்த அணிகளை இதுவரை சந்திக்கவில்லை. லீக் சுற்றில் ஆஸ்திரேலியா, டென்மார்க்{:" அணிகளை வீழ்த்திய பிரான்ஸ் அணி கடைசி ஆட்டத்தில் துனிசியாவிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் போலந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது.

முன்களத்தில் பாப்பேவுடன் ஆலிவர் ஜிரவுடு, உஸ்மான் டெம்பலே ஆகியோர் அச்சுறுத்தல் கொடுக்கக்கூடியவர்கள். அதேவேளையில் நடுகளத்தில் அட்ரியன் ராபியோட், அரேலியன் ஆகியோர் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர். இவர்களை இணைக்கும் பாலமாக அன்டோனி கிரீஸ்மான் உள்ளார்.

பின்களம் பிரான்ஸ் அணிக்கு சற்று சிக்கலாக உள்ளது. வலது புறம் விளையாடும் ஜூல்ஸ் கவுண்டே இயற்கையாக அந்த இடத்தில் களமிறங்கக்கூடியவர் இல்லை. தியோ ஹெர்னாண்டஸ் முன்னோக்கி விளையாடக்கூடிய சிந்தனை கொண்டவர். இந்த பகுதியில் இங்கிலாந்து அணி தாக்குதல் ஆட்டம் தொடுத்தால் பிரான்ஸ் அணி கடும் சோதனைக்கு உள்ளாகும். இங்கிலாந்து அணி கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் 3-0 என்ற கோல் கணக்கில் செனகலை வீழ்த்தியிருந்தது.

இதன்மூலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு எதிரணியை கோல் அடிக்க விடாமல் முழுமையான வெற்றியை பதிவு செய்தது. முன்னதாக லீக் சுற்றில் ஈரான், வேல்ஸ் அணியை தோற்கடித்தது. அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தை கோல்களின்றி டிரா செய்தது. கேப்டன் ஹாரி கேன், ரஷ்ய உலகக் கோப்பையில் 6 கோல் அடித்த நிலையில் கத்தாரில் இதுவரை ஒரு கோல் மட்டுமே அடித்துள்ளார்.எனினும் 3 கோல்கள் அடிக்க உதவினார்.

செனகல் அணிக்கு எதிரான வெற்றியில் முக்கிய பங்கும் வகித்தார். 19 வயதான ஜூட் பெல்லிங்ஹாம் நடுகளத்தில் நம்பிக்கை அளிக்கக்கூடியவராக திகழ்கிறார். மார்கஸ் ராஷ்ஃபோர்ட், ஜாக் கிரேலிஷ், ரஹீம் ஸ்டெர்லிங் ஆகியோர் எதிரணியின் டிபன்டர் களுக்கு சவால் அளிக்கக்கூடியவர்கள். டிபன்டர்களளான ஹாரி மாகுவேர், ஜான் ஸ்டோன்ஸ் ஆகியோர் பிரான்ஸின் ஆலிவர் ஜிரவுடின் சவாலை எதிர்கொள்ள ஆயத்தமாக உள்ளனர். அதேவேளையில் அதிவிரைவாக செயல்படக்கூடிய பிரான்ஸின் கிளியான் பாப்பே, டிபன்ஸில் வலுவாக இருக்கும் கைல் வாக்கருக்கு கடும் சவால் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

# கத்தார் உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி இதுவரை 4 ஆட்டங்களில் 12 கோல்கள் அடித்துள்ளது. அந்த அணி 2018-ம் ஆண்டு அரை இறுதி வரை முன்னேறியிருந்த போது அதிகபட்சமாக 12 கோல்கள் அடித்திருந்தது.

# ஹாரி கேன், செனகல் அணிக்கு எதிராக கோல் அடித்த போது உலகக் கோப்பைகளில் இங்கிலாந்து அணிக்காக அதிக கோல்கள் (11 கோல்கள்) அடித்த வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். இதுவரை அவர், இங்கிலாந்துக்காக சர்வதேச அரங்கில் 52 கோல்கள் அடித்துள்ளார். இந்த வகை சாதனையில் முதலிடத்தில் உள்ள வெய்ன் ரூனியின் சாதனையை (53 கோல்கள்) சமன் செய்ய ஹாரி கேனுக்கு ஒரு கோல் மட்டுமே தேவையாக உள்ளது.

# முன்களத்தில் அதிவிரைவாக செயல்படக்கூடிய பிரான்ஸின் கிளியான் பாப்பே 4 ஆட்டங்களில் 5 கோல்கள் அடித்துள்ளார். 2018-ம் ஆண்டு ரஷ்ய உலகக் கோப்பையில் அறிமுக வீரராக களமிறங்கிய அவர், 4 கோல்கள் அடித்திருந்தார்.

# 2006-ம் ஆண்டு பிரேசில் அணிக்கு பிறகு நடப்பு சாம்பியனாக கால் இறுதிக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற சாதனையை பிரான்ஸ் படைத்திருந்தது. இந்த வகையில் ஸ்பெயின் 2014-ம் ஆண்டும், ஜெர்மனி 2018-ம் ஆண்டு நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கி லீக் சுற்றுடன் வெளியேறி இருந்தது.

# இங்கிலாந்து – பிரான்ஸ் அணிகள் உலகக் கோப்பையில் இதுவரை இரு முறை மோதி உள்ளன. இதில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்தது. 1966-ம் ஆண்டு உலகக் கோப்பையில் லீக் சுற்றில் பிரான்ஸை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்திருந்தது இங்கிலாந்து. இதன் பின்னர் 1982-ம் ஆண்டு உலகக் கோப்பையில் 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தியிருந்தது இங்கிலாந்து அணி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x