Published : 29 Oct 2022 02:44 PM
Last Updated : 29 Oct 2022 02:44 PM

T20 WC அலசல் | ஜிம்பாப்வேயிடம் தோற்றால் அசிங்கமா? - பாகிஸ்தான் தோல்வியும் சில பல மனப்போக்குகளும்!

பாகிஸ்தான் அணி அன்று ஜிம்பாப்வேயிடம் கடைசி பந்தில் தோல்வி அடைந்து 130 ரன்கள் இலக்கைக் கூட எட்ட முடியாமல் கோட்டைவிட்டது குறித்து போட்டிக்குப் பிறகான ஊடகங்கள் சிலவற்றின் சித்திரம், ஜிம்பாப்வேயிடம் தோற்பது ஏதோ உலகிலேயே பெரிய அசிங்கம் என்றும், பாகிஸ்தான் அசிங்கப்பட்டுவிட்டது என்றும் பாகிஸ்தான் ஊடகங்கள் உட்பட பல ஊடகங்கள் எழுதின. ஜிம்பாப்வேயிடம் தோற்பது என்ன அசிங்கமா என்ற கேள்வி நமக்கு எழுவது இயல்பே.

ஜிம்பாப்வே கிரிக்கெட்டை இந்த நிலைமைக்கு சீரழித்தது ஐசிசியில் உறுப்பினர்களான சில பணக்கார கிரிக்கெட் வாரியங்கள் மீதான ஐசிசியின் சார்பே. அதாவது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிசிசிஐ போன்ற பண பலம் மிகுந்த வாரியங்களின் ஐசிசி மீதான செல்வாக்கினால் ஜிம்பாப்வே கிரிக்கெட் சிறுகச் சிறுக அழிந்தது. இது 50% காரணம் என்றால், அந்நாட்டின் உள்நாட்டு அரசியல் சூழ்நிலைகளும் பெரிய காரணமாகிவிட்டது.

அதாவது, கருப்பரினத்தவர் அதிகம் வாழும் ஆப்பிரிக்க நாடாகும் ஜிம்பாப்வே. அங்கு வெள்ளை இன கிரிக்கெட் வீரர்கள் பலர் வளர்ச்சி பெற்று பிறகு கேப்டன்களாகவும், சிலர் பிற கிரிக்கெட் அணிகளின் பயிற்சியாளர்களாகவும் வளர்ந்திருப்பதற்குக் காரணம், ஜிம்பாப்வேயில் இருந்த கருப்பரின விளிம்பு நிலை வீரர்களின் பங்களிப்பு இன்றி சாத்தியமாகியிருக்காது.

ஜிம்பாப்வேயின் ஆகச் சிறந்த வீரர்களான ஆண்டி பிளவர், கிராண்ட் பிளவர் போன்றோர் மிகப் பெரிய பணக்காரர்கள். ஹெக்டேர் கணக்கில் நிலங்களை குவித்தவர்கள். இதில் ஒரு கிரிக்கெட் மைதானத்தையும் பிட்சையும் அமைத்து, அதில் கருப்பரின வீரர்களை பந்து வீசச் செய்து பயிற்சி பெற்றுதான் ஆண்டி பிளவர், கிராண்ட் பிளவர்களின் கிரிக்கெட் வளர்ந்தது.

1980-களில்தான் ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் புதிய அத்தியாயம் திறந்தது. ஜூலை 21, 1981-ல் தான் ஜிம்பாப்வேயை ஐசிசி தன் அசோசியேட் உறுப்பினராக இணைத்தது. முதன்முதலில் 1983 உலகக் கோப்பை கிரிக்கெட்டில், அதாவது அப்போது இங்கிலாந்தில் நடைபெற்ற புருடன்ஷியல் உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே பங்கேற்றது. இந்திய அணிக்கு பிற்பாடு பயிற்சியாளரான டன்கங் பிளெட்சர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அணியில் கெவின் கரன் என்ற ஆல்ரவுண்டர் கபில்தேவ் தரத்தில் பேசப்பட்டவர் இருந்தார். இவரது மகன்கள்தான் இப்போது இங்கிலாந்து கிரிக்கெட்டை கலக்கி வரும் சாம் கரன், டாம் கரன் ஆகியோர்களாவர்.

இங்கிலாந்தின் ஆகச் சிறந்த வீரர் என்று வர்ணிக்கப்பட்ட கிரகாம் ஹிக் ஜிம்பாப்வே நாட்டுக்காரர்தான். டேவ் ஹட்டன் ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென். 1983 உலகக் கோப்பையில் கிம் ஹியூஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் கெப்லர் வெசல்ஸ், ஆலன் பார்டர், மார்ஷ், ரோட்னி ஹாக், ஜெஃப் லாசன் என்று ஒரு பெரும் படையே இருந்தது. ஆனால் முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியளித்து வென்றது ஜிம்பாப்வே. இந்தியா உலக சாம்பியன் மே.இ.தீவுகளை வெல்ல, ஜிம்பாப்வேவோ ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 1983 உலகக் கோப்பை கிராண்டாகத் தொடங்கியது. அப்போதே கிரிக்கெட் ஜெயண்ட்களின் சரிவின் தொடக்கமாக அமைந்தது.

ஆனால், இதன் பிறகு வெள்ளையினத்தவர்கள் ஜிம்பாப்வேயை விட்டு வெளியேறினர். 1983 முதல் 1992 வரை 3 உலகக் கோப்பைகளில் விளையாடியும் அடுத்த உலகக் கோப்பைகளுக்கு தகுதிச் சுற்றில் ஆடித்தான் வரவேண்டும் என்று ஐசிசி கண்டிஷன் போட்டது. அதாவது, அசோசியேட் அணிகளுடன் ஐசிசி ட்ராபியில் ஆடி தகுதி பெற வேண்டும். ஒவ்வொரு முறையும் முழுதாக முடிந்த அனைத்துப் போட்டிகளிலும் ஜிம்பாப்வே வென்றது. ஆண்டி பைகிராப்ட், டேவ் ஹட்டன் அருமையான ஸ்விங் பவுலர் பீட்டர் ராஸன் போன்றோர் அணியில் நீடித்திருந்தனர். ஜான் ட்ரைகாஸ் என்ற எவர் கிரீன் ஆஃப் ஸ்பின்னர் ஜிம்பாப்வே கிரிக்கெட்டுக்கு அப்போது பெருமை சேர்த்தனர்.

1992-ல் தான் ஜிம்பாப்வே டெஸ்ட் அந்தஸ்து பெறுகிறது. இந்தியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட்டை ஆடியது. தங்கள் சொந்த மண்ணில் நல்ல கிரீன் டாப் பிட்சை போட்டதில் இந்தியா திணறியது. ஜிம்பாப்வே 456 ரன்களை எடுக்க, இந்தியா ஏறக்குறைய ஃபாலோ ஆன் ஆடியிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. கடைசியில் ஆட்டம் ட்ரா ஆனது. தொடக்க டெஸ்ட்டில் தோற்காமல் இந்தியாவை தண்ணிக் குடிக்க வைத்து பெருமை சேர்த்தது ஜிம்பாப்வே. 1994-95-ல் தங்களது 11-வது டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே முதல் வெற்றியைப் பெற்றது. வேடிக்கையாக, இந்த வெற்றியும் பாகிஸ்தானுக்கு எதிராகத்தான். 64 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்றது.

அதன் பிறகு கடினமாக ஆடிய ஜிம்பாப்வே சில வெற்றிகளை தவறவிட்டது. கடைசியில் 1998-99-ல் இந்தியாவுடன் நெருக்கமாக அமைந்த போட்டியில் ஜிம்பாப்வே வென்றது. இதோடு பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரையும் வென்றது ஜிம்பாப்வே. இங்கிலாந்து வாரியம் ஜிம்பாப்வேவுக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தது. ஆனால், அந்த இங்கிலாந்தைத்தான் ஜிம்பாப்வே ஒருநாள் போட்டியில் தோற்கடித்தது. உங்க வீட்டு உதை எங்க வீட்டு உதை அல்ல, இங்கிலாந்தை ஜிம்பாப்வே 3-0 என்று வெற்றி பெற்றது. பிறகு ஷார்ஜாவில் புதிய உலகக் கோப்பை சாம்பியனில் இலங்கையையும், பிறகு இந்தியாவையும் வீழ்த்தி ஒருநாள் தொடரில் இறுதிக்கு முன்னேறியது ஜிம்பாப்வே. இறுதிப் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் காட்டடி சதத்தினால் இந்தியா கோப்பையை வென்றது.

1999 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே அணி இந்தியா,கென்யா அணிகளை வென்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிகவும் நெருக்கமாக வந்து தோற்றது. ஆனால், மிகப்பெரிய வெற்றி உலகக் கோப்பையை வெல்லும் என்று கூறப்பட்ட மிகவலுவான தென் ஆப்பிரிக்கா அணியை ஜிம்பாப்வே இந்த உலகக் கோப்பையில் 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. நீல் ஜான்சன், மர்ரே குட்வின், ஆண்டி பிளவர், கிராண்ட் பிளவர், அலிஸ்டைர் கேம்பல், ஹீத் ஸ்ட்ரீக், ஹென்றி ஒலாங்கா என்று நல்ல பேட்டர்கள், பவுலர்கள் இருக்கவே செய்தனர்.

2003 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே தன் பலத்தை நிரூபிக்க சொந்த மண்ணில் வாய்த்த வாய்ப்பு சர்ச்சைகளினால் நிறைவேறாமல் போனது. இங்கிலாந்து அணி ஜிம்பாப்வே செல்ல மாட்டோம் என்று அறிவித்தது. ஆண்டி பிளவர், ஹென்றி ஒலாங்கோ போன்றோர் கருப்புப் பட்டை அணிந்து எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

ஏப்ரல் 2004-ல் ஹீத் ஸ்ட்ரீக்கை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கும் முடிவு ஜிம்பாவே கிரிக்கெட்டுக்கு பெரிய நெருக்கடியைத் தோற்றுவித்தது. ஜிம்பாப்வேயை டெஸ்ட் தகுதியிலிருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் ஐசிசியில் வலுத்தன. அதன் பிறகு வங்கதேசத்திடம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இழந்து கட்டக் கடைசிக்கு ஜிம்பாப்வே தள்ளப்பட்டது. ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அதன் பிறகு தனக்குத் தானே ஓராண்டு டெஸ்ட் தடை விதித்துக் கொண்டது. மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்தபோது ஜிம்பாப்வே அணி மிகப்பலவீனமான அணியாக மாறியிருந்தது.

பாகிஸ்தான் அணி ஒன்றுதான் ஜிம்பாப்வேவுக்கு பயணம் செய்யும் ஐசிசியின் பயணத்திட்டத்தை மதித்து விளையாடியது. இந்தப் பயணங்களில் பெரிய நிதி ஆதாரம் இல்லையென்றாலும் பாகிஸ்தான், ஜிம்பாப்வேயுடன் தொடர்ந்து ஆடியது. ஒருவிதத்தில் பாகிஸ்தான் வீரர்களின் ரன் எண்ணிக்கை விக்கெட் சாதனைகளை உற்று நோக்கினால் ஜிம்பாப்வேவுடன் அதிக ரன், விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருப்பதைக் காண முடியும். கிரிக்கெட்டிலிருந்து வடிகட்டி வெளியேற்றப்பட்ட ஒரு நாடு உண்டென்றால் அது ஜிம்பாப்வே என்று கூறிவிட முடியும்.

ஐசிசி பொதுக்குழு ஆண்டுக் கூட்டங்களில் ஜிம்பாப்வே பிரதிநிதிகள் ஏதோ ஒரு மூலையில் அமர வைக்கப்பட்டார்கள். யாரும் ஜிம்பாப்வே பிரதிநிதிகளுடன் பேசக்கூட மாட்டார்கள் என்ற செய்திகள் வெளிவந்தன. வாக்களிப்பு சமயங்களில் மட்டும் ஜிம்பாப்வே நினைவு வரும். ஐசிசியின் பெரிய உறுப்பினர்கள் ஜிம்பாப்வேயை ஒதுக்கித் தள்ளினர்.

இங்கிலாந்து கடைசியாக ஜிம்பாப்வேயுடன் ஆடியது, எந்த ஒரு வடிவமாக இருந்தாலும், 2007-ல்தான் ஆடியது. ஆஸ்திரேலியா ஜிம்பாப்வேவுக்கு டெஸ்ட் தொடருக்காக கடைசியாகச் சென்றது 2003-ல். 15 ஆண்டுகள் சென்று ஜிம்பாப்வேயில் டி20 முத்தரப்பு தொடரில் ஆஸ்திரேலியா பங்கேற்றது. இந்தியாவுக்கு ஜிம்பாப்வே கடைசியாக வந்து ஆடியது 2001-ல். இரு அணிகளுக்கும் இடையே கடைசியாக நடந்த டெஸ்ட் போட்டி 2005ல். 2019-ல் ஐசிசி ஜிம்பாப்வே வாரியத்தில் அந்நாட்டு அரசு தலையிடுவதைக் காரணம் காட்டி தடை விதித்தது. இதனால் 2021 டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பையே இழந்தது ஜிம்பாப்வே.
ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள் பலர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் தள்ளப்படும் நிலையில் இருந்தனர், இப்போதும் இருக்கின்றனர். ஏழ்மையின் விரக்தியில் பல கிரிக்கெட் திறமைகள் கூலி வேலைக்குச் செல்லும் நிலைமையில்தான் உள்ளனர். சரியான ஷூக்கள் இல்லை, கிழிந்து போன ஷூக்களுடன் ஆடுகின்றனர். வீரர்களின் சம்பளங்கள் நிலுவையில் உள்ளன. ஐசிசி தடை ஜிம்பாப்வே கிரிக்கெட்டை அழித்து விட்டது. அதிபர் ராபர்ட் முகாபே காலத்தில் பல தடைகளை சந்தித்தது ஜிம்பாப்வே கிரிக்கெட். பெரிய பொருளாதார சீரழிவுகளைச் சந்தித்த நாடு அது.

இப்போது இந்த உலகக் கோப்பையில் ஹோபார்ட்டின் மழை மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அவர்களின் வேகப்பந்து வீச்சாளர்களின் காய ரிஸ்க்கையும் மீறி ஆடப்பணிக்கப்பட்டனர். ஜிம்பாப்வே அணியினர் கடும் கோபமடைந்தனர். ஒரு வீரர் காயத்தினால் பாதியிலேயே வெளியேறியதையும் பார்த்தோம். கடைசியில் புள்ளிகள் பகிரப்பட்டன. ஜிம்பாப்வே பயிற்சியாளர் டேவ் ஹட்டன் மிகவும் கோபமாக கூறியது என்னவெனில், “ஜிம்பாப்வே ஒரு பந்தை கூட வீசியிருக்கக் கூடாது” என்றார்.

இந்தப் பின்னணியில் வைத்துப் பார்த்தால் பாகிஸ்தானுக்கு எதிரான ஜிம்பாப்வே வெற்றி, அந்த அணிக்கும் வீரர்களுக்கும் அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் எவ்வளவு பெரிய விஷயம் என்பது தெரியவரும். ஜிம்பாப்வேயிடம் தோற்பது அசிங்கமல்ல, அந்த அணியை இத்தனை ஆண்டுகளாக வளரவிடாமல் அடித்ததுதான் அசிங்கம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x