Published : 29 Oct 2022 06:34 AM
Last Updated : 29 Oct 2022 06:34 AM

T20 WC | ஜிம்பாப்வேக்கு எதிராக தோல்வி - நெருக்கடியில் பாகிஸ்தான் அணி

சிட்னி: டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் 131 ரன்கள் இலக்கை விரட்டிய பாகிஸ்தான் 129 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. பரபரப்பான கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் பாகிஸ்தான் அணி 9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த ஆட்டத்தின் வெற்றியை மற்ற நாட்டு ரசிகர்கள் சாதாரணமாக பார்த்தாலும், ஜிம்பாப்வே ரசிகர்கள் இதனை கவுரவமாக பார்த்து வருகின்றனர். இதற்கு காரணம் ‘மிஸ்டர் பீன்’ தான் என்றால் நம்ப முடிகிறதா?.

கடந்த 2016-ம் ஆண்டு ஜிம்பாப்வேவின் ஹராரே நகரில் விவசாய கண்காட்சி நடைபெற்றது. இதில் ‘மிஸ்டர் பீன்’ கதாபாத்திரத்தில் நடித்த உலகப் புகழ் பெற்ற பிரிட்டனைச் சேர்ந்த ரோவன் அட்கின்சனை போன்று தோற்றமளித்த பாகிஸ்தானைச் சேர்ந்த நாடக நடிகர் ஆசிப் முகமது சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

மேடைகளில் ‘மிஸ்டர் பீன்’ என ஆசிப் முகமது தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சில வேடிக்கையான நிகழ்வுகளை செய்து ஜிம்பாப்வே மக்களை ரசிக்க வைக்க முயன்றார். ஆனால் இது மக்களை கவரவில்லை. இது எப்படி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குள் வந்தது என நினைக்கலாம்.

பாகிஸ்தான் – ஜிம்பாப்வே அணிகளின் ஆட்டத்துக்கு முந்தைய நாளில் தனது நாட்டு வீரர்களின் பயிற்சி வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ட்விட்டரில் பதிவிட்டது. இதற்கு ஜிம்பாப்வே ரசிகரான குகி சாசுரா என்பவர் வேடிக்கையாக பதில் அளிக்கையில் “ஜிம்பாப்வே மக்களாகிய நாங்கள் உங்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டோம். போலியான பாகிஸ்தான் பீனை எங்களிடம் அனுப்பினீர்கள். இதற்கு இந்த போட்டியின் மூலம் பழிதீர்க்கவுள்ளோம். மழை உங்களை காப்பாற்ற வேண்டும் என வேண்டிக் கொள்ளுங்கள்’‘ என தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. பாகிஸ்தான் ரசிகர்கள் நகைச்சுவையான மீம்ஸ்களை உருவாக்கி பதிவிட்டனர். ஒரு கட்டத்தில் இது வேகமாக வைரலாகி மிஸ்டர் பீன் கதறி அழும் புகைப்படங்கள் டைம்லைனில் வைக்கும் அளவுக்கு சென்றது.

இது ஒருபுறம் இருக்க போட்டி முடிவடைந்தவுடன் ஜிம்பாப்வே அதிபர் எம்மர்சன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், அடுத்த முறை நிஜமான மிஸ்டர் பீனை அனுப்புங்கள். ஜிம்பாப்வேவுக்கு இது மிகவும் சிறப்பான வெற்றி, வீரர்களுக்கு வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

அந்த ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்த பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், “எங்களிடம் நிஜமான மிஸ்டர் பீன் இல்லாமல் இருக்கலாம், ஆனால் நிஜமான கிரிக்கெட் உத்வேகம் இருக்கிறது. விழுந்த வேகத்தில் எழுந்து வரும் தன்மை அதிகம் இருக்கிறது” எனக்கூறி பதிலடி கொடுத்துள்ளார். இது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நெருக்கடியில் பாகிஸ்தான் அணி: டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றில் குரூப் 2-ல் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவிடம் தோல்வியடைந்த நிலையில் நேற்று முன்தினம் ஜிம்பாப்வே அணியிடமும் வீழ்ந்தது. இந்த இரு தோல்விகளால் அந்த அணி அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவது கடினமாகி உள்ளது. பாகிஸ்தான் தனது எஞ்சிய 3 ஆட்டங்களில் நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

இந்த 3 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். அதுவும் மற்ற அணிகளின் முடிவுகளை பொறுத்தே அமையும். குரூப் 2-ல் 2 ஆட்டங்களில் விளையாடி உள்ள இந்திய அணி 4 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் இரண்டில் வெற்றி பெற்றாலே இந்திய அணி அரை இறுதி வாய்ப்பை பெற்றுவிடும். தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் தலா 3 புள்ளிகளுடன் முறையே 2-வது மற்றும் 3-வது இடங்களில் உள்ளன. பாகிஸ்தான் அணி அரை இறுதி வாய்ப்பை பெற வேண்டுமானால் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் தலா இரு ஆட்டங்களில் தோற்க வேண்டும். ஒருவேளை தென் ஆப்பிரிக்க அணியானது இந்தியா, பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தால் ஜிம்பாப்வே அணி அரை இறுதி வாய்ப்பை எட்டிப்பிடிக்க வாய்ப்புள்ளது. அந்த அணி கடைசி இரு ஆட்டங்களிலும் வங்கதேசம், நெதர்லாந்துடன் மோதுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x