Published : 23 Oct 2022 07:49 AM
Last Updated : 23 Oct 2022 07:49 AM

டி 20 உலகக் கோப்பை | மழை மிரட்டலுக்கு இடையே இந்தியா – பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

மெல்பர்ன்: டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

ஐசிசி நடத்தும் தொடர்களில் தோனி தலைமையிலும் அதற்கு முன்னரும் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது இல்லை. இதற்கு கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரில் முடிவு கட்டப்பட்டிருந்தது. இந்தியாவுக்கு எதிராக ஷாகீன் ஷா அப்ரிடியின் மிரட்டலான தொடக்க ஓவர் பந்து வீச்சால் பாகிஸ்தான் அணி முதன்முறையாக வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஷாகீன் ஷா அப்ரிடி 31 ரன்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தி பாகிஸ்தானுக்கு வெற்றியை மட்டும் பெற்றுதரவில்லை. சமகால கிரிக்கெட் உலகின் மிகப் பெரிய பேட்டிங் ஜாம்பவான்கள் சிலரின் ஈகோக்களை நசுக்குவதிலும் வெற்றி பெற்றது. ரோஹித், விராட் கோலி, ராகுல் உள்ளிட்டோர் கடந்த ஆண்டு துபாயில் நடந்ததை (பாகிஸ்தானுக்கு எதிரான தோல்வி) எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடந்த மாதம் நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரில் தொடக்க சுற்றுடன் வெளியேறியது. இதன் பின்னர் தீவிர மதிப்பீடுகளை செய்து ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான இருதரப்பு டி 20 தொடரில் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தியது.

இந்த இரு தொடர்களிலும் பந்து வீச்சில் கணிசமான அளவில் முன்னேற்றம் இருந்தது. இது பந்து வீச்சு துறைக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. பும்ரா இல்லாத நிலையில் மொகமது ஷமி மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அதேவேளையில் இறுதிக்கட்ட ஓவர்களில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷால் படேல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இவர்களுடன் ஹர்திக் பாண்டியாவும் பலம் சேர்க்க ஆயத்தமாக உள்ளார். சுழலில் யுவேந்திர சாஹல், அக்சர்படேல், அஸ்வின் கூட்டணி நெருக்கடி தரக்கூடும். இவர்களில் இருவர் மட்டுமே விளையாடும் லெவனில் இடம் பெற வாய்ப்புள்ளது.

இந்திய அணியானது நட்சத்திரவீரர்கள் நிறைந்த பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. டாப் ஆர்டரில் முதல் 3 இடங்களில் அனுபவம் வாய்ந்த ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி உள்ளனர். சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா ஆகியோர் நடுவரிசையில் தங்களது அதிரடியால் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர்களாக திகழ்கின்றனர்.

பாபர் அஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணி சமீபத்தில் நியூஸிலாந்தில் நடைபெற்ற முத்தரப்பு டி 20 தொடரை வென்ற நிலையில் உலகக் கோப்பை தொடரை சந்திக்கிறது. பேட்டிங்கில் டாப் ஆர்டரில் மொகமது ரிஸ்வான், பாபர் அஸம் ஜோடி அணியின் அச்சாரமாக உள்ளது. அதிலும் இலக்கை துரத்தும் போது இந்த ஜோடி எதிரணியின் பந்து வீச்சை பலமுறை சிதைத்துள்ளது.

ஷான் மசூத், பஹர் ஸமான், ஹைதர் அலி, இப்திகார் அகமது, ஆசிப் அலி ஆகியோரை உள்ளடக்கிய நடுவரிசை பேட்டிங் சற்று அனுபவம் இல்லாதது மட்டுமே பின்னடைவாக கருதப்படுகிறது. இருப்பினும் சுழற்பந்து வீச்சாளர்களான ஷதப் கான், மொகமது நவாஸ் ஆகியோர் பின்கள பேட்டிங்கில் கைகொடுப்பது கூடுதல் பலம் சேர்ப்பதாக உள்ளது.

ஷாகீன் ஷா அப்ரிடி அணிக்கு திரும்பி இருப்பது வேகப்பந்து வீச்சுதுறை மேலும் பலமாக்கி உள்ளது. கடந்த ஆண்டு உலகக் கோப்பையில் முதல் இரு ஓவர்களிலேயே இந்திய அணியை முடக்கிக் போட்டிருந்தார் ஷாகீன் ஷா அப்ரிடி. இம்முறையும் அவரிடம் இருந்து அதே செயல்திறனை அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது. ஷாகீன் ஷா அப்ரிடியுடன் நசீம் ஷா, ஹரிஸ் ரஃவுப், மொகமது ஹஸ்னைன் ஆகியோரும் வேகப்பந்து வீச்சில் மிரட்டக்கூடியவர்கள். இவர்கள் இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு சவால் கொடுக்க ஆயத்தமாக உள்ளனர்.

இதற்கிடையே போட்டி நடைபெறும் மெல்பர்ன் நகரில் இன்று மழை பெய்ய 80 முதல் 90 சதவீத வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

37 வருடங்களுக்குப் பிறகு..

37 வருடம் 6 மாதங்களுக்குப் பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. கடைசியாக கடந்த 1985-ம் ஆண்டு நடைபெற்ற பென்சன் & ஹெட்ஜஸ் உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மெல்பர்ன் மைதானத்தில் மோதியிருந்தன. இதில் இந்தியா வென்று பட்டம் வென்றிருந்தது. தற்போது அதே மைதானத்தில் இரு அணிகள் மோதவுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x