Published : 30 Nov 2016 09:31 AM
Last Updated : 30 Nov 2016 09:31 AM

இந்தியா - இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டி: கேப்டன்களின் குரல்

விராட் கோலி:

சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களிலேயே விளையாடி வெற்றி பெறுகிறீர்கள். இப்படி இருந்தால் சிறந்த ஆடுகளத்தில் விளையாடி எப்படி வெற்றி பெற முடியும் என கடந்த 12 மாதங்களாக என்னிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்கப்பட்டு வந்தன. தற்போதுதான் அந்த கேள்வி ஓய்ந்துள்ளது. சிறந்த கிரிக்கெட்டை விளையாடி ஒரு அணி யாக நாங்கள் வெற்றி பெறுகிறோம். மொகாலி மைதானம் வேகப்பந்து வீச்சுக்கே ஒத்துழைத்தது. சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறனும், உலகில் எந்த அணியையும் வீழ்த்தும் திறமையும் எங்களிடம் உள்ளது.

ஆடுகளத்தில் பந்து அதிகம் சுழல வில்லை. இங்கிலாந்து அணி டாஸ் வென்றதும் அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். இது எங்களுக்கு ஆச்சர்ய மாக இருந்தது. நாங்கள் சிறந்த கிரிக் கெட்டை விளையாடி வருகிறோம். இது எங்களுக்கு மேலும் மேலும் நம்பிக் கையை அளித்து வருகிறது. டாஸில் தோற்ற போதிலும் இங்கிலாந்து அணியை 280 ரன்களுக்குள் ஆட்ட மிழக்க செய்தோம். உண்மையில் டாஸில் தோல்வியடைந்ததுதான் எங்களை மேலும் ஊக்கப்படுத்தியது.

அஸ்வின், ஜடேஜா, ஜெயந்த் யாதவ் ஆகிய 3 பேரும் பின்கள பேட்டிங்கில் அளித்த பங்களிப்பு பெரிய சாதனையாகும். இவர்களது பேட்டிங்தான் இங்கிலாந்து அணிக்கு பின்னடைவை கொடுத்தது. அஸ்வின் ஒரு சாம்பியன், நம்பர் ஒன் ஆல்ரவுண்டராகவும் திகழ்கிறார். ஜடேஜா தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கிறார். ஜெயந்த் யாதவ் அறிமுக டெஸ்ட்டிலேயே ஆட்டத்தில் முதிர்ச்சி நிலையை வெளிப்படுத்தினார். வேகப்பந்து வீச்சில் ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் விரைவாக செயல்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது. கருண் நாயருக்கு இந்த ஆட்டம் மோசமாக அமைந்தது. எனினும் அடுத்த போட்டி அவருக்கு சிறந்ததாக அமையும்.

அலாஸ்டர் குக்:

டாஸில் வெற்றி பெற்றது சிறப்பான அம்சம்தான். ஆனால் 280 ரன்களுக்குள் ஆட்டமிழந்தால் வெற்றி பெற முடியாது. இதுபோன்ற ஆடுகளத்தில் குறைந்தது 400 ரன்களாவது குவிக்க வேண்டும். வெற்றியின் பெருமை இந்திய அணிக்கே சேரும். அவர்கள் எங்களைவிட சிறப்பாக விளையாடினார்கள். ஹசிப் ஹமீது காயம் அடைந்துள்ளதால் தாயகம் திரும்புகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x