Last Updated : 28 Nov, 2016 06:59 PM

 

Published : 28 Nov 2016 06:59 PM
Last Updated : 28 Nov 2016 06:59 PM

நான் ‘ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மென்தான்’ - ரவீந்திர ஜடேஜா பதில்

மொஹாலி டெஸ்ட்டில் இன்று தனது அதிகபட்ச ஸ்கோரான 90 ரன்களை எடுத்த ரவீந்திர ஜடேஜா, நானும் ஒரு ‘ஸ்பெஷலிஸ்ட்’ பேட்ஸ்மென் தான் என்று கூறினார்.

ஜடேஜா அளித்த பேட்டி வருமாறு:

நான் என்னை பேட்ஸ்மெனாகக் கருதிக்கொண்டு ஆடவில்லை, உண்மையில் நான் ஒரு ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மென் தான். நான் முதல் தர கிரிக்கெட்டில் ரன்கள் அடித்து வருகிறேன். எனது சராசரி 53. (உண்மையில் சராசரி 43), நான் முதல் முறையாக 90 ரன்களை எடுக்கவில்லை. ஆம்! டெஸ்ட் போட்டிகளில் முதல் முறையாக இருக்கலாம். ஆனால் என்னால் பேட் செய்ய முடியூம் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன். நான் அவசரப்படவில்லை. பிட்சில் பந்துகள் மெதுவாக வருகின்றன, மெதுவாகவே திரும்புகின்றன. எனவே 50,60 அல்லது 70 பந்துகள் நின்று விட்டால் விரைவில் ரன்களை எடுக்க முடியும் என்று கருதினேன்.

(லார்ட்சில் எடுத்த 68 ரன்களை ஒப்பிடுமாறு கேட்டவுடன்) நாட்டுக்காக எந்த ஒரு நல்ல இன்னிங்ஸ் ஆடுவதும் சிறப்பானதுதான். இந்த இன்னிங்ஸில் கூட நாம் 156/5 என்று இருந்தோம். இங்கிருந்து நல்ல நிலைக்குக் கொண்டு செல்வது ஒரு சவால்தான். ஜெயந்த் யாதவ், அஸ்வின், நான் தொடர்ந்து பேசியபடியே ஆடினோம். இன்னிங்சை கட்டமைக்க முடிவெடுத்தோம் அதிர்ஷ்டவசமாக இந்நிலையில் தற்போது இருக்கிறோம்.

நான் எடுத்த எடுப்பில் தாக்குதல் ஆட்டம் ஆட முடிவெடுக்கவில்லை, இங்கிலாந்து அணியினர் சோர்வூட்டும் லைன்களில் வீசிக் கொண்டிருந்தனர். அதாவது ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசிக் கொண்டிருந்தனர். லெக் திசையில் 2 பீல்டர்கல்தான் அதனால் அடிக்க முடிவெடுத்தேன், அதிர்ஷ்டவசமாக வோக்ஸ் ஓவரில் 4 பவுண்டரிகள் அடித்தேன்.

நான் அவுட் ஆன ஷாட் எனக்கு பிடித்தமான ஷாட். அந்த ஷாட்டில் எப்போது வேண்டுமானாலும் நான் சிக்ஸ் அடிப்பேன். எனக்கு நம்பிக்கை இருந்தது, ஆனால் பந்து சற்றே மெதுவாக வந்தது அதனால்தான் அந்த ஷாட்டில் மட்டையின் தாக்கம் குறைவாகிப்போனது. அந்த ஷாட்டில் அவுட் ஆனதற்காக ஏமாற்றமடையவில்லை.

பின்கள வீர்ர்கள் பங்களிப்பு செய்யும் போது எந்த அணிக்குமே அது கூடுதல் சாதகம்தான். 7-11 வீரர்கள் கூடுதலாக 50-100 ரன்களை எடுக்க முடியும் போது அது போனஸ்தான். நடப்பது அனைத்தும் நல்லதற்கே.

வலைப்பயிற்சியில் கொஞ்சம் கூடுதல் பேட்டிங் பயிற்சி செய்வது, பேட்டிங் பயிற்சியாளரிடம் பேசுவது ஆகியவை கூடுதல் பொறுப்பை அளிக்கிறது. அஸ்வின் ரன்கள் அடித்து வருகிறார், அவர் 500 ரன்களை எடுத்துள்ளார் இந்த ஆண்டில், நானும் அணிக்கு உதவும் விதமாக கூடுதல் ரன்களை எடுக்க விரும்புகிறேன்.

மட்டையை வாள் போல் சுழற்றுவது குறித்து... “அது ரஜபுத்திரர்களின் டிரேட்மார்க் ஸ்டைல், சிறப்பாக எதுவும் இல்லை. மைதானத்திற்கு வாளைக் கொண்டு வர முடியாது அதனால் மட்டையையே வாளாக சுழற்றுகிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x