Published : 28 Aug 2022 01:08 PM
Last Updated : 28 Aug 2022 01:08 PM

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

துபாய் : ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி தனது பரமவைரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

நடப்பு சாம்பியனான இந்தியஅணி கோப்பையை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் களமிறங்குகிறது. டி 20 தரவரிசையில் முதலிடம் வகிக்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சிறந்த பார்மிலும் உள்ளது. இந்திய அணி கடைசியாக விளையாடிய 14 டி 20 ஆட்டங்களில் 8 ஆட்டங்களில் முதலில் பேட் செய்து வெற்றி கண்டுள்ளது. பேட்டிங்கில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த் ஆகியோர் அதிரடியில் பலம் சேர்க்கக் கூடியவர்கள். இவர்களுடன் விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோரும் பார்முக்கு திரும்பினால் பெரிய அளவில் இலக்கை கொடுப்பதும், விரட்டுவதும் சாத்தியமாகும்.

பந்து வீச்சை பொறுத்தவரையில் ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்ஷால் படேல் ஆகியோர் காயம் காரணமாக விளையாடவில்லை. இது சற்று பின்னடைவாக கருதப்படுகிறது. எனினும் புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் பலம் சேர்க்கக்கூடும். ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருக்கக்கூடும் என்பதால் இந்திய அணி கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் களமிறங்க வாய்ப்பு உள்ளது. இந்த வகையில் யுவேந்திர சாஹலுடன், அஸ்வின் அல்லது ரவி பிஷ்னோய்க்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

பாபர் அஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தரவரிசையில் 3-வது இடம் வகிக்கிறது. கணிக்க முடியாத அணி என்று பெயர் எடுத்துள்ள பாகிஸ்தான், பெரிய அளவிலான தொடர்களில் எந்த அணியையும் வீழ்த்தும் திறனை கொண்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது பாகிஸ்தான்.

எனினும் தற்போதைய அணியில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பாபர் அஸம், 3-வது இடத்தில் உள்ள மொகமது ரிஸ்வான் ஆகியோருடன் 3-வது வீரராக களமிறங்கும் பஹர் ஸமான் ஆகியோர் மட்டுமே திடகாத்திரமான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர்களாக இருக்கின்றனர். ஆசிப் அலி, குஷ்தில் ஷா, ஹைதர் அலி ஆகியோர் சிறந்த பேட்ஸ்மேன்களே. ஆனால் சர்வதேச மட்டத்தில் இவர்கள் சமீபகாலமாக குறிப்பிட்டு சொல்லும்படியிலான திறனை வெளிப்படுத்தவில்லை.

முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் ஷா அப்ரிடி காயம் காரணமாக விலகியுள்ளது பாகிஸ்தான் அணிக்கு கடும் பின்னடைவை கொடுக்கக்கூடும். அவர், இல்லாத பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு வீரியம் குறைந்தாகவே இருக்கும் என கருதப்படுகிறது. எனினும் உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணி தனது பேட்டிங் அணுகு முறையில்பெரிய அளவில் மாற்றங்கள் கொண்டுவந்துள்ளது. முதல் பந்தில்இருந்து ஆக்ரோஷமாக விளையாடி தொடர் வெற்றிகளை குவித்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் உலகக் கோப்பை தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.

அணிகள் விவரம்:

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், யுவேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான்.

பாகிஸ்தான்: பாபர் அஸம் (கேப்டன்), ஷதப் கான், ஆசிப் அலி, பஹர் ஸமான், ஹைதர் அலி, ஹரிஸ் ரவுஃப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், நசீம் ஷா, ஷாநவாஸ் தஹானி, உஸ்மான் காதிர், முகமது ஹஸ்னைன், ஹசன் அலி.

ஆசிய கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இதுவரை 13 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 8 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. 2016-ம் ஆண்டு நடைபெற்ற டி 20 வடிவிலான ஆட்டத்திலும் இந்தியா வெற்றியை வசப்படுத்தியிருந்தது. பாகிஸ்தான் 5 முறை (50 ஓவர் போட்டி) வெற்றி கண்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x