Published : 10 Aug 2022 10:10 AM
Last Updated : 10 Aug 2022 10:10 AM

காமன்வெல்த் ஃபென்சிங் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் தமிழகத்தின் பவானிதேவி

காமன்வெல்த் ஃபென்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பவானிதேவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

சீனியர் மகளிர் சேபர் பிரிவு போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைப் பெற்றார் பவானி தேவி.

முன்னதாக கடந்த ஜூலை மாதம் நடந்த சர்வதேச ஃபென்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 12-15 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெர்மனியின் லரிஸா எலிஃபரிடம் தோல்வியடைந்தார். 2019 உலக ஃபென்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் பட்டம் வென்றிருந்தார். ஆனால் கடந்த ஜூலையில் அவர் அந்த வாய்ப்பை நழுவவிட்டார்.

இந்நிலையில் லண்டனில் நடந்த காமன்வெல்த் ஃபென்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பவானிதேவி தங்கம் வென்றுள்ளார். இந்தப் போட்டியில் தேவி 15-10 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவின் வெரோனிகா வாசிலேவாவை வீழ்த்தி பட்டத்தை வென்றுள்ளார்.

காமன்வெல்த் ஃபென்சிங் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 20ல் நடைபெறுகிறது.

கோயில் பூசாரி ஆனந்த சுந்தரராமன், இல்லத்தரசி ரமணி ஆகியோருக்கு மகளாக பிறந்த சடலவாடா ஆனந்த சுந்தரராமன் பவானிதேவி, அனைவராலும் சிஏ பவானிதேவி என அறியப்படுகிறார். தண்டையார்பேட்டை முருக தனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தபோது 10 வயதில் பவானி தேவிக்கு, வாள்வீச்சு விளையாட்டு அறிமுகமாகி உள்ளது. பவானி தேவி வாள்வீச்சை விருப்பப்பட்டு தேர்வு செய்யவில்லை, அதில் அவர் சிக்கிக்கொண்டார். அவர் 6-ம் வகுப்பு படிக்கும்போது ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, வாள்வீச்சு உள்ளிட்ட 6 விளையாட்டுகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டியிருந்தது. பவானி தேவியின் முறை வந்த போது மற்ற விளையாட்டுகளில் ஆறு இடங்களும் நிரப்பப்பட்டு விட்டன. இதனால் வாள்வீச்சை தேர்வு செய்தார் பவானி தேவி.

தொடக்கத்தில் மரத்தினாலான குச்சியை வைத்தே பவானி தேவி பயிற்சி மேற்கொண்டார். எனினும் ஒரு வருடத்திற்குள், 14 வயதிற்குட்பட்ட பிரிவில் தேசிய போட்டியில் தங்கம் வென்றார். தொடர்ந்து திறனை மெருகேற்றுவதற்காக தனது 16 வயதில், வீட்டை விட்டு வெளியேறி, கேரளாவின் தலசேரியில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் மையத்தில் இணைந்தார். அங்கு இந்தியாவின் மிகச்சிறந்த வாள்வீச்சு பயிற்சியாளர்களில் ஒருவரான சாகர் லாகுவின் கீழ் பயிற்சி பெற்றார்.

தற்போது தன்வசம் பல சர்வதேச சாம்பியன்ஷிப் பட்டங்களை வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x