Published : 06 Aug 2022 06:50 AM
Last Updated : 06 Aug 2022 06:50 AM

சாதிக்கும் கர்ப்பிணிகளின் வரிசையில் ஹரிகா துரோணவல்லி

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மகளிர் பிரிவில் இந்திய ஏ அணிக்காக விளையாடி வரும் நிறைமாத கர்ப்பிணியான ஹரிகா துரோணவல்லி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இன்னும் ஒரு சில வாரங்களில் குழந்தை பிறப்பை எதிர்நோக்கியுள்ள நிலையிலும் 31 வயதான ஹரிகா, சொந்த மண்ணில் நடைபெறும் செஸ் போட்டியில் பங்கேற்றுள்ளதன் மூலம் போட்டியின் மீது அவருக்கு உள்ள பற்றையும், ஆர்வத்தையும் அறிய முடியும்.

கிராண்ட் மாஸ்டரான ஹரிகாவுக்கு செஸ் ஒலிம்பியாட்டின் முதல் 2 சுற்றுகளில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது. அடுத்து களமிறங்கிய 4 சுற்றுகளையும் ஹரிகா டிரா செய்திருந்தார். போட்டியின் போது தீவிரமாக செயல்படும் ஹரிகா, ஆட்டம் முடிவடைந்ததும் சக அணி வீராங்கனைகளுடன் ஜாலியாக நேரத்தை செலவிடக்கூடியவர். கர்ப்பிணியாக விளையாடி வருவதன்மூலம் விளையாட்டு உலகில், கர்ப்ப காலங்களில் பங்கேற்று ஜொலித்த நட்சத்திரங்களின் வரிசையில் இணைந்துள்ளார் ஹரிகா.

அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரமான செரீனா வில்லியம்ஸ் 2017-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இந்தத் தொடர் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான், கர்ப்பம் தரித்து 8 வாரங்கள் ஆகிறது என்பதை செரீனா அறிந்தார். எனினும் மருத்துவக்குழுவின் ஆலோசனையுடன் செரீனா போட்டியில் பங்கேற்று வாகை சூடினார்.

2021-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் அமெரிக்காவின் பீச் வாலிபால் வீராங்கனையான கெர்ரி வால்ஷ் ஜென்னிங்ஸ், கர்ப்பமாகி 5 வார காலத்தில் போட்டியில் பங்கேற்ற நிலையில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இதேபோன்று வில்வித்தை வீராங்கனையான ஜார்ஜியாவின் கதுனா லோரிக் 1992-ம் ஆண்டு, 4 மாத கர்ப்பிணியாக பார்சிலோனா ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

2012-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் மலேசியாவைச் சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான நூர்சூர்யான மொகமது தைபி, 8 மாத கர்ப்பிணியாக போட்டியில் பங்கேற்றார். அமெரிக்க ஓட்டப் பந்தய வீராங்கனை அலிசியா மோன்டேனோ, 7 முறை ஒலிம்பிக்கில் பதக்கம்வென்ற அமெரிக்க நீச்சல் வீராங்கனை தானா வோர்மர் உள்ளிட்டோரும் கர்ப்ப காலங்களில் போட்டிகளில் பங்கேற்று வாகை சூடியுள்ளனர்.

ஹரிகா துரோணவல்லி கூறும்போது, “செஸ் ஒலிம்பியாட் போட்டி என்பது 2004-ம் ஆண்டு முதல் நான் விளையாடி வரும் ஒரு மதிப்புமிக்க போட்டியாகும். தற்போது நம் நாட்டில் நடப்பதால் நானும் அதில் ஒரு பகுதியாக இருக்க விரும்பினேன். நான் விளையாடுவதற்கு மருத்துவரும் அனுமதி அளித்தார். இதனாலேயே போட்டியில் பங்கேற்றுள்ளேன். இந்த விஷயத்தில் செரீனா வில்லியம்ஸ்தான் எனக்கு உத்வேகம் அளிக்கக் கூடியவராக திகழ்கிறார். அவரை போன்று பல வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் கர்ப்ப காலங்களில் விளையாடி உள்ளனர். நானும் அதைப்போன்று விளையாடுகிறேன்” என்றார்.

செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க ஹரிகா தனது குடும்பத்தினருடன் வந்துள்ளார். ஹரிகா, நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதை கருத்தில் கொண்டு அவர், தங்கியுள்ள ஓட்டல் வளாகத்தில் எப்போதும் தயார் நிலையில் மருத்துவ வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ் ஒன்றை நிறுத்தி வைக்க நடடிவக்கை எடுத்துள்ளது அகில இந்திய செஸ் சம்மேளளம்.

31 வயதான ஹரிகா துரோணவல்லி ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர். தற்போது அவர், ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.

2,517

2011ம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார். மகளிர் உலக தரவரிசையில் 10வது இடத்தில் உள்ளார். 2,517 இஎல்ஓ ரேட்டிங் புள்ளிகளையும் வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x