Published : 03 Aug 2022 06:34 PM
Last Updated : 03 Aug 2022 06:34 PM

CWG 2022 நெகிழ்ச்சி | பயிற்சிக்காக தவித்த இந்திய லான் பவுல்ஸ் அணிக்கு துணைநின்ற நார்த் லண்டன் கிளப்

மைக்கேல் ஸ்பைரோ மற்றும் இந்திய அணியினர்.

நடப்பு காமன்வெல்த் தொடரில் லான் பவுல்ஸ் விளையாட்டில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்திய அணியின் இந்தச் சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய லான் பவுல்ஸ் அணி இங்கிலாந்தில் பயிற்சி மேற்கொள்ள உதவியுள்ளது லண்டனின் வடக்கு பகுதியில் செயல்பட்டு வரும் பிஷப்வுட் பவுலிங் கிளப். முக்கியமாக இந்த கிளப்பின் நிர்வாகிகள் இந்திய மகளிர் அணி விளையாடிய இறுதிப் போட்டியை நேரில் காணவும் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அது எப்படி என்பதை பார்ப்போம்.

பயிற்சிக்காக தவிப்பு: காமன்வெல்த் போட்டிகள் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கி இந்த மாதம் 8-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டுள்ள இந்திய லான் பவுல்ஸ் அணியினர் போட்டிகள் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே இங்கிலாந்து சென்றுள்ளனர். இருந்தும் அங்கு பயிற்சிக்கான வசதிகள் இல்லாமல் அணியினர் தவித்துள்ளனர்.

“எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அருகாமையில் அமைந்துள்ள லான் பவுல்ஸ் விளையாட்டு கிளப் குறித்து இணையவெளியில் தேடினோம். அதில் எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சில கிளப்புகளை தொடர்பு கொண்டோம். ஆனால் அங்கு பயிற்சி மேற்கொள்வதற்கான கட்டணம் மிகவும் அதிகமாக இருந்தது” என சொல்கிறார் இந்திய வீரர் சுனில் பகதூர்.

உதவி செய்த லண்டன் கிளப்: அப்போதுதான் இந்திய அணிக்கு அந்த அதிசயமும், அற்புதமும் நடந்துள்ளது. பிஷப்வுட் பவுலிங் கிளப்பின் தலைவர் மைக்கேல் ஸ்பைரோ (Michael Spiro) இந்திய அணிக்கு உதவ முன்வந்துள்ளார். அவர் இந்திய அணி பயிற்சி மேற்கொள்ள ஒரு பைசா கூட கட்டணம் வேண்டாம் என சொல்லியுள்ளார்.

“அவர்கள் எங்களிடம் எதுவும் கேட்கவில்லை. பயிற்சிக்கான கட்டணம் கூட வேண்டாமென சொல்லிவிட்டார்கள்” என சொல்கிறார் மற்றொரு இந்திய வீரர் நவ்நீத் சிங்.

இந்திய அணி பயிற்சிக்காக கேட்ட அனைத்தையும் கிளப் நிர்வாகம் வழங்கியுள்ளது. அது குறித்து கிளப்பின் தலைவர் மைக்கேல் ஸ்பைரோ பகிர்ந்துள்ளது. “இந்திய அணி சார்பில் பயிற்சிக்கான அடிப்படை தேவைகள் சில எங்களிடம் கேட்கப்பட்டு இருந்தது. நாங்கள் அவர்களிடம் தெரிவித்தது இது மட்டும்தான். உங்களுக்கு என்ன வேண்டுமென சொல்லுங்கள். நாங்கள் அதனை ஏற்படுத்தி தருகிறோம். கவலை கொள்ள வேண்டாம் என தெரிவித்தோம்” என சொல்லியதாக தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு அந்த கிளப்பில் இந்திய அணியினர் பயிற்சி மேற்கொண்டுள்ளனர். நால்வர் பிரிவில் இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டியில் விளையாடியபோது மைக்கேல் ஸ்பைரோ தனது கிளப் நிர்வாகிகளுடன் களத்திற்கு வந்துள்ளார். இதில் கிளப் அணியின் கேப்டன் மைக்கேல் ஹார்ட், பவுலர்கள் பிராட்லி பெண்டெல் மற்றும் பிராட் ஷூமனும் அடங்குவர். இந்திய அணிக்கு உத்வேகம் கொடுத்துள்ளனர். அதே நேரத்தில் இரண்டாவது பாதியில் இந்திய நாட்டு கொடியை கேட்டுள்ளனர். அதனை கையில் பிடித்து, காற்றை கிழித்து கொடியசைத்து அணிக்கு ஊக்கம் கொடுத்துள்ளனர்.

“முற்றிலும் மாறுபட்ட கலாச்சாரத்தை சேர்ந்த இந்திய அணியினர் எங்கள் கிளப்பில் வந்து பயிற்சி மேற்கொண்டு, பதக்கம் வென்றதில் மகிழ்ச்சி. இந்திய அணியினர் அனைவரும் இனிமையானவர்கள். பிற அணிகளும் எங்கள் கிளப்பில் விளையாட விரும்பின. ஆனால் அவர்கள் எங்களுக்கு சில கண்டீஷன்களை சொல்லி இருந்தனர். ஆனால் இந்திய அணியினர் அப்படி எந்த கண்டீஷனும் போடவில்லை” என சொல்கிறார் ஸ்பைரோ.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 17-10 என தங்கம் வென்றதும் இந்திய அணியின் மேனேஜர் அஞ்சு லூத்ரா, ஸ்பைரோ மற்றும் குழுவினரிடம் சென்று நன்றியை தெரிவித்துள்ளார். அதோடு சிறிய பாக்கெட்டில் இருந்த உலர்ந்த பழங்களை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x