Last Updated : 03 May, 2016 09:14 AM

 

Published : 03 May 2016 09:14 AM
Last Updated : 03 May 2016 09:14 AM

ஐபிஎல் கிரிக்கெட் தொடர்: டெல்லி - குஜராத் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் அணி டெல்லியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் வெற்றி பெற்று முதலிடத்தை தொடர்ந்து தக்கவைக்கும் முயற்சியில் குஜராத் அணி உள்ளது.

இந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறந்த அணியாக குஜராத் விளங்கி வருகிறது. இதுவரை ஆடிய 8 ஆட்டங்களில் 6-ல் வெற்றி பெற்றுள்ள குஜராத் அணி, புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

கடந்த போட்டியில் பஞ்சாப் அணியிடம் அதிர்ச்சித் தோல்வி யடைந்த குஜராத், அதிலிருந்து மீண்டு மறுபடியும் வெற்றிப் பாதைக்கு திரும்பவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

குஜராத்தின் வெற்றிகளுக்கு மிக முக்கிய காரணமாக அதன் பேட்டிங் வரிசை உள்ளது. ஸ்மித், மெக்கல்லம், ரெய்னா, தினேஷ் கார்த்திக், பிராவோ, ஜடேஜா என்று அந்த அணியின் பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது. பந்துவீச்சு மட்டுமே அதற்கு சற்று கவலை தரக்கூடியதாக உள்ளது. பேட்டிங்கைப் போல் பந்துவீச்சிலும் கலக்கும் பிராவோ இந்த தொடரில் இதுவரை 10 விக்கெட்களை எடுத்துள்ளார். ஆனால் மற்ற வீரர்கள் அவருக்கு இணையாக பந்துவீசாதது பெரும் குறையாக உள்ளது. தவல் குல்கர்னி, பிரவீன் குமார், கவுசிக் ஆகியோர் பிராவோவுக்கு ஈடுகொடுத்து பந்துவீசும் பட்சத்தில் குஜராத் அணி மேலும் பிரகாசிக்க வாய்ப்புண்டு.

புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள டெல்லி அணியில் டிகாக், ஜே.பி.டுமினி, சஞ்சு சாம்சன், கருண் நாயர் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக பங்களித்து வருகிறார்கள்.

அவர்களுடன் கிறிஸ் மோரிஸ், பிராத்வெயிட் ஆகியோரும் தற் போது பார்முக்கு திரும்பியுள்ளது டெல்லியை உற்சாகப்படுத்தி யுள்ளது.

வலுவான பேட்டிங் வரிசையுடன் ஜாகிர் கான், முகமது ஷமி, மோரிஸ், பிராத்வெயிட் என்று சிறந்த பந்துவீச்சாளர்களையும் கொண்டிருப்பதால் இன்றைய போட்டியில் குஜராத்துக்கு டெல்லி அணி கடும் சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x