Published : 02 Jul 2022 07:08 AM
Last Updated : 02 Jul 2022 07:08 AM

நீரஜ் சோப்ராவின் புதிய சாதனை முதல் இலங்கை படுதோல்வி - ஸ்போர்ட்ஸ் ஹைலைட்ஸ்

ஸ்டாக்ஹோம்: டைமண்ட் லீக் தொடரில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் புகழ்மிக்க டைமண்ட் லீக் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.94 மீட்டர் தூரம் எறிந்து தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதற்கு முன்னர் அதிகபட்சமாக அவர், 89.30 மீட்டர் தூரம் எறிந்ததே சாதனையாக இருந்தது. இதனை அவர், கடந்த மாதம் 14-ம் தேதி துர்குவில் நடைபெற்ற பேவ் நூர்மி தொடரில் நிகழ்த்தியிருந்தார். டைமண்ட் லீக் தொடரில் கிரெனடா நாட்டின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 90.31 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 89.08 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

சிந்து வெளியேற்றம்

கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து கால் இறுதி சுற்றில் தோல்வியடைந்தார்.

மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 7-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து 21-13, 15-21, 13-21 என்ற செட் கணக்கில் 2-ம் நிலை வீராங்கனையான சீன தைபேவின் தாய் ஸு யிங்கிடம் தோல்வியடைந்தார். ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் ஹெச்எஸ் பிரனாய் 18-21, 16-21 என்ற நேர் செட்டில் இந்தோனோசியாவின் ஜோனாதன் கிறிஸ்டியிடம் தோல்வி கண்டார்.

இலங்கை படுதோல்வி

காலே: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி.

காலே நகரில் நடைபெற்று வந்த இந்த டெஸ்டில் இலங்கை முதல் இன்னிங்ஸில் 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி நேற்று 3-வது நாளில் 70.5 ஓவர்களில் 321 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 77, உஸ்மான் கவாஜா 71, அலெக்ஸ் காரே 45 ரன்கள் எடுத்தனர்.

109 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை 22.5 ஓவர்களில் 113 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் திமுத் கருணாரத்னே 23, பதும் நிஷங்கா 14 ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் டிராவிஸ் ஹெட், நேதன் லயன் ஆகியோர் தலா 4 விக்கெட்களையும், மிட்செல் ஸ்வெப்சன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

5 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 0.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டேவிட் வார்னர் 10 ரன்கள் எடுத்தார். 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி வரும் 8-ம் தேதி தொடங்கவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x