Published : 19 Jun 2022 10:29 PM
Last Updated : 19 Jun 2022 10:29 PM

IND vs SA | மழை காரணமாக ரத்தான 5-வது டி20 போட்டி; கோப்பையை பகிர்ந்து கொண்ட அணிகள்

பெங்களூரு: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதனால் இரு அணிகளும் டி20 தொடருக்கான கோப்பையை பகிர்ந்து கொண்டுள்ளன.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரின் ஐந்தாவது போட்டி பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் கேஷவ் மகராஜ், பவுலிங் தேர்வு செய்தார். அதனால் இந்திய அணி முதலில் பேட் செய்தது. ருதுராஜ் மற்றும் இஷான் கிஷன் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர்.

மழை காரணமாக இந்த போட்டிக்கு இடையூறு இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆட்டம் தொடங்கியது. இந்திய அணி 3.3 ஓவர்கள் பேட் செய்து 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்தது. இஷான் கிஷன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் தங்கள் விக்கெட்டை இழந்திருந்தனர். இந்நிலையில், மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் ரிஷப் பந்த் களத்தில் பேட் செய்து கொண்டிருந்தனர்.

மழை தொடர்ந்த காரணத்தினால் போட்டியை மேற்கொண்டு நடத்துவதற்கான சாத்தியம் இல்லை என சொல்லி போட்டியை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். அதனால் இந்த தொடருக்கான கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளும் 2-2 என்ற நிலையில் ஐந்தாவது டி20 போட்டியில் விளையாடின. இந்திய அணி 0-2 என்ற பின்னடைவுக்கு பிறகு இந்த தொடரில் கம்பேக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

2010-க்கு பிறகு இந்திய மண்ணில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களை தென்னாப்பிரிக்க அணி இழந்ததே இல்லை. இந்த டி20 தொடர் தற்போது சமன் அடைந்துள்ள நிலையில் இந்த சாதனையை தன் வசம் வைத்துள்ளது தென்னாப்பிரிக்க அணி. இந்த தொடரில் இந்திய பவுலர் புவனேஷ்வர் குமார் தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x