Last Updated : 05 May, 2016 02:51 PM

Published : 05 May 2016 02:51 PM
Last Updated : 05 May 2016 02:51 PM

நான் சூப்பர் கேப்டனா? - ஜாகீர் கான் தன்னடக்க மறுப்பு

டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கு ஜாகீர் கான் கேப்டன்சி செய்து வரும் விதம் அவருக்கு ‘சூப்பர் கேப்டன்’ என்ற அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது.

ஆனால் ஜாகீர் கானோ தான் இத்தனை ஆண்டுகளாக டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் செய்ததைத்தான் செய்து வருகிறேன் என்று தன்னடக்கத்துடன் ‘சூப்பர் கேப்டன்’ அங்கீகாரத்தை மறுத்துள்ளார்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு கேப்டன்சி அணுகுமுறையில் மனோபாவத்தில் கபில்தேவை நினைவூட்டி வருகிறார் ஜாகீர் கான். இவர் காயங்களை கொஞ்சம் திறமையுடன் நிர்வகித்திருந்தால் டெஸ்ட் போட்டிகளில் கும்ளேவுக்கு அடுத்தபடியாக ஜாகீர் கான் கேப்டன் பதவி பெற்றிருக்க வேண்டும். ஆனால் காயம் காரணமாக அவரால் சரிவர அணியில் இடம்பெறாத நிலை ஏற்பட்டது, இந்திய அணிக்கு துரதிர்ஷ்டம்தான், இவர் தனது கரியரை கொஞ்சம் அக்கறையுடன் கையாண்டிருந்தால் தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் போட்டி ஒன்றில் புதிய பந்தை எடுக்காமல் மேலும் 60 ஓவர்களை வீசி ஆட்டத்தைக் கோட்டை விட்ட துரதிர்ஷ்டங்கள் உட்பட அயல்நாடுகளில் வரிசையாக வாங்கிய டெஸ்ட் உதைகளும் கூட நடக்காமல் இருந்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

இது குறித்து தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் கூறும் போது, “இத்தனை ஆண்டுகளாக நான் என்ன செய்தேனோ அதைத்தான் இப்போதும் செய்து வருகிறேன். ராகுல் திராவிட் உதவியுடன் திட்டமிடப்பட்ட விஷயங்களை, உத்திகளை கறாராக செயல்படுத்தி வருகிறோம். அடிப்படைகளை முதலில் சரிவர பரமாரிப்பதே எங்கள் கவனம். அடிப்படைகளை சரிவரச் செய்வது என்பது எளிதானதாக ஒலிக்கும் ஆனால் நடைமுறையில் இதனைச் சாதிப்பது கடினம்.

ஆட்டத்தின் போக்கிலேயே சென்று களத்தில் உடனடி முடிவுகளை எடுக்க வேண்டும். இதில் வெற்றி பெற்றால் தலைவராக வெற்றி பெறுவோம். இல்லையெனில் கடினம்தான்.

நான் சூப்பர் கேப்டனா? இல்லை, டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகளில் என்ன செய்தேனோ அதைத்தான் இப்போதும் செய்து வருகிறேன். சில களவியூகம் மரபை மீறியதாக அமைத்தேன். ஆனாலும் ஒரு பவுலர் இந்த கள வியூகத்திற்கு எந்த அளவுக்கு சவுகரியமாக உணர்கிறார் என்பதைப் பொறுத்தே பரிசோதனை முயற்சிகள் வெற்றியடையும். இந்த அணியைப் பொறுத்தவரை திட்டங்களைச் செயல்படுத்தும் விதமான ஒரு பந்து வீச்சு அமைந்துள்ளது எனக்கு அதிர்ஷ்டம்தான்.

என்னைப் போன்றவர்களுக்கு டி20 கிரிக்கெட் வடிவம் சரியாகப் பொருந்தி வருகிறது. கடினமான சூழ்நிலைகளுக்குப் பழகிவிட்டதால் இப்போது சரியாகச் செய்ய முடிகிறது. டி20-யில் ஆட்டத்தின் தீவிரம் மற்ற வடிவங்களைக் காட்டிலும் குறைவு, நான் 4 ஓவர்களை வீசினால் போதும். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நாளொன்றுக்கு 18 ஓவர்களையாவது வீசுவது அவசியம். டி20 இந்த விதத்தில் அவ்வளவு கடினமானதல்லா, ஆனால் பயணம் மிகவும் நெருக்கடியாக உள்ளது.

டி20 கிரிக்கெட்டில் அனைவருமே வரம்புகளை அதிகப்படுத்திக் கொண்டே செல்கின்றனர். எல்லைக் கோட்டருகே காட்டும் பீல்டிங் திறமைகள் உண்மையில் அசத்துகிறது. பேட்ஸ்மென்கள் புதுப்புது ஷாட்களை ஆடுகின்றனர், பவுலர்களும் ஒவ்வொரு பந்துக்கும் ஏதாவது புதிதாகச் செய்ய முடியுமா என்று பார்க்கின்றனர். எனவே இது உற்சாகமாக உள்ளது. என்னைப் பொறுத்தவரையில் என்னுடைய நல்ல பந்துகளை மட்டும் கவனித்து வருகிறேன்.

விக்கெட் வீழ்த்தும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். கடினமான கோணங்களை உருவாக்க வேண்டும். அடிக்க முடியாத லெந்த்களில் பந்து வீச வேண்டும், ரிவர்ஸ் ஸ்விங் முயற்சி தேவை, பேட்ஸ்மெனின் கால் நகர்த்தலை உன்னிப்பாக பார்க்க வேண்டும். புதிய மற்றும் பழைய பந்துகளில் அதிகபட்சமாக சாதகங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஓய்வு ஒழிச்சலில்லாமல் ஒவ்வொரு கணமும் முயன்றுகொண்டே இருக்க வேண்டும். விக்கெட் வீழ்த்தும் மகிழ்ச்சியே ஒரு அனுபவமாகும்.

என்னைப் பொறுத்தவரையில் அணிக்கு சுமையாக நான் இல்லை என்பதே போதும். என்னிடம் இன்னும் கிரிக்கெட் திறன்கள் இருக்கிறது என்ற நிலையில்தான் சர்வதேச கிரிக்கெட்டை துறந்தேன். பிரியாவிடை அளிப்பது மிகவும் கடினம். ஆனால் திரும்பிப் பார்க்கும்போது அதுதான் சிறந்தது என்று தெரிகிறது. ஆனால் என்னிடமுள்ள போர்க்குணத்தைத் தக்க வைத்துள்ளேன்.

இவ்வாறு கூறினார் ஜாகீர் கான்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x