Published : 05 Jun 2022 04:00 AM
Last Updated : 05 Jun 2022 04:00 AM

ஒலிம்பிக் ஹாக்கியில் விளையாடுவதே லட்சியம்: ஆசியப் போட்டியில் பங்கேற்ற கோவில்பட்டி வீரர்கள் உறுதி

ஹாக்கி வீரர்கள் கார்த்திக், மாரீஸ்வரன்.

கோவில்பட்டி

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணிக்காக விளையாடுவதே லட்சியம் என்று ஆசிய ஹாக்கிப் போட்டியில் பங்கேற்று 6 கோல் அடித்த கோவில்பட்டி வீரர்கள் கூறினர்.

இந்தோனேஷியாவில் நடைபெற்ற 11-வது ஆசிய கோப்பைக்கான ஆண்கள்ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இப்போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த வீரர்கள் ச.மாரீஸ்வரன், செ.கார்த்திக் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் இருவரும் நேற்று காலை ரயில் மூலம் கோவில்பட்டிக்கு வந்தனர்.

அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி கழகம், கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வீரர்கள் இருவரையும் நகர்மன்றத் தலைவர் கா.கருணாநிதி, ஒன்றிய திமுக செயலாளர் வீ.முருகேசன் மற்றும் 60-க்கும் மேற்பட்ட ஹாக்கி பயிற்சிமேற்கொள்ளும் சிறுவர்கள் வரவேற்றனர். பின்னர் ரயில் நிலையத்தில் இருந்து செயற்கை புல்வெளி மைதானம் வரைஅவர்களை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து, வேல்ஸ் வித்யாலயா பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. பள்ளித் தாளாளர் எம்.நாகமுத்து தலைமை வகித்து, கார்த்திக், மாரீஸ்வரனுக்கு நினைவுப் பரிசு மற்றும் தங்க காசுகளை வழங்கினார். ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு மூத்த துணைத் தலைவர் ஏ.ஜி.கண்ணன் பாராட்டினார். பள்ளி முதல்வர் பி.மலர்க்கொடி வரவேற்றார். தொடர்ந்து ஹாக்கி வீரர்கள் இருவரும் பள்ளி மாணவ, மாணவிகளுடன் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்றது குறித்து கலந்துரையாடினர். பின்னர் அமைச்சர் பெ.கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

நிகழ்ச்சியில் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி பயிற்சியாளர் என்.முத்துக்குமார், தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி கழக செயலாளர் சி.குருசித்ர சண்முக பாரதி, டி.காளிமுத்து பாண்டியராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கனவு நிறைவேறியது

இதுகுறித்து மாரீஸ்வரன், கார்த்திக் ஆகியோர் கூறும்போது, ‘‘சர்வதேச போட்டியில் பங்கேற்றதன் மூலம் எங்களது நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது. முதல் போட்டி பாகிஸ்தானுடன் நடந்தது. இதில், கார்த்திக் ஒரு கோல் அடித்தார். 2-2 என்ற கோல் கணக்கில் இப்போட்டி டிராவில் முடிய கார்த்திக் அடித்த கோல் முக்கிய காரணம். போட்டியில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டன. இந்தியா 7 அணிகளுடன் மோதி வெண்கலக் கோப்பையை வென்றுள்ளது. கொரியா அணியுடன் மோதிய போது மாரீஸ்வரன் அடித்த கோல் மூலம் தான் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

ஆசிய ஹாக்கி போட்டியில் 6 கோல் (கார்த்திக் 4, மாரீஸ்வரன் 2 கோல்) அடித்துள்ளோம். ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணிக்காக விளையாடுவது தான் எங்களது லட்சியம்’’ என்றனர்.

தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி கழக செயலாளர் கூறும்போது, “25 ஆண்டுகளுக்கு பிறகு கோவில்பட்டியை சேர்ந்த ஹாக்கிவீரர்கள் இந்திய அணி சார்பில் விளையாடியது இந்த மண்ணுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. மாவட்டம் தோறும் ஹாக்கி பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும்.

தற்போது இருக்கும் பயிற்சியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றுகின்றனர். அவர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும். அப்போது தான் ஹாக்கியில் தமிழகம் மேலும் சாதிக்கும்.

மாரீஸ்வரனுக்கு மத்திய கலால் துறையில் வேலை கிடைத்துள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான வேலை வாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும். அப்போது தான் இளம் வயதிலேயே வீரர்கள் ஆர்வத்துடன் ஹாக்கி விளையாட வருவார்கள்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x