Published : 30 May 2022 02:52 PM
Last Updated : 30 May 2022 02:52 PM

“குஜராத் அணியின் ஐபிஎல் வெற்றியை அடுத்த தலைமுறையினரும் பேசுவர்” - ஹர்திக் பாண்டியா

அகமதாபாத்: “குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றி குறித்து அடுத்த தலைமுறையினரும் பேசுவார்கள்” என சாம்பியன் பட்டம் வென்ற பிறகு அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குஜராத் அணி. ஐபிஎல் களத்தில் காலம் காலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் அணிகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளி, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உருவான புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ், அதன் முதல் சீசனிலேயே பட்டம் வென்று அசத்தியுள்ளது. இந்தப் பட்டத்தை சில அணிகள் 15 சீசன்கள் விளையாடியும் வெல்ல முடியாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தங்கள் அணியின் வெற்றி குறித்து இறுதிப் போட்டி முடிந்த பிறகு ஹர்திக் பாண்டியா கூறியது: "நீங்கள் ஒரு குழுவாக இணைந்து, மெய்யான நபர்களை கொண்டு ஒரு அணியை கட்டமைத்தால், இது மாதிரியான அதிசயங்களை நிகழ்த்தலாம். அதற்கு இது ஓர் உதாரணம்.

நாங்கள் சரியான பவுலர்களுடன் விளையாட விரும்பினோம். நான் பார்த்தவரையில் டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் ஆட்டமாக பார்க்கப்பட்டு வருகிறது. பவுலர்களும் நமக்கு ஆட்டத்தில் வெற்றி பெற்றுக் கொடுப்பார்கள். அதை நாங்கள் நம்பினோம். நாங்கள் நிறைய போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளோம். இருந்தாலும் சமயங்களில் நாங்கள் மிஸ் செய்தது குறித்து பேசுவோம். அதை எப்படி சிறப்பானதாக மாற்றுவது என்பது குறித்து பேசுவோம்.

அடுத்து வரப்போகும் தலைமுறையினர் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஐபிஎல் வெற்றி குறித்து பேசுவார்கள். அறிமுக சீசனிலேயே சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது மிகவும் மகிழ்ச்சி" என்று பாண்டியா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x