Last Updated : 18 May, 2022 06:06 AM

 

Published : 18 May 2022 06:06 AM
Last Updated : 18 May 2022 06:06 AM

அர்ஜென்டினா - சர்வதேச ஸ்கேட்டிங் போட்டிக்கு கோவை வீரர்கள் இருவர் தேர்வு

தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் தலைவர் பிரதாப்குமாரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கோவை வீரர்கள் கவுதம் மற்றும் நவீனா.

கோவை: அர்ஜென்டினாவில் நடைபெற வுள்ள சர்வதேச ஸ்கேட்டிங் போட்டிக்கு கோவையைச் சேர்ந்த இரு வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.

ஸ்கேட்டிங் விளையாட்டில் மிகவும் உயர்ந்த போட்டியாக கருதப்படும் சர்வதேச ஸ்கேட்டிங் போட்டி அக்டோபர் மாதம் 24-ம்தேதி முதல் நவம்பர் 13-ம் தேதிவரை அர்ஜென்டினா நாட்டில் நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் இப்போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்களுக்கான தேர்வு ரோலர் ஸ்கேட்டிங் பெடரேஷன் ஆஃப் இந்தியா சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் ‘ஆல்பைன்' பிரிவில் பங்கேற்கும் அணியில் கோவை சேரன் மாநகரைச் சேர்ந்த எஸ்.கவுதம் (17), சாயிபாபா காலனியை சேர்ந்த பி.நவீனா (15) ஆகியோர் தேர்வாகியுள்ளனர். கோவையில் வெவ்வேறு பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் இருவரும் படித்து வருகின்றனர்.

இதுகுறித்து மாணவர்களின் பயிற்சியாளரான கனிஷ்கா தரணிகுமார் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:

அர்ஜென்டினாவில் சான் ஜூவான் மற்றும் பியூனஸ் அயர்ஸ் நகரங்களில் சர்வதேச ஸ்கேட்டிங் போட்டி நடைபெற உள்ளது. இதில், 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஸ்பீடு ஸ்கேட்டிங், ஸ்கேட் போர்டு, ஆர்ட்டிஸ்டிக் ஸ்கேட்டிங், ஆல்பைன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பங்கேற்க உள்ளனர்.

இந்தியா சார்பில் 70-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இதில், ஆல்பைன் பிரிவில் பங்கேற்போருக்கான தேர்வு மொகாலியில் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஸ்கேட்டிங் வீரர்கள் கலந்து கொண்டனர். ஆண்கள் பிரிவில் 2 பேரும், பெண்கள் பிரிவில் 2 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்தத் தேர்வில் இந்தியா சார்பில் பங்கேற்கும் அணியில் ஆண்கள் பிரிவில் எஸ்.கவுதம் என்ற மாணவரும், பெண்கள் பிரிவில் பி.நவீனா என்ற மாணவியும் தமிழ்நாடு சார்பில் தேர்வாகியுள்ளனர்.

கோவையிலிருந்து ஆல்பைன் பிரிவு போட்டிக்கு ஒரே நேரத்தில் 2 ஸ்கேட்டிங் வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளது இதுவே முதல் முறையாகும். இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள வீரர், வீராங்கனை இருவரும் தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் தலைவர் பிரதாப்குமார், பொதுச்செயலாளர் ராமநாதன் மற்றும் மாவட்ட நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

வீரர்கள் இருவருக்கும் சர்வதேச போட்டியில் வெற்றி பெறுவதற்கான பயிற்சி மற்றும் நுணுக்கங்களை அளித்து தற்போது தயார்படுத்தி வருகிறோம். விரைவில் இந்திய அணிக்கான பயிற்சி முகாமில் இருவரும் இணைய உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x