Published : 11 May 2016 05:32 PM
Last Updated : 11 May 2016 05:32 PM

டி20 என்பது வேறொரு விளையாட்டு; கிரிக்கெட்டின் ஒரு பகுதி அல்ல: அஸ்வின் கருத்து

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட்டில் ஸ்பின்னர்கள் அனைவருமே தடுமாறி வருகின்றனர் என்று கூறும் அஸ்வின், டி20 என்பது கிரிக்கெட்டின் ஒரு பகுதி அல்ல என்ற நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்றார்.

ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போ இணையதளத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

ஆஸ்திரேலியா, வங்கதேசத்தில் ஆடிய பிறகே ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடும்போது இந்திய மைதானங்கள் சிறியதாக மாறிவருகின்றன என்பதாக தெரிகிறது. பேட்ஸ்மென்கள் சரியாக ஆடாத, ஒரு கால்பங்கு அளவே நல்ல ஷாட்டாக அமைந்தாலும் பந்து எல்லைக் கோட்டைக் கடந்து செல்லும் என்று நம்பிக்கை பெற்று வருகின்றனர்.

இது ஸ்பின்னர்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. அதாவது ஆக்ரோஷமான வேகம், ஆக்ரோஷமான லைன் மற்றும் லெந்த்களில் வீச பவுலர்களை தயக்கம் கொள்ளச் செய்கிறது.

நடப்பு ஐபிஎல் தொடரில் அமித் மிஸ்ராவிடமிருந்து ஒரு நல்ல ஸ்பெல், அக்சர் படேல் ஒரு நல்ல ஸ்பெல், இதைத் தவிர ஸ்பின்னர்கள் பொதுவாக தடுமாறியே வருகின்றனர். அதாவது ஆட்டத்தின் சூழலை வைத்துப் பார்க்கும்போது தடுமாறவே செய்கின்றனர். நான் உட்பட அங்கு எதுவும் சுலபமல்ல. நான் அதிக ரன்களை கொடுக்காவிட்டாலும், நெருக்கமாக பீல்டிங் அமைத்து பேட்ஸ்மென்களை நெருக்கும் லைன் மற்றும் லெந்த்களில் வீசுவது கொஞ்சம் சவால் நிறைந்ததாகவே இருந்து வருகிறது.

ஆட்டத்தின் வளர்ந்து வரும் போக்குடன் நாங்களும் வளர வேண்டிய நிலை உள்ளது. ஒரு பவுலிங் சமூகமாக நாங்கள் பரிசோதிக்கப்படுகிறோம் என்பதல்ல, ஒரு விளையாட்டு என்று எடுத்துக் கொண்டால் கூட பரிசோதிக்கப்படுகிறோம். பவுலிங், பேட்டிங் இடையே ஒரு சமனிலை இருக்க வேண்டும்.

ஆட்டம் வேறு தளத்துக்கு மாறிக் கொண்டிருக்கிறது. பவர் ஹிட்டிங் என்பதே பிரதானமாக உள்ளது. இது பிரச்சினையல்ல, ஆனாலும் மைதானத்தின் அளவு, பிட்சின் தரம் பற்றி நாம் மறு ஆய்வு செய்தேயாக வேண்டும். இது வெறும் பொழுதுபோக்கு மட்டுமே என்றால் என்ன நடக்கிறதோ நானும் அதனுடன் உடன்படுகிறேன்.

அதாவது முன்பு சிறந்த பந்து என்று கருதப்பட்டது இப்போது சிறந்த பந்தாகக் கருதப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஷார்ட் பிட்ச் பந்து, வைடு பந்து ஏன் எந்த ஒரு மோசமான பந்தும் கூட இப்போது நல்ல பந்து என்பதாக மாறும் சூழலே உள்ளது.

நான் என்ன நினைக்கிறேன் என்றால் நன்றாக வடிவமைக்கப்பட்ட 6 மோசமான பந்துகள்தான் டி20 கிரிக்கெட்டில் இனி முன்னேற வழிவகுக்கும் என்றே நான் கருதுகிறேன். நல்ல பந்து சிக்ஸுக்குப் பறந்தது என்று இப்போதெல்லாம் யாரும் கருதுவதில்லை, வீசினார் பந்து சிக்ஸ் சென்றது அவ்வளவுதான், இது நியாயமற்றதல்ல, இதை நோக்கித்தான் டி20 போய்க்கொண்டிருக்கிறது.

நாம் இப்போதைக்கு பாதுகாப்பாக கூற வேண்டுமென்றால் டி20 கிரிக்கெட் என்பது வேறொரு விளையாட்டு, கிரிக்கெட்டின் ஒரு பகுதியாக அது இல்லை என்று கூறலாம்.

இவ்வாறு கூறினார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x