Published : 11 Apr 2022 02:35 PM
Last Updated : 11 Apr 2022 02:35 PM

IPL 2022 | ரிட்டையர்ட் அவுட் முறையில் வெளியேறிய அஸ்வின் - பேசுபொருளான ராஜஸ்தானின் வியூகம்

மும்பை: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரிட்டையர்ட் அவுட் முறையில் வெளியேறினார் ராஜஸ்தான் வீரர் அஸ்வின். இது அந்த அணியின் வியூகம் என சொல்லப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனின் 20-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் ஆறாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கி 23 பந்துகளில் 28 ரன்களை சேர்த்திருந்தார் ராஜஸ்தான் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். அவர் 19-வது ஓவரில் ரிட்டையர்ட் அவுட் முறையில் வெளியேறினார். அது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

என்ன நடந்தது? - மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீசியது. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 9.5 ஓவர்களில் வெறும் 67 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. நெருக்கடியான அந்தச் சூழலில் களத்திற்கு பேட் செய்ய வந்தார் ஆல்-ரவுண்டர் அஸ்வின்.

மறுமுனையில் பேட் செய்து கொண்டிருந்த ஹெட்மெயருடன் இணைந்து 68 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் அஸ்வின். 19-வது ஓவரின் இரண்டாவது பந்தில் அணியின் ஸ்கோர் 135 ரன்களை எட்டியிருந்தது. அந்தப் பந்தில் ஒரு சிங்கிள் எடுத்துவிட்டு ரிட்டையர்ட் அவுட் முறையில் தானாக வெளியேறினார் அஸ்வின். தொடர்ந்து ரியான் பராக் களத்திற்கு வந்தார். ராஜஸ்தான் அணி கடைசி பத்து பந்துகளில் 30 ரன்களை சேர்த்தது. அந்த ரன்கள்தான் ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்த ஆட்டத்தில் த்ரில் வெற்றி பெற உதவியது என்றும் சொல்லலாம்.

முதல் இன்னிங்ஸ் முடிந்த பிறகு “அஸ்வின் பாதியில் பெவிலியன் திரும்பியது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் அப்போது அவர் மிகவும் களைப்புடன் இருந்தார். ரியான் பராக் ஒரு சிக்சர் அடித்தது வரவேற்கத்தக்கது” என சொல்லியிருந்தார் அஸ்வினுடன் விளையாடிய ஹெட்மெயர்.

“இந்த சீசன் தொடங்குவதற்கு முன்னதாகவே தேவைப்படும் நேரத்தில் இந்த வியூகத்தை பயன்படுத்தலாம் என திட்டமிட்டிருந்தோம். இது அணியின் வியூகம். அஸ்வின் அதை செய்தார்” என ரிட்டையர்ட் அவுட் வியூகம் குறித்து சொல்லியிருக்கிறார் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன்.

இதுகுறித்து கிரிக்கெட் உலகில் பேசு பொருளாகவும் பேசப்பட்டது. ட்விட்டர் தளத்தில் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்திருந்தனர். கிரிக்கெட் வீரர்கள், பார்வையார்கள் என பலரும் தங்களது கருத்தை சொல்லியிருந்தனர். ‘மாடர்ன்-டே’ கிரிக்கெட்டில் வரும் நாட்களில் இது மாதிரியான வியூகங்களை அதிகம் பார்க்கலாம் எனவும் சொல்லப்பட்டுள்ளது. அஸ்வின் புது ட்ரெண்ட் செட் செய்துள்ளார் எனவும் சொல்லப்பட்டுள்ளது. டி20 கிரிக்கெட்டில் இது போல பேட்ஸ்மேன் ரிட்டையர்ட் அவுட் முறையில் வெளியேறுவது இது நான்காவது முறை என தெரிகிறது. இது கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டது எனவும் சொல்லப்பட்டுள்ளது.

கடந்த 2019 சீசனில் பஞ்சாப் அணிக்காக அஷ்வின் விளையாடியபோது ‘மன்கட்’ முறையில் ராஜஸ்தான் வீரர் பட்லரை அவுட் செய்திருந்தார். அப்போது அது பலத்த விவாத பொருளாக எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

— Michael Vaughan (@MichaelVaughan) April 10, 2022

— Gaurav Sundararaman (@gaurav_sundar) April 10, 2022

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x