Published : 04 Apr 2016 07:53 AM
Last Updated : 04 Apr 2016 07:53 AM

டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தை வென்றது மேற்கிந்திய தீவுகள்

டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் அந்த அணி இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

டி 20 உலகக் கோப்பை போட்டியில் கொல்கத்தாவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடன் மேற்கிந்திய தீவுகள் அணி மோதியது. டாஸில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பீல்டிங் செய்யத் தீர்மானித்தது.

இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்யவந்த இங்கிலாந்து அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜேசன் ராய், முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே பத்ரியிடம் போல்ட் ஆகி ஆட்டம் இழந்தார். அடுத்த ஓவரிலேயே ஹேல்ஸ் அவுட் ஆனார்.

அதிரடியான தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க, இங்கிலாந்தின் ரன் வேகம் நொண்டியடித்தது. இந்த நேரம் பார்த்து மோர்கனும் (5 ரன்கள் ஆட்டம் இழக்க, அந்த அணி மேலும் தடுமாறியது. இந்த இக்கட்டான நிலையில் இருந்து அணியை மீட்கும் முயற்சியில் ஜோ ரூட்டும், பட்லரும் ஈடுபட்டனர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 61 ரன்களைச் சேர்த்தது.

சரிவில் இருந்து மீண்டு ரன்ரேட்டை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட நேரத்தில் பிரத்வெய்ட்டின் பந்தில் பட்லர் (36 ரன்கள்) அவுட் ஆனார்.

இதைத்தொடர்ந்து ஸ்டோக்ஸ் (13 ரன்கள்), மொயின் அலி (0), ரூட் (54 ரன்கள்) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற இங்கிலாந்து மீண்டும் தடுமாறியது. இந்நிலையில் கடைசி நிலை பேட்ஸ்மேன்களான டேவிட் வில்லி (24 ரன்கள்), ஜோர்டான் (12 ரன்கள்) ஆகியோர் குருவி சேர்ப்பது போல் ரன்களைச் சேர்த்து இங்கிலாந்தை கரை சேர்த்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை எடுத்தது.

வெற்றி பெற 156 ரன்களை எடுக்கவேண்டும் என்ற நிலையில் ஆடவந்த மேற்கிந்திய தீவுகள் அணி, ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே கெயில், சார்லஸ் ஆகியோரின் விக்கெட்களை இழந்தது. அரைசதம் எடுத்து இங்கிலாந்து அணியை கரைசேர்த்த ஜோ ரூட் இந்த 2 விக்கெட்களையும் வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வித்தை காட்டிய சிம்மன்ஸ் (0) வில்லியின் பந்தில் அவுட் ஆக மேற்கிந்திய தீவுகள் அணி தள்ளாடத் தொடங்கியது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் கையில் இருந்து ஆட்டம் நழுவிக்கொண்டிருந்த நேரத்தில் அதை மாற்றும் முயற்சியில் சாமுவேல்சும், பிராவோவும் ஈடுபட்டனர். 4-வது விக்கெட் ஜோடியாக 75 ரன்களைக் குவித்த அவர்கள் ஆட்டத்தை மீண்டும் சமநிலைக்கு எடுத்துச் சென்றனர். அணியின் ஸ்கோர் 86-க இருந்த போது ரஷீதின் பந்தில் பிராவோ (25 ரன்கள்) அவுட் ஆனார்.

மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற 6 ஓவர்களில் 70 ரன்களை எடுக்கவேண்டும் என்ற நிலையில் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இந்த கட்டத்தில் துடிப்பாக செயல்பட்ட இங்கிலாந்து அணி, ரஸல் (1 ரன்), சமி (2 ரன்) ஆகி யோரைக் கைப்பற்றியது. அணி யை மீட்க சாமுவேல்ஸ் (85 ரன்கள்) தன்னந்தனியாக போராடி வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றார்.

கடைசி ஓவரில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிபெற 19 ரன்கள் தேவைப்பட்டன. இந்நிலையில் முதல் நான்கு பந்துகளையும் சிக்ஸருக்கு விளாசிய பிராத்வைட் மேற்கிந்திய தீவுகள் அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றபெற வைத்தார். மேற்கிந்திய தீவுகள் அணி டி 20 உலகக் கோப்பையை வெல்வது இது இரண்டாவது முறையாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x