Published : 14 Apr 2016 10:14 AM
Last Updated : 14 Apr 2016 10:14 AM

மகாராஷ்டிராவில் ஏப்ரல் 30-ம் தேதிக்கு பிறகு ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஏப்ரல் 30-ம் தேதிக்கு பிறகு மகாராஷ்டிரா மாநிலத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது. மே மாதம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள போட்டி களை வேறு மாநிலத்துக்கு மாற்றவேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் கடும் வறட்சி நிலவி வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக ஏராளமான நீர் வீணாக்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வறட்சி காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை மகாராஷ்டிராவில் நடத்தக் கூடாது என்று கூறி ‘லோக்சத்தா இயக்கம்’ என்ற பொதுநல அமைப்பு மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தது. மகாராஷ்டிர மாநிலம் வறட்சியின் பிடியில் இருக்கும்போது ஐபிஎல் போட்டியை நடத்தும் மைதானங்களுக்காக 60 லட்சம் லிட்டர் நீர் செலவிடப்படுவதாக இந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பிசிசிஐயிடம், மும்பை கிரிக்கெட் சங்கத்திடமும் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதற்கு பதிலளித்த பிசிசிஐ, “மும்பை மற்றும் புனே மைதானங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரைத்தான் பயன்படுத்துகிறோம். ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதித்தால் முதல்வர் வறட்சி நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி நிதி வழங்குகிறோம்” என்று அறிவித்தது.

இதைத்தொடர்ந்து நீதிபதி கள் வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

மகாராஷ்டிர மாநிலம் கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கமும், மும்பை கிரிக்கெட் சங்கமும் தாமாக முன்வந்து ஐபிஎல் போட்டிகளை வேறு மாநிலத்துக்கு மாற்றியிருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை வேறு மாநிலங்களுக்கு மாற்ற வேண்டும் என்று பிசிசிஐக்கு உத்தரவிடுவதைத் தவிர வேறு வழி இல்லை. ஏப்ரல் 30-ம் தேதிக்கு பிறகு மும்பை, புனே, நாக்பூர் ஆகிய நகரங்களில் நடப்பதாக உள்ள ஐபிஎல் போட்டிகளை வேறு ஊர்களுக்கு மாற்ற வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா, “மகாராஷ்டிரா மாநிலத்தில் நடப்பதாக இருந்த 19 போட்டிகளில் 13 போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்றுமாறு உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இது மிகவும் கடினமான வேலை. நீதிமன்றத்தை நாங்கள் மதிக்கிறோம். நீதிமன்றத்தின் தீர்ப்பை பரிசீலித்து அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்போம். வறட்சியின்போது கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதாக எங்களை பலரும் குறை கூறுகின்றனர். சர்க்கரை ஆலைகள், கட்டுமானப் பணிகள், கொல்ஃப் மைதானங்கள் ஆகியவற்றுக்கு கூடத்தான் நிறைய நீர் தேவைப்படு கிறது. ஆனால் இதைப்பற்றி யெல்லாம் யாரும் பேசுவதில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x