Published : 26 Mar 2022 05:05 PM
Last Updated : 26 Mar 2022 05:05 PM

IPL 2022 | ஓர் அணியாக சிஎஸ்கே எப்படி? - ஜடேஜா முன் நிற்கும் பிரச்சினைகளும் சவால்களும்

இன்று தொடங்கும் ஐபிஎல் தொடரின் 15-வது சீசனின் முதல் போட்டியே சென்னை சூப்பர் கிங்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என அனல் பறக்கவுள்ளது. கடந்த சீசனில் இரண்டு அணிகளுமே இறுதிப் போட்டியில் மோதியவை என்பது போட்டியின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கின்றன. எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சென்னை அணி எப்படி இருக்கிறது என்பது தொடர்பான சிறிய அலசல் இங்கே.

சென்னை அணியின் கேப்டனாக இருந்த தோனி சில நாட்கள் முன்பு கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். ஜடேஜாவை வழிநடத்துவதோடு, ஒரு வீரராக மட்டுமே இந்த சீசனில் விளையாடவும் உள்ளார். இதனால் முழு எதிர்பார்ப்பும் தோனியைத் தாண்டி ஜடேஜா பக்கம் திரும்பியுள்ளது. அதற்குக் காரணம் அணியில் உள்ள பிரச்சினைகளை எப்படி அவர் கையாளப்போகிறார் என்பதுதான்.

ஒரு முழுமையாக அணியாகத் தெரிந்தாலும் சென்னை பிளேயிங் லெவனை தேர்வு செய்வதில் சில சிக்கல்களை சந்திக்கவுள்ளது. மொயின் அலி, தீபக் சஹார் என சிஎஸ்கேவின் முக்கியத் தூண்கள் இல்லாததனால் ஏற்பட்ட சிக்கல்கள் அவை. பேட்டிங் யூனிட்டை பொறுத்தவரை, கடந்த சீசனில் ஆரஞ்ச் கேப் வாங்கிய ருதுராஜ் ஓப்பனிங் ஸ்லாட்டின் ஒற்றை நம்பிக்கையாக உள்ளார். அவருடன் பார்ட்னர்ஷிப் அமைக்கப்போகும் வீரருக்கான தேடலில் நியூசிலாந்து வீரர் டெவன் கான்வே மட்டுமே ஒரே ஆப்ஷனாக உள்ளார். சிஎஸ்கே வரலாற்றில் ஓப்பனிங்கில் ஓர் வெளிநாட்டு வீரர் + ஓர் இந்திய வீரர் என்ற காம்போவே வெற்றிகரமாக இருந்துள்ளது.

ஸ்டீபன் பிளமிங் தொடங்கி மேத்யூ ஹேடன், மைக் ஹஸ்சி, மெக்கல்லம், ஸ்மித், வாட்சன் கடைசியாக டூப்ளெஸ்சிஸ் வரை ஓப்பனிங் வீரர் விவரங்களை பார்த்தால் அதுதெரியும். இதற்காக மட்டுமல்ல, சிஎஸ்கேவில் இப்போது இருக்கும் வீரர்களில் கான்வேவை தவிர ஓப்பனிங் ஸ்லாட்டில் கெய்க்வாட் உடன் இணைந்து விளையாட தகுதியான ஆள் இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை. இடது கை பேட்ஸ்மேனான கான்வே நியூசிலாந்து அணிக்காக மூன்று ஃபார்மெட் போட்டிகளிலும் திறமையை வெளிப்படுத்திய வீரர். லீக் போட்டியான சூப்பர் ஸ்மாஷ் டி20 தொடரிலும் அவரின் ஆட்டம் பட்டையை கிளப்பியதாலேயே அவரை சிஎஸ்கே நிர்வாகம் வளைத்தது.

எனவே, இவர்கள் இருவருமே ஓப்பனிங்கில் இறங்க அதிக வாய்ப்புள்ளது. அதேநேரம் ஆரம்ப சீசனில் இருந்து மூன்றாவது இடத்தில் ஆடிவந்தவர் சுரேஷ் ரெய்னா. ஆனால், கடந்த சீசனில் அவரின் ஆட்டநிலை பாதிக்கப்பட்டதால் அவருக்குப் பதிலாக மொயின் அலியை களமிறக்கி சோதித்தார் தோனி. அவரின் சோதனை கைகொடுக்கவும் செய்தது. ஆனால் இப்போது சிக்கல் ரெய்னா இல்லை என்பது மட்டுமில்லை. மொயின் அலியும் விசா பிரச்சினையின் காரணமாக அணியில் இணைவது தாமதமாகியுள்ளது. இதனால் சில போட்டிகள் அவர் தவறவிட உள்ளார். அவர் தவறவிடும் போட்டிகளில் சிஎஸ்கே சில பாதிப்புகளை சந்திக்கலாம்.

கடந்த சீசன்களில் ஒப்பனர்கள் ருதுராஜூம் டூப்ளெஸ்சிஸும் விட்டுச் சென்றதை மூன்றாவது இடத்தில் அப்படியே தொடர்ந்த மொயின் அலி, பவுலிங்கில் ஆறாவது ஆப்ஷனாக பல மேட்ச்களில் ஜடேஜாவுடன் சேர்ந்து விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 2020 சீசனில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த சிஎஸ்கே அதன்பிறகான ஐந்து மாதங்களுக்கு பிறகு நடந்த 2021 சீசனில் கோப்பையை கைப்பற்றியது. இந்த மிகப்பெரிய முன்னேற்றத்துக்கு மொயின் அலி என்னும் துருப்புச் சீட்டே காரணம். இதனால்தான் மொயின் அலியை கைவிடாமல் ரீடெயின் செய்தது சிஎஸ்கே. தற்போது அவர் இல்லாததால் மூன்றாவது இடத்துக்கு வேறு ஆப்ஷனே இல்லாமல் ராபின் உத்தப்பா இறக்கப்படலாம்.

கடந்த சீசனில் இறுதிப்போட்டி உட்பட பல போட்டிகளில் உத்தப்பா சிறப்பாகவே செயல்பட்டிருந்தார். இந்த முறையும் அந்த மொமண்டமை அப்படியே கடத்துவார் என நம்பலாம். நான்கு, ஐந்து, ஆறு, ஏழாவது இடங்களில் அம்பதி ராயுடு, தோனி, ஜடேஜா, பிராவோ ஆகியோர் இடம்பெறலாம். அம்பதி ராயுடு சில சீசன்களாகவே நீட்டான பெர்பாமென்ஸ்களை வெளிப்படுத்தி வருகிறார் என்பதால் அவர் இடத்தில் பிரச்சினை இல்லை. இதேபோல் ஜடேஜா உச்சகட்ட ஃபார்மில் இருப்பதுடன் இப்போது அவருக்கு கூடுதலாக கேப்டன் பதவியும் கிடைத்திருப்பதால் பொறுப்பை உணர்ந்து ஆட்டத்தை வெளிப்படுத்தலாம்.

ஒரு ஆல் ரவுண்ட் ஆப்ஷனாக பிராவோ பிளேயிங் லெவனில் இடம்பெறலாம். ஆனால், அவர் எப்படி விளையாட போகிறார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஏனென்றால் அவரின் வயது என்பதை தாண்டி சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற அவர் சமீபத்தில் பங்கேற்ற தொடர்களில் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தப்படவில்லை. மேலும் தீபக் சஹார் இல்லாதது டெத் ஓவர்களில் பிராவோவின் தேவையை அதிகரிக்கிறது. மிட்சேல் சான்ட்னர் ஆல் ரவுண்டர் ஆப்ஷனில் இருக்கிறார் என்றாலும், ஏற்கெனவே ஜடேஜா இடதுகை ஸ்பின்னராக உள்ளார். இதனால் சான்ட்னருக்கு எந்த அளவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதும் தெரியவில்லை. மேலும், தென்னாபிரிக்க ஆல் ரவுண்டர் ப்ரெட்டோரியஸ் இந்த ரேஸில் உள்ளார்.

பவுலிங் யூனிட்டை பொறுத்தவரை சிஎஸ்கேவுக்கு மிகப் பெரிய சிக்கல் உள்ளது. பவுலிங்கில் சென்னையைப் பொறுத்த அளவு நட்சத்திர வீரர் தீபக் சஹார் காயம் காரணமாக சில வாரங்கள் விளையாட முடியாத நிலை உருவாகியுள்ளது. அவருக்கு அடுத்தபடியாக அனுபவம் வாய்ந்த வீரர்களாக கிறிஸ் ஜோர்டன் மற்றும் ஆடம் மில்னே ஆகியோர் உள்ளனர். இந்த இருவரில் யாரேனும் ஒருவரை மட்டுமே விளையாட போகிறார்களா அல்லது இருவருமே இடம்பெற வைக்க போகிறார்களா என்பது தெரியவில்லை. ஆனால் இவர்களின் தேவை அதிகமாக உள்ளது. அவர்களுடன் பாஸ்ட் பவுலிங்கில் இந்திய வீரர்களாக கே.எம்.ஆசிஃப், ராஜ்யவர்தன் ஹங்கர்கேக்கர், துஷார் தேஷ்பாண்டே ஆகிய மூவரில் ஒருவர் தேர்வாக வாய்ப்புண்டு. இந்த மூன்று பேருமே அனுபவம் இல்லாதவர்களாக இருப்பதும் பிரச்சனையாக உள்ளது. ஆனால் யாரேனும் ஒருவரை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது.

ஸ்பின் ஆப்ஷனில் ஜடேஜாவுடன் மிஸ்டரி ஸ்பின்னரான இலங்கையைச் சேர்ந்த மஹீஸ் தீக்‌ஷனா ஒருவராக உள்ளார். இவரை அணியில் எடுக்கும் பட்சத்தில் பேட்டிங்கில் ஒருவரை இழக்க நேரிடும். மொயின் அலி, தீபக் சஹார் வரும் வரை முழுமையான பிளேயிங் லெவன் இருப்பதில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. இதனை புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரவீந்திர ஜடேஜா சமாளித்து அணியை வழிநடத்த போகிறார் என்பதுதான் ஒட்டுமொத்த சிஎஸ்கே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இதற்கான விடை இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x