Last Updated : 16 Apr, 2016 10:01 AM

 

Published : 16 Apr 2016 10:01 AM
Last Updated : 16 Apr 2016 10:01 AM

ஐபிஎல் கிரிக்கெட் தொடர்: மும்பை - குஜராத் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் குஜராத் லயன்ஸ் மோதுகிறது.

ஐபிஎல் தொடரில் குஜராத் அணி இதுவரை ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றிபெற்று முதல் இடத்தில் இருக்கிறது. மெக்கல்லம், பிஞ்ச் ஆகிய வலுவான தொடக்க ஆட்டக்காரர்கள் இருப்பதும், ரெய்னா, பிராவோ, தினேஷ் கார்த்திக், ஜடேஜா என்று வலுவான மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை இருப்பதும் குஜராத் அணியின் பலத்தைக் கூட்டுகிறது. இதில் ஜடேஜா சமீப காலமாக பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பந்துவீச்சில் சற்று பலவீனமான அணியாக கருதப்படும் குஜராத், இன்றைய போட்டியில் ஜகதிக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் உமங் சர்மாவை பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

ரோஹித் சர்மா

மும்பை அணியைப் பொறுத்தவரை ஐபிஎல் தொடரில் அந்த அணி பொதுவாக தாமதமாகத்தான் வெற்றிக்கணக்கை தொடங்கும். இந்நிலையில் இம்முறை 2-வது போட்டியிலேயே கொல்கத்தா அணியை வீழ்த்தியது அந்த அணியின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. கொல்கத் தாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடி 84 ரன்களைக் குவித்த ரோஹித் சர்மா, இன்றைய போட்டியிலும் சிறப்பாக ஆடுவார் என்ற எதிர்பார்ப்பில் மும்பை அணி உள்ளது. அவருடன் ஜோஸ் பட்லர், மெக்லினாகன், பார்த்திவ் படேல் ஆகியோர் சிறப்பாக ஆடி வருவதும் அந்த அணிக்கு ஆசுவாசமாக உள்ளது. இவர்களுடன் சேர்த்து ஹர்திக் பாண்டியாவும் சிறப்பாக ஆடத் தொடங்கினால் மும்பை அணியை கட்டுப்படுத்துவது குஜராத்துக்கு சிரமமாக இருக்கும்.

மும்பை - குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்றிரவு 8 மணிக்கு நடக்கிறது.

கொல்கத்தா - ஐதராபாத் மோதல்

ஐதராபாதில் இன்று நடக்கும் மற்றொரு போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்த்து ஆடுகிறது. முதல் போட்டியில் பெங்களூரு அணியிடம் 45 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற ஐதராபாத், தங்கள் சொந்த மண்ணில் வென்றாகவேண்டும் என்ற வெறியுடன் இன்று களம் இறங்குகிறது. டேவிட் வார்னர், ஷிகர் தவண், ஹென்ரிகஸ், வில்லியம்சன், யுவராஜ் சிங் என்று மிகச்சிறந்த பேட்டிங் வரிசையை அந்த அணி பெற்றுள்ளது. இதில் காயம் காரணமாக கடந்த போட்டியில் ஆடாத யுவராஜ் சிங் இன்று ஆடுவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அவர் ஆடும் பட்சத்தில் அது ஐதராபாத் அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும்.

மறுபுறத்தில் காம்பீர், உத்தப்பா, ரஸ்ஸல், மணிஷ் பாண்டே ஆகியோரைக் கொண்டு கொல்கத்தா அணி வலுவாக உள்ளது. அந்த அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான சுனில் நரைன், இன்றைய போட்டியில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொல்கத்தா - ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x