Published : 20 Jun 2014 04:37 PM
Last Updated : 20 Jun 2014 04:37 PM

நீண்ட இடைவேளிக்குப் பிறகு டெஸ்ட் வெற்றியை நோக்கி வெஸ்ட் இண்டீஸ்

போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நியூசீலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு அரிதான வெற்றியை நோக்கி முன்னேறியுள்ளது.

முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து டெய்லர், பென் பந்து வீச்சிற்கு 221 ரன்களுக்குச் சுருண்டது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் தன் முதல் இன்னிங்ஸில் டேரன் பிராவோ (109), பிராத்வைட் (129) ஆகியோரது அபார சதங்களுடன் 460 ரன்கள் குவித்து 239 ரன்கள் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து நேற்று 4ஆம் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 260 ரன்கள் எடுத்துள்ள நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இன்று வெற்றி வாய்ப்பு கை கூடியுள்ளது. நியூசிலாந்து 18 ரன்களே தற்போது முன்னிலை பெற்றுள்ளது 2 விக்கெட்டுகள் கைவசம் உள்ளது.

பி.ஜே.வாட்லிங் 38 ரன்களுடனும், மார்க் கிரெய்க் 29 ரன்களுடனும் நியூசிலாந்தை வெறுப்பேற்றி வருகின்றனர். இருவரும் இணைந்து 27.3 ஓவர்கள் விக்கெட்டை கொடுக்காமல் ஆடி வருகின்றனர்.

டாப் 8 டெஸ்ட் அணிகளுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் சமீபத்தில் வெற்றிக்கு அருகில் வந்ததாகத் தெரியவில்லை. எனவே இந்த அரிய வாய்ப்பை அந்த அணி நழுவ விடாது என்றே நம்பப்படுகிறது.

ஆனாலும் இப்போது பேட் செய்து வரும் இருவரும் ஒரு 100 ரன்களை முன்னிலை பெறச் செய்து விட்டால், வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் சரிவுக்கு பெயர் பெற்றது. எனவே வெஸ்ட் இண்டீஸ் அணியைப் பற்றி ஒன்றும் கூறுவதற்கில்லை.

நேற்று 73/1 என்று துவங்கியது நியூசிலாந்து. வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சில் இந்த திடீர் எழுச்சிக்குக் காரணம் கர்ட்லி ஆம்ப்ரோஸ் இப்போது பந்து வீச்சுப் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

லாதம் 36 ரன்களில் பென்னிடம் ஆட்டமிழக்க கேன் வில்லியம்சன் 3 மணி நேரம் போராடி 52 ரன்களை எடுத்து கிமார் ரோச்சிடம் ஆட்டமிழக்க வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் உற்சாகம் பொங்கியது.

அடுத்தடுத்து நீஷம், டெய்லர், ருதர்போர்டு, சோதி, சவுதீ என்று விக்கெட்டுகள் சரிந்தன. பென், டெய்லர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ரோச் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 212/8 என்ற நிலையிலிருந்து வாட்லிங் மற்றும் மார்க் கிரெய்க் விக்கெட்டுகள் விழாமல் ஆடி வருகின்றனர்.

இன்று 5ஆம் நாள். வெஸ்ட் இண்டீஸ் அரிய டெஸ்ட் வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x