Last Updated : 21 Apr, 2016 04:41 PM

 

Published : 21 Apr 2016 04:41 PM
Last Updated : 21 Apr 2016 04:41 PM

ஷிகர் தவணின் கால் நகர்த்தல் மந்தமாக உள்ளது: கவாஸ்கர்

உலகக்கோப்பை டி20-யிலிருந்தே சரிவர ஆட முடியாமல் ரன் எடுக்கத் தவறி வரும் ஷிகர் தவண் பிரச்சினை என்னவெனில் அவர் 4-5 போட்டிகளில் மோசமாக ஆடிவிடுகிறார் என்பதே என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அவரது மந்தமான கால் நகர்த்தல் உத்தியே அவரது சரிவுக்குக் காரணம் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். தொடர்ச்சியாக அவர் சில போட்டிகளில் ரன் எடுக்காமல் இருப்பதே அவரது தோல்வியை பெரிய அளவுக்கு எடுத்துக்காட்டுவதாக அமைந்து விடுகிறது, இந்த விஷயத்தின் மீது அவர் கவனம் செலுத்துபவராகத் தெரியவில்லை என்கிறார் சுனில் கவாஸ்கர்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் அன்று ஒரு யார்க்கரைச் சமாளிக்க முடியாமல் கீழே விழுந்தார், மற்றொரு யார்க்கரில் பவுல்டு ஆனார். இதெல்லாம் 4 பந்துகளில் நடந்தது.

இதனையடுத்து தனியார் தொலைக்காட்சியில் சுனில் கவாஸ்கர் கூறியதாவது:

அவர் தொடர்ந்து நெருக்கடியில்தான் இருந்து வருகிறார். தவணின் பிரச்சினை என்னவெனில் தோல்வியடைந்தால் தொடர்து 4-5 போட்டிகளில் அவர் பேட்டிங் தோல்வி அடைகிறது. இதனால் ரசிகர்கள் அவர் அடித்த ரன்களை மறந்து விடுகின்றனர்.

அவர் சராசரியாக ஒவ்வொரு மூன்றரை இன்னிங்ஸிலும் நன்றாகவே ஆடியுள்ளார், இது ஏற்றுக் கொள்ளக் கூடியதே, ஆனால் தோல்வி அடைந்தால் தொடர்ச்சியாக 4-5 போட்டிகளில் சரியாக ஆடுவதில்லை.

ஐபிஎல் கிரிக்கெட்டில் நான் பார்த்தவரையில் ஷிகர் தவண் கால்நகர்த்தல் மந்தமாக உள்ளது. அவர் கொஞ்சம் ஸ்கிப்பிங் பயிற்சியில் ஈடுபட்டால் நிச்சயம் அது அவருக்கு உதவிகரமாக அமையும்.

கம்பீர் சிறப்பாக ஆடி வருகிறார், உள்நாட்டு கிரிக்கெட், ஐபிஎல் ஆகிய கிரிக்கெட்டில் பங்கேற்று நன்றாக ஆடி மீண்டும் இந்திய அணிக்கு ஆட முடியும் என்ற நம்பிக்கை இல்லாவிட்டால் இந்த கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதின் பயன்தான் என்ன? கம்பீர் நன்றாக விளையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது.

முன்பு அவருக்கிருந்த கால்நகர்த்தல் பிரச்சினைகளை அவர் சரி செய்து கொண்டுள்ளார் என்று தெரிகிறது, என்று கூறிய கவாஸ்கர் இளம் வீரர் சர்பராஸ் கான் ஆட்டத்தை வெகுவாகப் புகழ்ந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x