Published : 21 Feb 2022 03:34 PM
Last Updated : 21 Feb 2022 03:34 PM

சஹா 'ஓய்வு' உரையாடலில் நடந்தது என்ன? - ராகுல் டிராவிட் விளக்கம்

கொல்கத்தா: 'இந்திய அணிக்காக விருத்திமான் சஹா செய்த சாதனைகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு' என்று இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். தன்னை ஓய்வுபெற வலியுறுத்தியதாக டிராவிட் மீது சஹா குற்றம்சாட்டியதை தொடர்ந்து இந்தக் கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் விருத்திமான் சஹா இலங்கை தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இலங்கை தொடருக்கு மட்டுமல்ல, இனி வரவிருக்கும் எந்த தொடர்களிலும் இந்திய அணிக்கு தான் தேர்வு செய்யப்பட போவதில்லை என்பதை தேர்வுக்குழு தெரிவித்ததாக சஹா தெரிவித்திருந்தார். மேலும், "இலங்கை தொடருக்கு நான் தேர்வாகவில்லை என்பது எனக்கு அதிர்ச்சியை கொடுக்கவில்லை. இது முன்பே எனக்கு தெரியும். இனிமேல் நான் இந்திய அணிக்காக பரிசீலிக்கப்பட மாட்டேன் என ஏற்கெனவே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுவிட்டது. தென்னாப்பிரிக்க தொடரிலேயே என்னை தேர்வு செய்யக் கூடாது என்று தேர்வுக் கமிட்டி எடுத்த முடிவு, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மூலமாக எனக்கு தெரிவிக்கப்பட்டது.

தென்னாபிரிக்க டெஸ்ட் தொடர் முடிந்ததும் டிராவிட் என்னைத் தொடர்புகொண்டு 'இதை உங்களுக்கு எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. அண்மைக் காலமாக, ஒரு சில தேர்வாளர்களும் அணி நிர்வாகமும் புதிய விக்கெட் கீப்பரை முயற்சிப்பது குறித்து பரிசீலித்துவருகிறார்கள்' என்றார். மேலும் இலங்கை தொடருக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்பு குறைவு என்பதை வெளிப்படுத்திய ராகுல் பாய், வேறு எந்த முடிவையும் (ஓய்வு) எடுக்க விரும்பினால், நீங்கள் பரிசீலிக்கலாம்' என ராகுல் பாய் தெரிவித்தார்" என்று பரபரப்பான குற்றச்சாட்டுகளை சஹா அடுக்கியிருந்தார்.

சஹாவின் இந்த வார்த்தைகள் தன்னை புண்படுத்தவில்லை என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய டிராவிட், "எல்லா வீரர்களிடமும் இதுபோன்ற உரையாடல்களை நிகழ்த்தி வருகிறேன். நான் பேசும் விஷயங்களை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வீரர்களுடன் இதுபோன்ற உரையாடல்களைத் தொடருவேன். இதற்காக நான் சொல்வதை எல்லாம் வீரர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நான் விரும்பவில்லை. அதேநேரம் அவர்களுக்கு பிடிக்காது என்பதற்காக திரைமறைவில் எனது உரையாடலை நிகழ்த்தவும் நான் விரும்பவில்லை. ஒவ்வொரு லெவன் அணியை தேர்வு செய்வதற்கு முன்பும் வீரர்களுடன் கலந்துரையாடுவதே எனது பாணி. வீரர்கள் ஏன் அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை என்ற தெளிவும், உண்மையையும் புரியவைக்க வேண்டியது எனது கடமை.

வீரர்கள் வருத்தப்படுவதும் புண்படுவதும் இயற்கையானது. ரிஷப் பந்த் ஏற்கெனவே தன்னை நம்பர் 1 கீப்பராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். இதனால் அவருக்கு அடுத்து ஓர் இளம்வீரரை அணியின் நலனுக்காக கொண்டுவர நினைக்கிறோம். இதைத்தான் அன்று சஹாவிடம் எடுத்துச் சொல்ல முயற்சித்தேன். உண்மையில் சஹாவின் வார்த்தைகள் என்னை புண்படுத்தவில்லை. சொல்லப்போனால், இந்திய அணிக்காக சஹா செய்த சாதனைகள் மற்றும் பங்களிப்பை நினைத்து அவர் மீது எனக்கு மரியாதையே உண்டு. அந்த மரியாதையே அவரின் எதிர்காலத்தை பற்றி என்னைப் பேச வைத்தது. தெளிவும், உண்மையும் அவருக்கு தெரிவிக்கப்பட வேண்டும். அதற்கு அவர் தகுதியானவர் என்பதால் ஊடகங்கள் வாயிலாக தெரியப்படுத்த கூடாது என்று நானே நேரடியாக பேசினேன்" என்று விளக்கம் அளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x