Published : 22 Jan 2022 08:24 PM
Last Updated : 22 Jan 2022 08:24 PM

மார்ச் இறுதியில் இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடக்கும் - ஜெய் ஷா உறுதி

ஐபிஎல் 2022 சீசன் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் மாதம் இந்தியாவில் நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடருக்கான வேலைகள் பிசிசிஐ நிர்வாகத்தால் கவனிக்கப்பட்டு வந்தது. இந்த சீசனில் 10 அணிகள் பங்கேற்கின்றன. புதிதாக அகமதாபாத், லக்னோ என இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் வீரர்களுக்கான மெகா ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் பெங்களூரில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தான் இந்தியாவில் கரோனா மூன்றாம் அலை தீவிரமடைந்துள்ளது. இதனால் ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி இந்தியாவில் நடக்குமா அல்லது கடந்த இரண்டு சீசன்கள் போல் துபாய் போன்று வேறு நாடுகளில் நடத்தப்படுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது.

இந்த கேள்விக்கு தற்போது விடை கொடுத்துள்ளார் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா. அணி உரிமையாளர்கள் மற்றும் ஐபிஎல் நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு பின் பேசிய ஜெய் ஷா, "15வது ஐபிஎல் சீசன் மார்ச் மாதம் கடைசியில் தொடங்கி மே மாதம் இறுதி வரை நடைபெறும் என்பதை உறுதிப்படுத்துவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அணி உரிமையாளர்கள் போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என்று தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர். இந்தியாவில் ஐபிஎல் தொடரை உறுதிசெய்ய கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் நாங்கள் விட்டுக்கொடுக்க விரும்ப மாட்டோம் என்பதை இதன் மூலம் உருதுபடுத்துகிறோம்.

ஐபிஎல்லின் இந்த சீசனில் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் என இரண்டு அணிகள் பங்கேற்கின்றன. அந்த அணிகளை இணைத்து கொண்டு ஐபிஎல் தொடரை நடத்துவதில் பிசிசிஐ ஆர்வமாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் போட்டிகள் நடைபெறுவதை உறுதிப்படுத்தினாலும், சூழ்நிலையை கருத்தில் கொண்டு பிசிசிஐ பிளான் பி ஒன்றையும் தயார் செய்துள்ளதாக ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ஓமிக்ரான் பரவல் காரணமாக சில மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் பட்சத்தில் பிளான் பி செயல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

"பிசிசிஐ கடந்த காலங்களில் வீரர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்துகொண்டது இல்லை. இனியும் செய்யாது. எனவே, கரோனா பரவல் மேலும் தீவிரமடைந்தால் நாங்கள் பிளான் பி-யை செயல்படுத்துவோம்" என்று ஜெய் ஷா விளக்கமளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x