Last Updated : 28 Mar, 2016 02:45 PM

 

Published : 28 Mar 2016 02:45 PM
Last Updated : 28 Mar 2016 02:45 PM

விராட் கோலி தனது ஆக்ரோஷ அணுகுமுறையை கைவிடக்கூடாது: தோனி அறிவுரை

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ‘நம்பமுடியாத’ இன்னிங்ஸை ஆடிய விராட் கோலி, தனது ஆக்ரோஷ அணுகுமுறையை இழந்து விடக்கூடாது என்று இந்திய கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நாக்-அவுட் போட்டியில் கோலி நேற்று 51 பந்துகளில் 82 ரன்களை எடுத்து அணியை தனிநபராக வெற்றிக்கு இட்டுச் சென்றார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 13 போட்டிகளில் 9-ல் வென்று 4-ல் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது.

இந்நிலையில் கோலியின் அபாரமான இந்த விரட்டல் இன்னிங்ஸ் பற்றி கேப்டன் தோனி கூறியதாவது:

இது ஒரு ‘நம்பமுடியாத’ இன்னிங்ஸ். உண்மை என்னவெனில் இந்த பிட்ச் பேட் செய்வதற்கு எளிதாக இல்லை என்பதே. சரியான அளவுக்கு சற்றே அளவு குறைவாக விழும் பந்துகளை ஆடுவதற்கு இந்தப் பிட்ச் கடினமானது. குறிப்பாக ஸ்பின்னர்களின் இத்தகைய லெந்த்தை ஆடுவது கடினம். ஆஸ்திரேலிய அணியில் ஸ்பின் ஆதிக்கம் இல்லை என்பது நமக்கு நல்லதாக அமைந்தது.

யுவராஜ் சிங்குடன் ஆடும்போது யுவராஜ் லேசாக காயமடைந்ததால் இருவரும் ஒன்றரை ரன் வாய்ப்புகளை 2 ரன்களாக மாற்ற முடியவில்லை.

கோலியினுடைய பேட்டிங் அருமையானது. குறிப்பாக எந்த இடத்தில் ரன் இருக்கிறது, பெரிய ஷாட்களை எங்கு ஆடுவது என்ற விதத்தில் அவரது தெரிவு அபாரமானது. ஷாட் தேர்வு மற்றும் அதனை சரியாக அடிப்பது என்பதே பேட்டிங். விராட் கோலி தனது ‘ஸ்ட்ரோக் ப்ளே’-யில் மட்டுமல்ல, ரன்களை விரைவில் ஓடி எடுப்பதிலும் அபாரமானவராகத் திகழ்கிறார். வேகமாக ஓடினால் குறைந்த அளவிலான ரிஸ்க்கை பேட்டிங்கில் எடுத்தால் போதுமானது.

மேலும் அமைதியாக இருந்தால் சரியான முடிவை எடுக்க முடிகிறது. அமைதியாக இருப்பது நல்ல குணம் என்றாலும் கோலி தனது ஆக்ரோஷ அணுகுமுறையையும் கைவிடக்கூடாது என்றே நான் கருதுகிறேன். இதுதான் கோலியிடம் மிகவும் பிரமாதமான ஒன்று, அவர் தனது ஆக்ரோஷ அணுகுமுறையை விட்டுவிடக்கூடாது, அதுதான் அவரது பலம். இப்போதைக்கு அவரது பேட்டிங் அற்புதமாக உள்ளது.

நான் விராட் கோலி போல் கவர், ஸ்கொயர் லெக், தேர்ட் மேன் ஆகிய இடங்களில் பீல்டர் தலைக்கு மேல் அடிப்பவனல்ல. என்னுடைய பகுதி எது என்பது எனக்குத் தெரியும் அப்பகுதிகளில் நான் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்வேன். இதுதான் என்னுடைய பலம். நடு ஓவர்களில் ரன்களை விரைவில் ஓடி எடுக்கவேண்டும். இரண்டு ரன்களை எடுக்கும் போது பீல்டர்களுக்கு நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் எதிரணியினர் பீல்டரை சற்றே முன்னால் கொண்டு வர நேரிடுகிறது, இதனையடுத்து நாம் அவர் தலைக்கு மேல் தூக்கி அடித்து பவுண்டரி அடிக்க முடிகிறது.

கோலி தான் ஓடிய ரன்களுக்காக எனக்குதான் அவர் கடன்பட்டிருக்கிறார் (ஜோக் மூடில் கூறியது). நடு ஓவர்களில் வேகமாக ரன்களை ஓட முடிகிறது என்றால் அவருக்கு அழுத்தம் குறைகிறது. நான் கிரேட் பிளேயர் அல்ல, நான் மரபுவழியை கடைபிடிக்காத ஒரு பேட்ஸ்மென், நடுவில் தட்டி விட்டு ஒன்று இரண்டு என்று எடுக்கக் கூடியவன். எனக்கு வாகான அளவில் விழுந்தால் சிக்ஸ் அடிக்க பார்ப்பேன்.

எல்லா அணியிலும் பீல்டிங்கில் வேகமாக ஓடமுடியாத வீரர்கள் உள்ளனர். சிலர் வேகமாக ஓடி பந்தை தடுத்து விடுவார்கள் ஆனால் வலுவான த்ரோவுக்கான தோள்கள் இல்லாமல் இருப்பார்கள். ஆனால் நம்மிடையே எங்கு வேண்டுமானாலும் பீல்ட் செய்யக் கூடிய வகையில் ஜடேஜா, விராட் கோலி உள்ளனர். ஆனால் எந்த ஒரு அணியிலும் முக்கிய பீல்ட் நிலைகளில் நன்றாக பீல்ட் செய்யும் 5 அல்லது 6 வீரர்கள் இருப்பதில்லை. அத்தகைய பீல்டர்களை நாம் தேர்வு செய்து ஒன்றை இரண்டாக்கினால் அது பவுலர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.

இவ்வாறு கூறினார் தோனி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x