Published : 18 Jun 2014 11:13 AM
Last Updated : 18 Jun 2014 11:13 AM

பிரேசிலுக்கு எதிராக தடுப்புச் சுவராக நின்ற மெக்சிகோ கோல்கீப்பர் கில்லர்மோ ஓச்சா

உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில், மெக்சிகோவின் பாதுகாப்பு அரணைக் கடந்து பிரேசில் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டம் 0-0 என்று டிரா ஆனது.

ஒலிம்பிக் போட்டிகளில் பிரேசிலை வீழ்த்தி தங்கக் கனவை தகர்த்த மெக்சிகோவை வீழ்த்தி, தங்கள் பிரிவில் ஆதிக்கம் செலுத்த விரும்பியது பிரேசில். ஆனால், மெக்சிகோ கோல் கீப்பர் கில்லர்மோ ஓச்சா பிரேசில் அடித்த அனைத்து ஷாட்களையும் தடுத்து உண்மையில் அதிர்ச்சி அளித்தார்.

கில்லர்மோ ஓச்சாதான் இந்தப் போட்டியின் நாயகன் என்றால் மிகையாகாது. நடப்பு உலகக் கோப்பை போட்டியில் இதுவரை இதுபோன்ற கோல் கீப்பிங் நிகழவில்லை. இனிமேலும் நிகழுமா என்பதும் கேள்விக்குறியே.

நெய்மாரின் அற்புதமான ஷாட்...

முதலில் நெய்மார் அடித்த அதி அற்புதமான தலையால் அடிக்கப்பட்ட ஷாட்டை நம்ப முடியாத அளவுக்கு தன் நிலையிலிருந்து வலது புறம் பாய்ந்து ஒரு கையினால் தட்டி விட்டார். உண்மையில் கோல்தான் அது, ஆனால் ஓச்சா இருக்கும்போது அது கோல் இல்லை என்று கூறும் வகையில் அவரது தடுப்பு அமைந்தது.

ஆட்டம் முடியும் தறுவாயில் பிரேசில் வீரர் தியாகோ சில்வா நிச்சயம் கோல்தான் என்ற வகையில் அடித்த ஒரு ஷாட்டை ஓச்சா தடுத்தார். நடுநடுவே பாலின்ஹோ, மீண்டும் நெய்மார், ஜோ, என்று பலரும் அடித்த கோல் முயற்சிகளையும் முறியடித்தார் ஓச்சா.

மெக்சிகோ அணி பிரேசில் வீரர்களை நன்றாகவே கடைந்து எடுத்தனர். ஆனால் கோலுக்கான ஷாட் பெரும்பாலும் நீண்ட தூரத்திலிருந்து அடிக்கப்பட்டது. பிரேசிலின் தடுப்பு அரணைத் தாண்டி செல்ல முடியாது என்று நினைத்து தூரத்திலிருந்து ஷாட்களை அடித்தனர். இதில் ஒன்றிரெண்டு ஷாட்கள் கோலுக்குள் சென்றுவிடும் உயரத்தில் சென்றது அதில் ஒரு ஷாட்டை பிரேசில் கோல் கீப்பர் ஜூலியோ சீசர் கையால் மேலே தட்டி விட்டு காப்பாற்றினார்.

எழுச்சியும் வேதனையும்...

பிரேசில் அணியில் மார்செலோ கொடுக்கும் அதி துல்லியமான, புத்திசாலித் தனமான பாஸ்களை ஒருவர் சரியாகக் கொண்டு சென்றாலே போதும், ஆனால் பிரேசிலிடம் ஆக்ரோஷம் குறைவாக இருந்ததோடு, கற்பனை வறட்சியும் காணப்பட்டது.

நட்சத்திர வீரர் நெய்மார் அவ்வப்போது சில அபாரமான மூவ்களைச் செய்தார், கோல்தான் அடிக்க முடியவில்லை. ரசிகர்கள் அப்போதெல்லாம் எழுச்சி கண்டனர். ஆனால் ஒவ்வொரு முறையும் பிரேசிலின் முயற்சி மெக்சிகோ கோல்கீப்பர் ஓச்சாவினால் முறியடிக்கபடும் போது பிரேசில் ரசிகர்கள் கண்களில் வேதனை பளிச்சிட்டது.

முதல் போட்டியில் வேகம் காட்டிய ஆஸ்கார், ராமிரேஸ், ஃபிரெட் நேற்று அவ்வளவு உத்வேகம் காட்டவில்லை. ஆனால் டேனி அல்வேஸ் சில தருணங்களில் கடும் ஆக்ரோஷமாக விளையாடினார். ஆனால் அவருக்கு நடுக்களத்திலிருந்து அவ்வளவாக ஆதரவு இல்லை. அதே கதைதான் மார்செலோவுக்கும், சரியான ஆதரவு இல்லை.

மெக்சிகோ அணி தங்களுக்கு கிடைத்த வாய்ப்பையெல்லாம் தூரத்திலிருந்து அடித்து விரயம் செய்தது. மெக்சிகோ அணிக்கு தான் வெற்றி பெறுவதை விட பிரேசில் வெற்றியைத் தடுக்க வேண்டும் என்பதே குறிக்கோளாக இருந்தது. ஏனெனில் நெய்மாரை முன்னேற விடாமல் தடுக்கவே தனியாக 2 பேரை மெக்சிகோ நியமித்தது.

மொத்தம் 12 முறை கோலை நோக்கி பிரேசில் ஷாட்டை அடித்தது. இதில் இலக்கு நோக்கி குறி தவறாமல் அடித்த ஷாட்கள் 7. ஆனால் அனைத்தையும் மெக்சிகோ கோல் கீப்பர் ஓச்சா தடுத்து விட்டார்.

பிரேசிலின் நிலை..?

பந்து தங்கள் கட்டுக்கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் உணர்ச்சிப்பூர்வமாக பரபரப்பு காட்டினார்களே தவிர பிரேசிலிடம் அதை கோலாக மாற்றும் சாதுரியமான உத்திகள் இல்லை என்பதே பிரேசிலின் பெரிய பலவீனமாக இருந்தது.

கோப்பையை வெல்லும் என்று கருதப்படும் அணிக்கு உள்ள 'கில்லர் இன்ஸ்டின்க்ட்' பிரேசிலிடம் இப்போதைக்கு இல்லை என்றே தெரிகிறது.

இதே பாணியில் அது நாக் அவுட் சுற்றில் நெதர்லாந்தையோ, ஜெர்மனியையோ எதிர்கொண்டால் நிச்சயம் வெற்றி வாய்ப்பு குறைவே. பிரிவு ஏ-இல் தற்போது பிரேசில், மெக்சிகோ அணிகள் தாலா 4 புள்ளிகள் பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x