Last Updated : 06 Dec, 2021 02:06 PM

 

Published : 06 Dec 2021 02:06 PM
Last Updated : 06 Dec 2021 02:06 PM

தென் ஆப்பிரிக்கத் தொடர் சவால் நிறைந்தது; சாதிப்போம்; வெற்றி பெறுவோம்: விராட் கோலி நம்பிக்கை

தென் ஆப்பிரிக்கத் தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும். அங்கேயும் வெற்றி பெறுவதற்கு முயல்வோம் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

மும்பையில் நடந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. உள்நாட்டில் இந்திய அணி அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி இதுவாகும்.

இந்தப் போட்டியின் வெற்றிக்குப் பின் கேப்டன் கோலி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''நியூஸிலாந்துக்கு எதிராகத் தொடரை வென்றது மகிழ்ச்சிதான். மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியிருக்கிறோம். அனைவரும் சிறப்பாக ஆடினார்கள். பெருமையாக இருக்கிறது. ஒவ்வொரு வீரரும் தாமாக முன்வந்து சிறப்பாக ஆட வேண்டும். பந்துவீச்சாளர்கள் தொடர் முழுவதும் சிறப்பாகச் செயல்பட்டனர். கான்பூரில் கிடைத்திருக்க வேண்டிய வெற்றி, நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களின் சிறந்த ஆட்டத்தால் கிடைக்கவில்லை.

அடுத்து வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை எதிர்பார்த்திருக்கிறோம். தென் ஆப்பிரிக்க ஆடுகளங்களில் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும், வேகமாக வரும். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ற ஆடுகளமாக அங்கு இருக்கும். கடைசி நாளில்கூட ஆட்டம் யார் பக்கம் வேண்டுமானாலும் திரும்பும் வகையில் மைதானம் இருக்கும்.

இந்திய அணியை அந்தச் சூழலுக்குத் தயார் செய்ய வேண்டும். புதிய மேலாண்மைக் குழுவுடன் பயணிக்கப் போகிறோம். இந்திய கிரிக்கெட்டின் தரத்தைத் தக்கவைத்திருப்பது அவசியம். எப்போதும் வளர்ச்சியடைவதை உறுதி செய்ய வேண்டும். தென் ஆப்பிரிக்கத் தொடர் நிச்சயம் சவால் நிறைந்ததாக இருக்கும்.

கடந்த முறை தென் ஆப்பிரிக்கத் தொடரிலும், இங்கிலாந்து தொடரிலும் சிறப்பாக ஆடினோம். ஆஸ்திரேலியாவில் அனைவரின் கூட்டுழைப்பும் இருந்தது. இந்த முறை தென் ஆப்பிரிக்கத் தொடர் சவாலாக இருக்கும். வெற்றிக்காக முயல்வோம். சாதிப்போம்''.

இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x