Last Updated : 24 Mar, 2016 07:46 PM

 

Published : 24 Mar 2016 07:46 PM
Last Updated : 24 Mar 2016 07:46 PM

நான் இந்து என்பதால் எனக்கு அநீதி இழைக்கப்பட்டது: பாக். முன்னாள் ஸ்பின்னர் டேனிஷ் கனேரியா குமுறல்

சூதாட்டம் தொடர்பாக பாகிஸ்தான் வாரியத்தினால் ஆயுள் தடை விதிக்கப்பட்ட முன்னாள் லெக் ஸ்பின்னர் டேனிஷ் கனேரியா தான் ஒரு இந்து என்பதால் அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய கிரிக்கெட் வாரியம் தனக்கு உதவ வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இங்கிலாந்து உள்நாட்டு அணியான எஸ்ஸெக்ஸ் அணிக்கு ஆடியபோது இவர் ‘ஸ்பாட் பிக்சிங்’ செய்ததாக புகார் எழுந்து விசாரணையில் இது உறுதியானது, இதனையடுத்து அவர் விளையாட ஆயுள் தடை விதிக்கப்பட்டது.

இது குறித்து மிட் டே பத்திரிகையில் வந்த செய்திகளின் படி அவர் கூறியதாவது:

நான் என்னுடைய கடைசி சேமிப்புகளில் வாழ்க்கையை ஓட்டி வருகிறேன். இப்படியே எவ்வளவு நாட்கள் என்னால் வாழ முடியும் என்று தெரியவில்லை. இளம் இந்திய வீரர்களுக்கு நான் சுழல்பந்துக் கலையைக் கற்றுக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். அவர்கள் என்னை ஏன் அழைக்க முடியாது? நான் அவர்களில் ஒருவன். எனக்கு பாகிஸ்தானில் அனைத்தும் வறண்டு போய்விட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் என் தரப்பு வாதங்களை கேட்க யாருமில்லை. நான் செத்துக் கொண்டிருக்கிறேன்.

மேலும் நான் ஒரு இந்து, பாகிஸ்தானில் நான் ஒரு சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவன். இதனால்தான் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் என் மீது பிக்சிங் குற்றச்சாட்டு சுமத்திய போது நான் ஏற்க மறுத்தேன். என் தரப்பையும் கேட்க வேண்டும், ஆனால் என் தரப்பை கேட்க என்ன கஷ்டமோ?

ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் எனக்கு எதிராக சாட்சியம் எதையும் கண்டுபிடிக்கவில்லை. ஒரு கிரிக்கெட் வீர்ர் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில்தான் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தது. மொகமது ஆமிர் விஷயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடந்து கொண்டதற்கும் என் விஷயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடந்து கொண்டதற்கும் உள்ள வேறுபாட்டை கவனியுங்கள். இது அநீதி இல்லையா?” என்றார்.

ஆனால் ஆமிர் தனது தவறுகளை ஒப்புக் கொண்டார் அதனையடுத்து விஷயங்கள் தானாகவே நடந்தது என்று சுட்டிக்காட்டியதற்கு பதில் அளித்த கனேரியா, “அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டார் அதனால் ஒப்புக் கொண்டார். நான் ஈடுபடவில்லை அதனால் நான் ஒப்புக் கொள்ளவில்லை. நான் ஈடுபடவில்லை... ஈடுபடவில்லை. மெர்வின் வெஸ்ட் பீல்ட் என்பவரை அனு பட்டிற்கு அறிமுகம் செய்ததற்கு எனக்கு தண்டனையா?” என்றார்.

அனு பட் என்பவர் இந்திய தொழிலதிபர், இவர் 2007-ம் ஆண்டு பாகிஸ்தான் வீரர்கள் சிலரை அழைத்து விருந்து அளித்து விலை உயர்ந்த பரிசுகளை வழங்கினார். இதனையடுத்து ஐசிசி ஊழல் தடுப்பு ஆணையம் டேனிஷ் கனேரியாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது. ஆனால் அதன் பிறகு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் வெஸ்ட்பீல்டை அனுபட்டிற்கு அறிமுகம் செய்தார் கனேரியா என்றும் ஸ்பாட் பிக்சிங்குக்கான தொகை கனேரியாவின் காரில் வைத்து அனுபட் கொடுத்தார் என்றும் செய்திகள் வெளியாகின.

கனேரியா மேலும் கூறும்போது, “நான் செய்யாத குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டுள்ளேன். நான் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் மேல்முறையீடு செய்தேன், வெஸ்ட்பீல்ட் இடம் இது குறித்து எதுவும் கேட்கப்படவில்லை. அவர் கொடுத்த வாக்குமூலத்தையே இ.சி.பி. எடுத்துக் கொண்டிருக்கிறது. இது நிறவெறி இல்லையா?

இதனால் என்ன மாதிரியான நிலைக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன் தெரியுமா? நான் பாகிஸ்தான் மைதானங்களுக்குச் செல்ல முடியாது, அங்கு என்னால் பயிற்சியில் ஈடுபடமுடியாது. என்னால் எனது முன்னாள் நண்பர்களைக் கூட சந்திக்க முடியவில்லை. வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது போல் உணர்கிறேன்.

இந்நிலையில் பிசிசிஐ-தான் என்னைக் காப்பாற்ற முடியும். பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர் என் விஷயத்தை அனுதாபத்துடன் அணுக வேண்டும். அவர் பிசிசிஐ தலைவர் ஷஷான்க் மனோகரிடம் கூறி ஐசிசி-யிடம் இது குறித்து பேசச் செய்ய வேண்டும். தடையை நீக்கி, ஒரு மரியாதைக்குரிய விதத்தில் நான் வெளியேற வழிவகை செய்ய வேண்டும்”

இவ்வாறு டேனிஷ் கனேரியா கூறியதாக மிட் டே பத்திரிகை செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x