Published : 23 Oct 2021 17:44 pm

Updated : 23 Oct 2021 17:44 pm

 

Published : 23 Oct 2021 05:44 PM
Last Updated : 23 Oct 2021 05:44 PM

நாளை ‘மதர் ஆஃப் ஆல் பேட்டில்ஸ்’: வரலாற்றைத் தக்கவைக்க துடிக்கும் இந்திய அணி: டி20 உலகக் கோப்பையில் மீ்ண்டும் மோதிப் பார்க்கும் பாகிஸ்தான்

t20-world-cup-india-s-megastars-ready-to-pounce-on-pakistan-s-pretenders-in-the-match
கோப்புப்படம்

துபாய்


கிரிக்கெட் போட்டியில் “மதர் ஆஃப் ஆல் பேட்டில்ஸ்” என்றாலே அது இந்தியா-பாகிஸ்தான் போட்டியைத் தவிர வேறு எதையும் குறிப்பிட முடியாது. அந்த வகையில், டி20 உலகக் கோப்பைப் போட்டியில் குரூப் பி பிரிவில் சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்கொள்கிறது பாகிஸ்தான்.

வரலாறு முக்கியம் அமைச்சரே! என நடிகர் வடிவேலு திரைப்படத்தில் நகைச்சுவையாகப் பேசுவார். அந்த வசனம் இந்த இரு அணிகளின் ஆட்டத்துக்கு சரியாகப் பொருந்தும்.

இதுவரை 2007ம் ஆண்டு முதல் 5 முறை டி20 உலகக்கோப்பைப் போட்டியில் மோதியும் இந்திய அணியை ஒருமுறை பாகிஸ்தான்வென்றதில்லை.

அது சரிபோகட்டும், 50 ஓவர்கள் உலகக் கோப்பை வரலாற்றை புரட்டிப் பார்த்தால் அதிலும் ஒருபோட்டியில் கூட பாகிஸ்தானால் இந்திய அணியை வெல்ல முடியவில்லை. இப்படி வரலாறு அனைத்தும் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் நிலையில் நாளை வராலாற்றை திருத்தி எழுதும் முயற்சியில் பாகிஸ்தான் பாபர் ஆஸம் தலைமையில் களம்காண்கிறது.

இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், கடந்த 2007ம் ஆண்டிலிருந்து டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானை வென்றது அனைத்தும் எம்எஸ். தோனி தலைமையில்தான் இந்திய அணி வென்றுள்ளது. அதனால்தான் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு தோனி ஆலோசகராக அணிக்குள் சேர்்க்கப்பட்டுள்ளார்.

ஆனால், டி20 போட்டியைப் பொறுத்தவரை கடைசிப் பந்து வீசப்படும்வரை எதுவும் நிச்சயம் இல்லை. எந்த ஓவரிலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றுநிலைதான். பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் இரு அணிகளும் சமவலிமை வாய்ந்தவை. இதில் பீல்டிங்கில் பாகிஸ்தானைவிட இந்திய வீரர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்பது நாளைய போட்டியி்ல் தெரியவரும். மற்ற வகையில் பேட்டிங், பந்துவீச்சு இரு அணிகளும் சமவலிமை படைத்தவை.

இரு அணிகளிலும் இளம் வீரர்களுக்கு அதிகமாக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியில் அனுபவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஷோயப் மாலிக், முகமது ஹபீஸ் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரும் கடந்த காலங்களில் இந்திய அணிக்கு எதிராக அதிகமான ஆட்டங்களில் ஆடிய அனுபவம் இருப்பதால் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணியைப் பொறுத்தவரை, டாப் ஆர்டரில் ரோஹித் சர்மா, கேஎல்.ராகுல், அதன்பின் ஒன்டவுனில் விராட் கோலி உறுதியாகிவிட்டது. பயிற்சி ஆட்டம், ஐபிஎல் தொடர் அனைத்திலும் ராகுல், ரோஹித் சர்மாவின் ஆட்டம் அற்புதமாக இருந்தது என்பதால், தொடக்கம் பற்றி அச்சமில்லை.

விராட் கோலி ஐபிஎல் தொடரிலிருந்தே ஃபார்மில்லாமல் தவித்து வருவதால் நாளைய ஆட்டத்தில் கோலியின் ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், இதற்குமுன் பாகிஸ்தானுக்கு எதிரான 3 உலகக் கோப்பை மோதல்களிலும் கோலி தனிநபராக இருந்து அணிக்கு வெற்றி தேடித்தந்துள்ளார் ஆதலால், நாளை ஆட்டம் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

நடுவரிைசயில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த் இந்த 4 பேரில் 3 பேர் யார் என்பது நாளை கடைசி நேரத்தில்தான்முடிவாகும். பெரும்பாலும் சூர்யகுமார், இஷான் கிஷன், பாண்டியா இடம் பெறவே வாய்ப்புள்ளது.

மேலும் பாகி்ஸ்தான் அணியில் 4 இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், ஆஃப் ஸ்பின்னர் தேவை என்பதால் அஸ்வின் அணியில் நிச்சயம் சேர்க்கப்படுவார். ஜடேஜாவுக்கு வழக்கம் போல் இடமுண்டு.
வேகப்பந்துவீச்சில் பும்ரா, ஷமி தவிர, ஷர்துல் தாக்கூர் இடம் பெறலாம் அல்லது வருண் சக்ரவர்த்திக்கு இடமுண்டு. புவனேஷ்வர் குமார் அனுபவம் வாய்ந்தவர் என்றாலும் கடைசிநிலைவரை பேட்ஸ்மேன் தேவை என்பதால், தாக்கூருக்கு வாய்ப்புக் கிைடக்கலாம். இதில் ஹர்திக் பாண்டியா 2 ஓவர்கள் வரை பந்துவீசினால் இந்திய அணி கூடுதல் பேட்ஸ்மேனை எடுக்க வாய்ப்புள்ளது. ஆனால், அதற்கான வாய்ப்பில்லாமல் ஹர்திக் தொடர்கிறார்.

இந்திய அணியைப் பொறுத்தவரை ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்து ப்ளேயிங் லெவன் முடிவாகும்.
பாகிஸ்தான் அணியில் இளம் பந்துவீச்சாளர் அப்ரிதி, ஹசன் அலி இருவரும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் அச்சுறுத்தலாக இருப்பார்கள். அதிலும் ஷாகின் அப்ரிதி புதிய பந்தில் பந்துவீசும்போது, தொடக்க வீரர்கள் ராகுல், ரோஹித் இருவரும் ஆஃப் தசையில் விலகிச் செல்லும் பந்தை தொட்டு ஆட்டமிழக்காமல் ஆடுவது முக்கியம்.

இருவருக்கும் அரவுண்ட் ஸ்டிக்கில் இருந்து இடதுகை பந்துவீச்சாளர்கள் பந்துவீசும் போது, பலவீனமான பகுதி என்பதால், இருவரையும் ஆட்டமிழக்கச் செய்ய அந்த உத்தியை பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் கையாள்வார்கள்.

இது தவிர ரவுப், ஹசன், இமாத் வாசிம், சதாப் கான் என வரிசையாக பந்துவீச்சில் வீரர்கள் இருப்பதும் இந்திய அணிக்கு பெரும் தலைவலியைக் கொடுக்கும். பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொண்டு இந்திய வீரர்கள் விளையாடியதி்ல்லை என்பதால், தொடக்கத்தில் தடுமாற்றும் ஏற்படக்கூடும். இதே நிலைமை பாகிஸ்தான் அணிக்கும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கில் தூணாக இருப்பவர் கேப்டன் பாபர் ஆஸம். இவர் தவிர பக்கர் ஜமான், முகமது ஹபீஸ், அனுபவ வீரர் ஷோயிப் மாலிக், முகமது ஹபீஸ் இருப்பது மிகப்ெபரிய பலம். சமீபத்தில் நடந்த ப யிற்சி ஆட்டத்தில்கூட பாபர் ஆஸம் அரைசதம் விளாசி ஃபார்மை வெளிப்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் இமாத் வாசிம் ஐக்கிய அரபுஅமீரகத்தில் பந்துவீசி நல்ல ரெக்கார்ட் வைத்துள்ளார் என்பதால் நாளை இந்திய அணிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்துவார். ஒட்டுமொத்தத்தில் மிகப்ெபரிய எதிர்பார்ப்பை உலகம்முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. வரலாறு திருத்தப்படுமா அல்லது தொடருமா என்பது நாளை தெரியும்

தவறவிடாதீர்!

T20 World CupIndia's megastarsPakistanICC T20 World CupIndia and Pakistanஇந்தியாபாகிஸ்தான்டி20 உலகக் கோப்பைஇந்திய அணிவிராட் கோலிபாபர் ஆஸம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x