Published : 17 Mar 2016 09:24 AM
Last Updated : 17 Mar 2016 09:24 AM

சுழல் ஆயுதத்தால் இந்தியாவுக்கு நெற்றியடி கொடுத்த நியூஸிலாந்து

உலகக் கோப்பை டி 20 தொடரை இந்திய அணி சற்றும் எதிர்பாராத விதமாக தோல்வியில் தொடங்கி யுள்ளது. கடைசியாக விளையாடிய 11 ஆட்டங்களில் 10-ல் வெற்றி பெற்று நல்ல பார்முடன் உலகக் கோப்பை தொடரில் நுழைந்த தோனி குழுவினருக்கு நேற்றைய ஆட்டம் அதிர்ச்சியாகவே இருந்தது.

நியூஸிலாந்து அணியை 126 ரன்னில் கட்டுப்படுத்திய போதும், பேட்டிங்கில் ஒட்டுமொத்தமாக இந்திய அணி கோட்டை விட்டது. சுழல் பாரம்பரியமான சொந்த ஆடுகளத்தில் 79 ரன்னில் இந்தியா அனைத்து விக்கெட்களையும் இழந்தது உலகக் கோப்பை தொடரில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைக்கு எதிரான தொடரின்போது புனே ஆடுகளத் தில் இந்திய வீரர்கள் செய்த தவறை நேற்று நாக்பூரில் மேற்கொண்டனர். ஆடுகளம் மெதுவாக செயல் படுவதை அறிந்தும் அதற்கு தகுந்தபடி யாருமே ஆடவில்லை. முதல் ஓவரில் ஷிகர் தவண் ஆட்டமிழந்ததும் அடுத்த சில ஓவரில் ரோஹித் சர்மா கிரீஸை விட்டு வெளியேறி வந்து விக்கெட்டை தாரை வார்த்தார்.

ரெய்னா தடுப்பாட்டம் ஆட முயன்று வெளியேறினார். யுவராஜ் சிங்,

‘பிளாக் பந்தை’ பந்து வீச்சாளர் கையிலேயே கொடுத்து நடையை கட்டினார். நிதானமாக விளையாடிய விராட் கோலியை, இஸ் சோதி தவறு செய்ய தூண்டி விக்கெட்டை வதம் செய்தார். பாண்டியாவோ ஸ்டெம்புக்கு நேராக வீசப்படும் பந்தை காலில் வாங்கி ஏமாற்றம் கொடுத்தார். ரெய்னா செய்த தவறையே ஜடேஜாவும் மேற்கொண்டு தனது விக்கெட்டை இழந்தார்.

கைவசம் 3 விக்கெட்டுகளுடன் கடைசி 4 ஓவர்களுக்கு 61 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற சூழ்நிலை யில் தோனி மட்டையை சுழற்ற தொடங்கினார். 17வது ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்ட அந்த ஓவரின் 3வது பந்தில் அஸ்வின் ஸ்டெம்பிங் செய்யப் பட்டதும் ஆட்டம் உறுதியாக கையைவிட்டு சென்றது. போராடி பார்த்த தோனியும் 30 ரன் எடுத்து 18வது ஓவரில் ஷான்டர் பந்தில் வீழ்ந்தார். கடைசியில் மில்னே பந்துக்கு ஒதுங்கிக் கொண்டு நெஹ்ரா போல்டானது ஒட்டு மொத்த இந்திய அணியின் பேட்டிங் சீர்குலைவை பிரதிபலித்தது.

சமீபகாலமாக இந்திய வீரர்கள் சுழற்பந்து வீச்சில் ரன் சேர்க்கவும், விக்கெட்டை பாதுகாக்கும் வகை யில் விளையாடும் நுணுக்கத்தை கையாள தெரியாமலும் திணறி வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது. இதை உண்மையாக்கும் விதமாக இந்திய அணியின் ஆட்டம் நேற்று அமைந்தது.

அதேவேளையில் உலகக் கோப்பை தொடர் தொடங்கு வதற்கு முன்பே இநத தொடரில் சுழற்பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்கும் என நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு தகுந்தபடியே நேற்றைய ஆட்டத் தில் அந்த அணி நிர்வாகம் முதன்மை பந்து வீச்சாளர்களான டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, மெஹ் லினஹன் ஆகியோரை வெளியே வைத்துவிட்டு ஷான்டர், இஸ் சோதி, நாதன் மெக்கலம் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களை கள மிறக்கி வாகையும் சூடியுள்ளது. இந்த கூட்டணி 9 விக்கெட்களை சூறையாடியது. ஷான்டர் 4, இஷ் சோதி 3, நாதன் மெக்கலம் 2 விக்கெட் வீழ்த்தினர்.

வேகப்பந்து வீச்சு ஆடுகளங் களில் விளையாடியே பழக்கப்பட்ட நியூஸிலாந்து அணி நாக்பூர் ஆடுகளத்தை சரியாக கணித்து அதற்கு தகுந்தபடி திட்டம் அமைத்து வெற்றி பெற்றது ஆச்சர்யமான விஷயம் தான். அதேவேளையில் இந்த ஆடுகளத்தில் கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவை டெஸ்ட் போட்டியில் குறைந்த ரன்னில் சுருட்டி 3 நாளில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து வெற்றி பெற்ற இந்திய அணி தற்போது வெற்றிக்கான உத்திகளை கையாளாதது அலட்சியப்போக்கே தவிர வேறு ஒன்றும் இருக்க இயலாது.

உலகக் கோப்பை தொடரில் இனி வரும் 3 ஆட்டங்களுமே இந்தியாவுக்கு சோதனையாகவே இருக்கும். அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால் இந்த 3 ஆட்டங்களிலும் கட்டாயமாக வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x