Last Updated : 17 Sep, 2021 05:22 PM

 

Published : 17 Sep 2021 05:22 PM
Last Updated : 17 Sep 2021 05:22 PM

8 சீசன்கள்; ஒருமுறைகூட சாம்பியன் இல்லை: ஆர்சிபி கேப்டனாகத் தொடரும் விராட் கோலி

ஐபிஎல் டி20 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியின் கேப்டனாக விராட் கோலி பொறுப்பேற்று 8 சீசன்களைக் கடந்துவிட்டது. ஆனால், இதுவரை அந்த அணிக்கு ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தைப் பெற்றுத் தரவில்லை.

பேட்ஸ்மேனாக விராட் கோலி வெற்றி அடைந்துவிட்டார். ஆனால், கேப்டன் எனும் கலையில் வெள்ளைப் பந்துப் போட்டிகளில் கோலி வெற்றி பெற்றுவிட்டார் என்று ஒருபோதும் கூறமுடியாது.

விராட் கோலியின் "ஹால்மார்க் கவர் டிரைவ் ஷாட்" எந்த அளவு கச்சிதமாக இருக்குமோ அதேபோன்ற முடிவை டி20 உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன், போட்டித் தொடர் முடிந்தபின் இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகும் முடிவை அவர் எடுத்துள்ளார்.

ஆனால், என்னவோ சமீபகாலமாக கோலியின் கவர் டிரைவ் ஷாட்களும் அவருக்குக் கைகொடுக்கவில்லை!!

இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றால், வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமையுடன் கோலி விடைபெறுவார். ஏனென்றால் இதுவரை ஐசிசி சார்பில் நடந்த ஒரு போட்டியில்கூட கோலி தலைமையில் கோப்பையை இந்திய அணி வெல்லவில்லை. அதனால் காலரைத் தூக்கிவிட்டு தலைநிமிர்ந்து செல்லலாம்.

ஆனால், டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தோற்றால், கோலியைப் பதவியிலிருந்து நீக்குங்கள் என்று ரசிகர்கள் ஒரு தரப்பினரிடம் இருந்து வரும் கலகக் குரல், எதிர்ப்புக் குரல், விமர்சன வார்த்தை அம்புகள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க இப்போது கேடயமாக அறிவிப்பை முன்கூட்டியே கோலி வெளியிட்டுவிட்டார். (அதாவது அடி பலமாக விழாது)

உலகக் கோப்பையில் தோல்வி அடைந்தால், இந்திய டி20 கேப்டன் பதவியைவிட்டு விலகி ரசிகர்களின் கேலிப் பேச்சு, விமர்சனம் ஆகியவற்றிலிருந்து கோலி தப்பிக்கலாம்.

ஆனால், ஐபிஎல் டி20 தொடரை நினைத்துப் பாருங்கள் கோலியால் பாவம்....! என்ன செய்ய முடியும்?

கடந்த 8 சீசன்களாக ஆர்சிபி அணியின் கேப்டனாக வலம் வரும் கோலி, ஒருமுறை கூட அந்த அணிக்கு இதுவரை சாம்பியன் பட்டத்தைப் பெற்றுத் தரவில்லை. ஆர்சிபி கேப்டனாக இருந்ததைவிட, இந்திய டி20 கேப்டனாக கோலியின் சாதனை சிறப்பாகவே இருக்கிறது.

இந்திய டி20 கேப்டனாக கோலியின் வெற்றி சதவீதம் 65.11 ஆக, தோனியின் 59.28 சதவீதத்தைவிட அதிகமாக இருக்கிறது. ஆனால், ஆர்சிபி கேப்டனாக கோலியின் செயல்பாடு மோசமாக இருக்கிறது.

கடந்த 2013-ம் ஆண்டு ஆர்சிபிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்று இதுவரை ஒருமுறைதான் ஃபைனல் வரை அணியைக் கொண்டு சென்றார். ஆனால், கோப்பையை வென்றதில்லை. ஆனால், ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 சீசன்களில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

கடந்த சீசனில் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குக் கடந்த 2016-ம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாகத் தகுதி பெற்றது. ஆனால், கோலியின் மோசமான கேப்டன்ஷிப்பால் தொடர்ந்து 5 தோல்விகளைச் சந்தித்து, ப்ளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி அணி முன்னேறியது. அதிலும் கடந்த 2017, 2019-ம் ஆண்டுகளில் புள்ளிப் பட்டியலில் ஆர்சிபி அணி கடைசி இடத்தைப் பிடித்தது. 2018-ம் ஆண்டில் 6-வது இடம் கிடைத்தது.

கேப்டனாக இருந்து சிறப்பாகப் பணியாற்றுவதும், பேட்டிங்கில் ஜொலிப்பதும் அரிதானதுதான். ஆனால், அதில் கோலி சிறப்பாகவே கேப்டன்ஷிப்பிலும், பேட்டிங்கிலும் மிளிர்ந்தார். குறிப்பாக 2016-ம் ஆண்டு சீசனில் 973 ரன்களை ஆர்சிபி அணிக்காக கோலி சேர்த்தார். ஆனால், அதன்பின் எந்த சீசனிலும் 500 ரன்களைத் தாண்டவில்லை. 2018-ம் ஆண்டு மட்டும் விதிவிலக்காகும்.

தற்போது நடந்துவரும் ஐபிஎல் சீசனில் 7 போட்டிகளில் இதுவரை கோலி ஒரு அரை சதம் மட்டுமே அடித்து, 33 ரன்கள்தான் சராசரி வைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் கேப்டன்ஷிப் பொறுப்பிலும் ரோஹித் சர்மாவைவிட பின்தங்கித்தான் கோலி உள்ளார். விராட் கோலி தலைமையில் ஆர்சிபி அணி 132 போட்டிகளில் 60 வெற்றிகள், 65 தோல்விகள், 3 போட்டிகள் டையிலும், 4 போட்டிகள் முடிவில்லாமலும் இருக்கிறது. வெற்றி சதவீதம் 48.04 ஆக இருக்கிறது

ஆனால், ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 123 போட்டிகளில் 72 வெற்றி, 47 தோல்விகள் அடைந்துள்ளது. ரோஹித் சர்மா கேப்டன்ஷிப்பில் 60.16 சதவீதம் வைத்துள்ளார். இந்திய டி20 அணிக்கும் ரோஹித் சர்மா கேப்டனாக இருந்து ஆசியக் கோப்பை, நிடாஹஸ் கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.

முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழுத் தலைவருமான திலீப் வெங்சர்கர் ஒரு பேட்டியில் கூறுகையில், “விராட் கோலியிடம் இருந்து கேப்டன்ஷிப் பறிக்கப்பட அவர் டி20 தொடர்களில் தடுமாறுவது ஒரு காரணமாக இருக்கலாம். ஆர்சிபி அணிக்கு கோலியால் மிகப்பெரிய சந்தை மதிப்பு கிடைத்திருக்கும், ஆனால், போட்டியின் முடிவு பல நேரங்களில் தோல்விதானே, எத்தனை நாட்களுக்கு இது நீடிக்கும்?

கோலிக்கும், ஆர்சிபிக்கும் இடையே நீண்ட உறவு இருக்கிறது. உலகத்தரம் வாய்ந்த பேட்டிங் வரிசை, பந்துவீச்சு வரிசையைக் கொடுத்தாலும், நீண்டகாலமாக கோப்பையை வென்று கொடுக்காவிட்டால், தலைமையில் மாற்றம் செய்வது அவசியம். கோலியின் ஐபிஎல் செயல்பாடுகள் ஒருபோதும் இந்திய அணியில் அவரின் பணியைப் பாதிக்காது என்றாலும், ஆனால், ஒரு இடைவெளி வழங்கிட வேண்டும். வெற்றி என்பது அணிக்கு மிகவும் முக்கியம். இது வீரர்களையும் அணியின் நம்பிக்கையையும் பாதிக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.

ஆர்சிபி அணியில் கோலியைவிடச் சிறப்பாக விளையாடிய வீரர்கள் யாரும் இருந்திருக்க முடியாது. ஆனால், அணியின் வெற்றி அடிப்படையில் பார்த்தால் கோலியின் தலைமை ஆய்வு செய்யப்பட வேண்டும். ஏனென்றால் ஆர்சிபி அணியிலிருந்து விலகிச் சென்ற பல வீரர்கள் அடுத்த அணியில் சிறப்பாக விளையாடியுள்ளார்கள். சமீபத்திய உதாரணம் ஆர்சிபி அணியிலிருந்து கழற்றிவிடப்பட்ட மொயின் அலி சிஎஸ்கே அணியில் பந்துவீச்சு, பேட்டிங்கில் வெளுத்து வாங்குகிறார். அதாவது கேப்டன்ஷிப்பை மாற்றிப் பார்க்க வேண்டும், அல்லது கேப்டன்ஷிப்பிலிருந்து கோலி சற்று விலகி இருப்பதில் தவறில்லையே.

கேப்டன்ஷிப் குறித்து ரோஹித் சர்மா ஐபிஎல் போட்டியில் ஒருமுறை அளித்த பேட்டியில், “வீரர்களுக்குப் பின்னால் நின்று பார்ப்பவன் நான் அல்ல. அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பது அவசியம். சக வீரர்களின் பங்களிப்பைப் புரியவைக்க வேண்டும். நம்முடைய வழியில் ஏதும் நடக்காவிட்டால் அதை வீரர்களிடம் கூறிப் புரியவைப்பேன்” எனத் தெரிவித்தார்.

ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் குறித்து ஹர்திக் பாண்டியா கூறுகையில், “ ரோஹித் சர்மாதான் அணிக்கு கேப்டனா என்ற உணர்வு இல்லாமல்தான் கேப்டன்ஷிப் பணியைக் கவனிப்பார்” எனத் தெரிவித்தார்.

இந்த முறை ஆர்சிபி அணிக்கு சாம்பியன் வெல்வதற்கு அருமையான வாய்ப்பும், வீரர்களும் கிடைத்துள்ளார்கள். மேக்ஸ்வெல் நல்ல ஃபார்மில் இருக்கிறார். டிவில்லியர்ஸ் பயிற்சி ஆட்டத்தில் சதம் அடித்து மிரட்டியுள்ளார். கையில் ஜேமிஸன், சிராஜ், சஹல், ஹர்ஸல் படேல் என ஃபார்ம் குறையாத வீரர்கள் இருப்பதால் இந்த முறையும் சாம்பியன் பட்டத்தை கோலி தலைமை தவறவிட்டால், இலவு காத்த கிளிதான் கோலி நிலைமை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x