Published : 12 Feb 2016 10:22 AM
Last Updated : 12 Feb 2016 10:22 AM

ராஞ்சியில் இன்று இரண்டாவது T20 போட்டி: பதிலடி கொடுக்குமா இந்தியா

அனுபவம் இல்லாத இலங்கை அணியிடம் முதல் டி 20 ஆட்டத்தில் தோல்வி அடைந்த நிலையில் ராஞ்சியில் இன்று நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி மீண்டும் அந்த அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 0-1 என பின்தங்கியுள்ளது. புனேவில் நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை அணி பசுந்தரை ஆடுகளத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி இந்திய அணியை 101 ரன்களில் சுருட்டியதுடன் இலக்கை 12 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றது.

இங்கிலாந்து ஆடுகளம் போன்று புனே ஆடுகளம் இருந்ததாக கூறிய தோனி இன்று தனது சொந்த ஊரில் நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்கொள்கிறார். ராஞ்சியில் டி 20 போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்னர் இந்தியா இங்கு விளையாடிய 3 ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியை சந்திக்கவில்லை. இந்த ஆட்டங்களில் 300 ரன்களுக்கு மேல் இந்திய அணி குவித்தது. இதனால் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ரஜிதா, துஸ்மந்தா ஷமீரா, ஷனகா ஆகியோர் முதல் ஆட்டத்தில் பசுந்தரை ஆடுகளத்தில் சரியான திசையில் பந்துகளை வீசி இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். ஆனால் ராஞ்சி மைதானம் அதில் இருந்து வேறுபட்டது. இதனால் இன்றைய ஆட்டம் மூவர் கூட்டணியின் திறமையை சோதிப்பதாகவே இருக்கும்.

புனே ஆட்டத்தில் ஆடுகளம் செயல்படும் தன்மையை முழுமை யாக மனதில் கொள்ளாமல் இந்திய வீரர்கள் விளையாடியதாலேயே விக்கெட்டுகளை விரைவாக பறிகொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இன்றைய ஆட்டத்தில் இந்த விஷயத்தில் இந்திய வீரர்கள் கவனம் செலுத்தக்கூடும்.

ஆட்டத்தை முடித்து வைக்கும் திறனை தோனி இழந்து வருவதாக கருதப்படும் இந்த சூழ்நிலையில் சொந்த ஊரில் நடைபெறும் இன்றைய ஆட்டம், அவர் இழந்த பார்மை மீட்க உதவக்கூடும். இந்திய அணியில் இன்று மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை.

இலங்கை அணியில் ஒரே ஒரு மாற்றம் இருக்க வாய்ப்புள்ளது. மூத்த வீரர் தில்ஷான் களமிறங்கக் கூடும். இன்றைய ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் இந்திய வீரர்கள் கூடுதல் கவனமுடன் செயல்படக்கூடும். தொடரை வெல்லும் முனைப்பில் இலங்கை அணியும், பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்திய அணியும் களமிறங்குவதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இடம்: ராஞ்சி நேரம்: இரவு 7.30

ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x