Published : 02 Feb 2016 02:59 PM
Last Updated : 02 Feb 2016 02:59 PM

இன்னும் எத்தனை போட்டிகளை வெல்லப்போகிறீர்கள்? - சானியா பேட்டி

மகளிர் இரட்டையர் டென்னிஸ் ஆட்டத்தில் தற்போது உச்சத்தில் இருந்து வரும் சானியா மிர்சா-மார்டினா ஹிங்கிஸ் ஜோடி 2015-ம் ஆண்டை அற்புதமாக முடித்ததோடு, 2016-ம் ஆண்டை ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்று அபாரமாகத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் மெல்பர்னிலிருந்து மகிழ்ச்சியுடன் திரும்பிய சானியா மிர்சா அளித்த பேட்டி வருமாறு:

"எப்போதும் வேட்டையாடப்படுவதை விட, வேட்டையாடுபவராக இருப்பது ஒரு சிறப்பான தருணம்தானே. உயர்மட்டத்தில் சீராக வெற்றிகளை குவிப்பது என்பது உடல், மனம் ஆகியவற்றுக்கு விடுக்கப்படும் பெரிய சவால்.

அதாவது டென்னிஸில் நம்பர் 1 இடத்தைப் பிடிப்பது, தக்கவைப்பது எளிதானதல்ல, எதிர்பார்த்ததை விட கடும் பயிற்சிகளைக் கோருவதாகும்.

2015-ம் ஆண்டு கனவு ஆண்டுதான், ஆனால் அதனை அடைய எவ்வளவு கடினப்பாட்டை எதிர்கொண்டோம் என்பதை நான் பலரிடமும் கூறியுள்ளேன். ஆனால் 2016-ம் ஆண்டு இதைவிட ஒரு பெரிய தொடக்கம் கிடைக்க வாய்ப்பில்லை, எனவே இதுவும் ஒரு கனவுத்தொடக்கமே.

ஹிங்கிஸுடனான புரிதல்...

நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் மிகச்சரியாக புரிந்து வைத்துள்ளோம். மேலும் பல சின்ன விஷயங்களைக் கூட இருவரும் பகிர்ந்து கொள்கிறோம். இதுதான் வெற்றிக்கு வித்திட்டுள்ளது.

களத்தில் இருவருக்கிடையேயான கெமிஸ்ட்ரி மட்டுமல்ல, மைதானத்திற்கு வெளியேயும் நாங்கள் சிறந்த நண்பர்கள். இதனால்தான் வெற்றிக்கூட்டணியாக இருவரும் தொடர்ந்து நீடிக்க முடிகிறது.

பொதுவாக இரட்டையர் ஆட்டத்தில் அழுத்தம் கூடும் தருணங்களில் ஒரு வீரர் மட்டும் ஆட்டத்தின் தரத்தை உயர்த்துவார், ஆனால் இங்கு நாங்கள் இருவருமே நெருக்கடியிலிருந்து மீள ஆட்டத்தை உயர்த்தி வருகிறோம். இதுதான் எங்கள் கூட்டணியின் சிறப்பாகும்.

ஹிங்கிஸ் ஒரு மிகப்பெரிய வீரர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மேலும் அவர் மீண்டும் பெரிய லீகிற்குள் நுழைந்தவர் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இன்னும் முன்னமேயே கூட ஹிங்கிஸ் உடன் இணைந்திருக்கலாமோ என்று நான் நினைப்பதுண்டு.

ஆனாலும் வெற்றியைத் தொடர்வது எளிதல்ல, நிச்சயம் தோல்வியுறும் தருணம் வரும், ஆனால் அது இப்போதைக்கு வராது என்று நான் நம்புகிறேன்.

எங்களிடம் பலரும் ‘இன்னும் எத்தனைப் போட்டிகளைத்தான் வெல்லப் போகிறீர்கள்?’ என்று நகைச்சுவையாகக் கேட்பதுண்டு. அதாவது அந்த அளவுக்கு நாங்கள் எங்கள் ஆட்டத்தின் மூலம் செல்வாக்கை ஏற்படுத்தியுள்ளோம் என்பதையே இந்தக் கேள்வி வெளிப்படுத்துகிறது. எனவே நேர்மையாகக் கூற வேண்டுமெனில் இப்போதுதான் எங்கள் மீது அழுத்தம் கூடியுள்ளது.

நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பு...

ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதாகக் கூறினார் சானியா மிர்சா. “என் மீது பரிவும், நேசமும் காட்டும் மக்களுக்கு இந்தப் பட்டத்தை அர்ப்பணிக்கிறேன். இதற்கு நான் சமூக வலைத்தளத்துக்குத்தான் நன்றி தெரிவிக்க வேண்டும். பிறகு எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன்.

36 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெறுவது என்ற சாதனை எனக்கு பெருமை அளிக்கிறது. ஆனாலும், எனது டென்னிஸ் வாழ்க்கையில் இன்னும் சில சிறப்பு வாய்ந்த தருணங்கள் இருக்கவே செய்கின்றன” என்றார்.

ரியோ ஒலிம்பிக்ஸ்:

அந்த மட்டத்தில் எதுவும் எளிதாக அமைந்து விடாது. ரோஜர்கள், ஜோகோவிக்குகள், ஆகியோர் நிரம்பிய இடம் அது. இப்போதைக்கு உலகின் நம்பர் 1 என்பதால் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளேன். கலப்பு இரட்டையரில் ஒலிம்பிக் போட்டிகளில் போபன்னாவா, பயஸா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.

இவ்வாறு கூறினார் சானியா மிர்சா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x