Published : 18 Feb 2016 11:50 AM
Last Updated : 18 Feb 2016 11:50 AM

கத்தார் ஓபனில் செரீனா விலகல்

கத்தார் ஓபனில் செரீனா விலகல்

தோஹா கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 21ம் தேதி தோஹாவில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் இருந்து நம்பர் ஒன் வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் விலகியுள்ளார். இதுதொடர்பாக செரீனா வில்லியம்ஸ் கூறும்போது, வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் 100 சதவீத உடல் தகுதியுடன் இருப்பதாக நான் உணரவில்லை. உடல் நலம்பெற இந்த காலஅவகாசம் எனக்கு தேவை என்றார்.

செரீனா வில்லியம்ஸ் கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் இறுதி ஆட்டத்தில் ஏஞ்சலிக் ஹெர்பரிடம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.



பிரஸ்வெல் காயம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி டெஸ்ட் வரும் 20-ம் தேதி கிறிஸ்ட்சர்சில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரஸ்வெல் விலகி உள்ளார். தோள்பட்டை காயத்தால் அவர் விலகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





விராட் கோலி 2வது இடம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் விராட் கோலி 2-வது இடத்திலும், ரோஹித் சர்மா 5-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

ஷிகர் தவண் 2 இடங்கள் பின்தங்கி 9-வது இடத்தில் உள்ளார். தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் முதலிடத்தில் தொடர்கிறார். பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் நியூஸிலாந்தின் டிரென்ட் பவுல்ட் முதலிடத்தில் உள்ளார். இந்திய தரப்பில் டாப் 10 இடத்தில் அஸ்வின் மட்டுமே உள்ளார். அவர் 10-வது இடம் வகிக்கிறார்.





காலிறுதியில் ஷகத் மைனேனி

டெல்லி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஷகத் மைனேனி காலிறுதிக்கு முன்னேறினார். இரண்டாவது சுற்றில் ஆஸ்திரேலியாவின் மேத்யூவ் பார்டனை எதிர்த்து விளையாடிய ஷகத் மைனேனி 6-3, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.

மைனேனி காலிறுதியில் சீனாவின் ஹீ லியை எதிர்கொள்கிறார். மகளிர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா 6-1, 6-4 என்ற நேர்செட்டில் ரஷ்யாவின் மரினாவை வீழ்த்தினார். அங்கிதா காலிறுதியில் ரஷ்யாவின் அனா மோர்ஜினாவை சந்திக்கிறார்.





ஆனந்துக்கு 2வது இடம்

ஜூரிச் ஸ்விட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற ஜூரிச் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 2வது இடம் பிடித்தார்.

5 சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் பிளிட்ஸ் முறையில் ஆனந்தும், அமெரிக்காவின் நஹமுராவும் தலா 3.5 புள்ளிகள் பெற்றனர். தொடர்ந்து நடந்த ரேபிட் பிரிவிலும் இருவரும் தலா 7 புள்ளிகள் எடுத்தனர். இருவரும் மொத்தம் 10.5 புள்ளிகள் பெற்றதால் டை பிரேக்கர் ஸ்கோர் அடிப்படையில் நஹமுரா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரண்டாவது முறையாக நஹமுரா சாம்பியன் பட்டம் வென்றார். ஆனந்துக்கு 2வது இடம் கிடைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x