Last Updated : 10 Jul, 2021 03:17 PM

 

Published : 10 Jul 2021 03:17 PM
Last Updated : 10 Jul 2021 03:17 PM

டெல்டா வைரஸ்? இலங்கை அணி வீரருக்கு கரோனா; மாற்று அணியை அறிவிக்க தீவிர ஆலோசனை: இரு பிரிவுகளாக வீரர்கள் தனிமை

இலங்கை அணி உருவாக்கியிருந்த இரு பயோ-பபுள் சூழலையும் கடந்த வீரர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இப்போதுள்ள அணியைத் தவிர்த்து புதிய அணியை அறிவிக்க இலங்கை வாரியம் ஆலோசித்து வருகிறது.

ஏற்கெனவே இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவர், டேட்டா அனலிஸ்ட் நிரோஷன் ஆகியோர் கரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட நிலையில், சந்துன் வீரக்கொடி என்ற வீரர் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் மூவருக்கும் நடத்தப்பட்ட பரிசோதனையில் டெல்டா வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிரிக் இன்ஃபோ தளம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்துக்குப் பயணம் செய்த இலங்கை அணி, அந்நாட்டு அணியுடன் ஒருநாள் தொடர், டி20 தொடரில் விளையாடி நாடு திரும்பியது. இலங்கை அணி தாயகம் திரும்பிய சில நாட்களில் இங்கிலாந்து அணியில் உள்ள 3 வீரர்களுக்குத் தொற்று இருப்பது உறுதியானது

இதையடுத்து, இலங்கை வீரர்களுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவர், டேட்டா அனலிஸ்ட் டி.நிரோஷன் ஆகியோருக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் வீரர்களுக்கு வழக்கமான தனிமைப்படுத்தும் காலத்தைக் கூடுதலாக 3 நாட்கள் நீட்டித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இலங்கை வீரர்கள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு தம்புலா நகருக்கு ஒரு பிரிவினர் தனிமைப்படுத்த அனுப்பப்பட்டனர். மற்றொரு பிரிவினரை கொழும்பு நகரில் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.

இதற்கிடையே தம்புலா நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த 15 இலங்கை வீரர்களில் ஒருவரான சந்துன் வீரக்கொடி என்பவருக்கு மட்டும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், வீரக்கொடியுடன் பனுகா ராஜபக்ச, அசலா குணரத்னே, ஏஞ்சலோ பெரேரா உள்ளிட்ட பல வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டதால், அவர்களும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், யாருக்கும் இதுவரை பாஸிட்டிவ் வரவில்லை. மற்றொரு பிரிவினர் கொழும்பு நகரில் உள்ள ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை வீரர்களுக்குள் கரோனா தொற்று இருப்பதால், சீனியர் அணிக்கு பதிலாக மாற்று அணியை இந்திய அணிக்கு எதிரான தொடரில் களமிறக்கவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x