Last Updated : 02 Jul, 2021 04:01 PM

 

Published : 02 Jul 2021 04:01 PM
Last Updated : 02 Jul 2021 04:01 PM

தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த மாரியப்பன் தங்கவேலு: டோக்கியோ பாராலிம்பிக்கில் தேசியக் கொடி ஏந்தி இந்திய அணியை வழிநடத்துகிறார்

தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு | கோப்புப்படம்

புதுடெல்லி

தமிழகத்தைச் சேர்ந்த பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலு, டோக்கியோவில் வரும் ஆகஸ்ட் மாதம் நடக்க உள்ள பாராலிம்பிக் போட்டியில் தேசியக் கொடி ஏந்தி இந்திய அணியை வழிநடத்தும் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, இந்த முறை மூவர்ணக்கொடியை ஏந்தி இந்திய அணியை வழிநடத்தி பெருமை சேர்க்க உள்ளார்.

டோக்கியோவில் கடந்த 2020ம் ஆண்டு பாராலிம்பிக் போட்டி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், கரோனா வைரஸ் பரவல் காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டு, வரும் ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கி செப்டம்பர் 5-ம் தேதிவரை நடக்கிறது. இதற்கிடையே வரும் 23-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 8ம் தேதிவரை ஒலிம்பிக் போட்டிகளும் நடக்கின்றன.

பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு கேப்டனாக தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து இந்திய பாராலிம்பிக் குழுவின் தலைவர் தீபா மாலிக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் “ டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு கேப்டனாக தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், அணிவகுப்பில் தேசியக் கொடியை ஏந்தி, இந்திய அணியை மாரியப்பன் வழிநடத்துவார்.

கரோனா வைரஸ் காரணமாக பல்வேறு சவால்கள் இருந்தன, ஆனாலும், வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் இந்தப் போட்டிக்காக மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சிறப்பாகத் தயாராகியுள்ளனர், அவர்கள் தன்னம்பிக்கை குறையாமல் உள்ளனர். கடந்த மார்ச் மாதத்திலிருந்து வீரர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து அவர்களை ஊக்கப்படுத்தி வந்தோம்.

வீரர்களின் நலனுக்காக உண்மையில் சில துணிச்சலான முடிவுகளை எடுத்தோம். இந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த தேசிய அளவிலான போட்டி முக்கியமாக அமைந்தது. பயிற்சியை கரோனா காலத்தில் முடித்தது என்பது சவாலாக இருந்து, இருப்பினும் கடுமையான கட்டுப்பாடுகளுடன்தான் பயிற்சி வழங்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

2016ம் ஆண்டு ரியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டிகளில், மாரியப்பன் 1.89 மீட்டர் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று உலகளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். மாரியப்பனின் சாதனையின் அடையாளமாக டோக்கியோ 2021 பாராலிம்பிக்கில் தேசியக்கொடியை ஏந்திச் செல்ல இந்திய பாராலிம்பிக் குழு முடிவு செய்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x