Published : 02 Jul 2021 03:12 AM
Last Updated : 02 Jul 2021 03:12 AM

யூரோ கால்பந்து தொடர் கால் இறுதி சுற்று: சுவிட்சர்லாந்து- ஸ்பெயின் இன்று மோதல்: மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம்- இத்தாலி பலப்பரீட்சை

யூரோ கால்பந்து தொடரில் இன்று இரவு 9.30 மணிக்கு ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெறும் கால் இறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து - ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.

ஸ்பெயின் அணியானது 2012-ம் ஆண்டு யூரோ உலகக் கோப்பையில் பட்டம் வென்ற பிறகு தற்போதுதான் முதன் முறையாக நாக்-அவுட் சுற்றில் வெற்றி கண்டுள்ளது. அந்த அணி நாக்-அவுட் சுற்றில் குரோஷியாவை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கால் இறுதிச் சுற்றில் கால் பதித்துள்ளது. தற்போதைய தொடரில் அதிக கோல்கள் அடித்துள்ள அணிகள் பட்டியலில் ஸ்பெயின் 11 கோல்களை அடித்து முதலிடத்தில் உள்ளது.

சுவிட்சர்லாந்து அணியானது நாக்-அவுட் சுற்றில் உலக சாம்பியனான பிரான்ஸ் அணியை வீழ்த்தியிருந்தது. இந்த ஆட்டத்தில் 1-3 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்த சுவிட்சர்லாந்து அணியானது கடைசி 9 நிமிடங்களில் இரு கோல்களை அடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தது. அதன் பின்னர் பெனால்டி ஷுட் அவுட்டில் கோல்கீப்பர் யான் சோமரின் மேம்பட்ட திறனால் 5-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வெளியேற்றியிருந்தது.

இந்தத் தொடரில் சுவிட்சர்லாந்து அணியின் டிபன்ஸ் வலுவானதாக இல்லை. 4 ஆட்டங்களில் அந்தஅணி 8 கோல்களை வாங்கி உள்ளது. இதுவரை அந்த அணி 3-4-1-2என்ற பார்மட்டிலேயே களவியூகங்களை அமைத்திருந்தது. கால் இறுதிச் சுற்றிலும் அந்த அணி இதே பார்முலாவை கடைபிடிக்கக்கூடும். பிரான்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல்களை அடித்த ஸ்டிரைக்கரான ஹாரிஸ் செஃபெரோவிக், ஸ்பெயின் அணிக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் என கருதப் படுகிறது.

பெல்ஜியம் - இத்தாலி

ஜெர்மனியின் முனிச் நகரில் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் 2-வது கால் இறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் - இத்தாலி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகளுமே லீக் சுற்றில் ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியை சந்திக்கவில்லை. இதில் இத்தாலி அணியானது கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பரில் போர்ச்சுகல் அணியிடம் தோல்வியடைந்த பிறகு பங்கேற்ற 31 ஆட்டங்களிலும் வீழ்த்த முடியாத அணியாக திகழ்ந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x