Published : 20 May 2021 03:11 AM
Last Updated : 20 May 2021 03:11 AM

உயிர் பாதுகாப்பு குமிழி வளையத்தில் இணைய தனி விமானம் மூலம் அஸ்வின், மயங்க் அகர்வால், பரத் அருண் மும்பை சென்றனர்

சென்னை

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்துக்கு பயணமாவதற்கான ஒரு கட்டமாக உயிர் பாதுகாப்பு குமிழி வளையத்தில் இணைவதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், பேட்ஸ்மேன் மயங்க் அகர்வால், பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோர் நேற்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மும்பை புறப்பட்டுச் சென்றனர்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியுடன் மோத உள்ளது. இந்த போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் வரும் ஜூன் 18ம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் கலந்து கொள்ள உள்ள இந்திய அணியைச் சேர்ந்த20 வீரர்கள், மாற்று வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவி பயிற்சியாளர்கள் ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 14 நாட்கள் கொண்ட உயிர் பாதுகாப்பு குமிழி வளையத்தை மும்பையில் உருவாக்கி உள்ளது. இந்த தனிமைப்படுத்துதல் காலமானது இன்று தொடங்குகிறது.

இதில் இணைவதற்காக நேற்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின், பேட்ஸ்மேன் மயங்க் அகர்வால், பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோர் நேற்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மும்பை புறப்பட்டுச் சென்றடைந்தனர். அதேபோன்று மொகமது சிராஜ், பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.தர் ஆகியோர் ஹைதராபாத்தில் இருந்து மும்பை சென்று சேர்ந்தனர்.

மும்பை மற்றும் புனேவில் வசிக்கும் வீரர்கள் வரும் 24ம் தேதி அணியின் பாதுகாப்பு வளையத்தில் இணைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில்கேப்டன் விராட் கோலி, அஜிங்க்யரஹானே, ரோஹித் சர்மாஆகியோர் 24ம் தேதி அணியினருடன் இணைய உள்ளார்கள். குடல்வால்வு பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட கே.எல்.ராகுலும் அதே நாளில் இந்திய அணியினருடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணியின் பாதுகாப்பு வளையத்தில் இணையும் வீரர்கள் கரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை 3 முறை எடுத்திருக்க வேண்டும் என்றும் அதன் முடிவுகளை சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீரர்கள் பாதுகாப்பு வளையத்தில் இணைந்த பின்னர் மேலும் 3 முறை பரிசோதனைகள் எடுக்கப்படும்.

இந்த வகையில் ஜூன் 2ம் தேதி லண்டனுக்கு பயணமாகும் இந்திய அணி வீரர்கள் 6 முறை பரிசோதனை செய்து கொண்டதற்கான முடிவுகளை எடுத்துச் செல்வார்கள். ஜூன் 3-ம் தேதி இங்கிலாந்து சென்றடையும் இந்திய அணியினர் அதன் பின்னர்அங்கு தனிமைப்படுத்தலில் இருப்பார்கள். அப்போது அவர்கள் பயிற்சியில் ஈடுபடவும் அனுமதிக்கப் படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x