Published : 29 Apr 2021 03:12 AM
Last Updated : 29 Apr 2021 03:12 AM
இந்திய கிரிக்கெட் அணியில் நீண்டகாலம் வேகப்பந்து வீச்சாளராக இருந்த ஆசிஷ் நெஹ்ராவின் பிறந்தநாள் இன்று (ஏப்ரல் 29).
1999-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார் ஆசிஷ் நெஹ்ரா. இந்தப் போட்டியில் ஒரு விக்கெட்டை மட்டும் வீழ்த்தியதால் மீண்டும் அவரை அணிக்கு தேர்வு செய்வதில் தேர்வுக் குழுவினர் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் கங்குலி கேப்டன் ஆன பிறகு, 2001-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு பயணம் செய்த இந்தியக் குழுவில் நெஹ்ராவுக்கு இடம் கிடைத்தது. 2003-ல் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 23 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட்களை இவர் வீழ்த்தினார். ஆனால் அதன் பின் சில போட்டிகளில் சொதப்ப, மீண்டும் தூக்கி வீசப்பட்டார். அதோடு காயங்களும் ஏற்பட, நெஹ்ராவின் பயணம் தடைபட்டது.
உள்ளூர் போட்டிகளிலும் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக ஆடியதால், 2009-ம் ஆண்டில் இந்திய அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டார் நெஹ்ரா. 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் 2 விக்கெட்களை வீழ்த்திய நெஹ்ரா, அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். ஆனால் இப்போட்டியின்போது காயமடைந்த அவரால் சில காலம் விளையாட முடியாமல் போனது.
12 முறை அறுவைச் சிகிச்சைக்கு உள்ளான அவர், ஒவ்வொரு முறையும் போராடி வேகப்பந்து வீச்சுக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டார். காயங்களை விட தேர்வுக்குழுவின் புறக்கணிப்புதான் அவரை மிகவும் சோர்வடைய வைத்தது. இதுபற்றி ஒருமுறை செய்தியாளரிடம், “ஒருவேளை என் முகம் தேர்வாளர்களுக்கு பிடிக்கவில்லையோ என்னவோ” என்று நெஹ்ரா கூறியுள்ளார். இத்தனை சவால்களைச் சந்தித்த நெஹ்ரா, 17 டெஸ்ட் போட்டிகளில் 44 விக்கெட்களையும், 120 ஒருநாள் போட்டிகளில் 157 விக்கெட்களையும், 26 டி-20 போட்டிகளில் 34 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT