Published : 24 Apr 2021 05:49 PM
Last Updated : 24 Apr 2021 05:49 PM

அரிதான நிகழ்வு: பாகிஸ்தான் அறிமுக வீரர் வீசிய அதிவேக பவுன்ஸரில் ஜிம்பாப்வே பேட்ஸ்மேனின் ஹெல்மெட் இரண்டாக உடைந்தது

அர்ஷத் வீசிய பவுன்ஸரில் கமுகுகான்வேயின் ஹெல்மெட் உடைந்து தனியாக விழுந்த காட்சி | படம் உதவி: ட்விட்டர்.

ஹராரே

ஹராரேவில் நேற்று நடந்த டி20 போட்டியில் பாகிஸ்தானின் அறிமுக வேகப்பந்துவீச்சாளர் அர்ஷத் இக்பால் வீசிய அதிவேக பவுன்ஸரில் ஜிம்பாப்வே பேட்ஸ்மேனின் ஹெல்மெட்டில் பந்து பட்டு ஹெல்மெட் இரண்டாக உடைந்தது.

ஜிம்பாப்வே நாட்டுக்கு பாகிஸ்தான் அணி பயணம் மேற்கொண்டுள்ளது. 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணி விளையாட உள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வென்ற நிலையில் 2-வது டி20 போட்டி நேற்று நடந்தது.

இதில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் சேர்த்தது. 119 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆட்டமிழந்து 18 ரன்களில் தோல்வி அடைந்தது.

டி20 போட்டிகளிலேயே பாகிஸ்தான் அணியை முதல் முறையாக ஜிம்பாப்வே அணி நேற்றுதான் தோற்கடித்துள்ளது. இதற்கு முன் 16 முறை மோதியும் தோல்வி அடைந்திருந்த நிலையில் விடாமுயற்சி வெற்றியைத் தேடித் தந்துள்ளது.

டி20 உலகக்கோப்பை நெருங்கி வரும் நிலையில் ஜிம்பாப்வே போன்ற கத்துக்குட்டி அணியிடம் பாகிஸ்தான் உதை வாங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷத் இக்பால் வீசிய பவுன்ஸர் ஜிம்பாப்வே பேட்ஸ்மேனின் ஹெல்மெட்டில் பட்டு இரண்டாக உடைந்தது.

அர்ஷத் இக்பால் 7-வது ஓவரை வீசினார். களத்தில் கமுகுகான்வே, மருமானி இருந்தனர். அர்ஷத் வீசிய பந்தை கமுகுகான்வே எதிர்கொண்டார். அர்ஷத் 3-வது பந்து அதிவேக பவுன்ஸராக வீச, அது கண்ணிமைக்கும் நேரத்தில் பேட்ஸ்மேன் கமுகுகான்வே ஹெல்மெட்டில் பட்டுத் தெறித்தது. பந்து பட்ட வேகத்தில் கமுகுகான்வே ஹெல்மெட் இரண்டாக உடைத்தது. (குறுக்கே இரண்டாக உடையாமல் மேல்பகுதி மட்டும் தனியாக உடைந்து கழன்று கீழே விழுந்தது)

கிரிக்கெட்டில் இதுபோன்று பேட்ஸ்மேனின் ஹெல்மெட் இரு பிரிவுகளாக உடைந்த சம்பவம் வரலாற்றில் இல்லை. இரண்டாகக் கீறல் விழுந்துள்ளது. ஆனால், இதுபோன்று மேல்பகுதி மட்டும் தனியாகக் கழன்று உடைந்து கீழே விழுந்தது இல்லை. கிரிக்கெட்டில் இது அரிதான நிகழ்வாகும்.

கமுகுகான்வே ஹெல்மெட்டில் அடிபட்டு சுருண்டதைப் பார்த்ததும் பாகிஸ்தான் வீரர்கள் விரைந்து வந்து அவருக்கு உதவி செய்தனர். அதற்குள் ஜிம்பாப்வே உடற்தகுதி நிபுணர் வந்து கமுகுகான்வேயின் தலைப் பகுதி, கழுத்துப் பகுதி ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

தலையில் இதுபோன்று பந்து பட்டால், கன்கஸன் முறைப்படி பேட்ஸ்மேனுக்கு பதிலாக வேறு பேட்ஸ்மேனைக் களமிறக்கலாம். ஆனால், கமுகுகான்வே சில நிமிடங்கள் முதலுதவிக்குப் பின் மீண்டும் களமிறங்கி 34 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

119 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. 78 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்து வலுவாகத்தான் பாகிஸ்தான் அணி இருந்தது. ஆனால், கடைசிஅடுத்த 21 ரன்களுக்குள் மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x