Last Updated : 18 Nov, 2015 04:20 PM

 

Published : 18 Nov 2015 04:20 PM
Last Updated : 18 Nov 2015 04:20 PM

ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் வழக்கு: ஸ்ரீசாந்த் உட்பட 36 பேருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக டெல்லி போலீஸ் தொடர்ந்த வழக்கில் கிரிக்கெட் வீர்ர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா, அங்கீட் சவான் உட்பட 36 பேருக்கு விளக்கம் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2013-ம் ஆண்டு நடந்த 6-வது ஐபிஎல் தொடரில் எழுந்த ஸ்பாட் பிக்சிங் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என ஸ்ரீசாந்த், சாண்டிலா, சவான் உட்பட 36 பேர் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டதாக உத்தரவிடப்பட்டது.

அதாவது மகாராஷ்டிர ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் இவர்களுக்கு எதிரான போதுமான ஆதாரங்களை காவல்துறை சமர்பிக்கவில்லை என்று ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 36 பேர் மீதான குற்றச்சாட்டு கைவிடப்பட்டது. இதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் டெல்லி போலீஸ் மனு செய்திருந்தது.

இந்நிலையில் இன்று (புதன்) இந்த மனு விசாரணைக்கு வந்த போது நீதிபதி சித்தார்த் மிருதுல், விடுவிக்கப்பட்ட ஸ்ரீசாந்த், சாண்டிலா, சவான் உட்பட 36 பேருக்கு பதில் அனுப்புமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் மாதம் 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

மேலும், குற்றச்சாட்டுகளிலிருந்து இவர்களை விடுவித்த விசாரணை நீதிமன்ற ஆவணங்களையும் டெல்லி உயர் நீதிமன்றம் மனு செய்த டெல்லி போலீஸிடம் கோரியுள்ளது.

விசாரணை நீதிமன்றம், குற்றம் சுமத்தப்பட்ட 36 பேருக்கும் குற்றப்பிண்ணனி உடைய தாவூத் இப்ராஹிம், சோட்டா ஷகீல் ஆகியோருக்கும் இடையே தொடர்பிருப்பதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் டெல்லி போலீஸ் துறையின் சிறப்புப் பிரிவினரால் நிறுவ முடியவில்லை என்ற காரணத்தினால் இவர்கள் மீதான குற்றச்சாட்டை கைவிடுவதாக தனது தீர்ப்பில் கூறியது.

அதாவது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஸ்பாட் பிக்சிங் வழக்கை கொண்டு வரத் தேவையில்லை, பொதுச் சூதாட்ட சட்டத்தின் கீழ் கொண்டு வந்தாலே போதுமானது என்றும், ஆனால் அதற்கும் கூட டெல்லி போலீஸ் சமர்ப்பித்த சாட்சியங்கள் போதுமானதாக இல்லை என்று விசாரணை நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இதனையடுத்து செப்டம்பர் 2-ம் தேதி டெல்லி போலீஸ், டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணை நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மனு செய்தது. குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டதற்கான தகுந்த காரணங்கள் இல்லை என்று இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தற்போது ஸ்ரீசாந்த், சாண்டிலா, அங்கிட் சவான் உள்ளிட்ட 36 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு டிசம்பர் 16-ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x