Published : 18 Mar 2021 03:13 AM
Last Updated : 18 Mar 2021 03:13 AM

4-வது டி 20-ல் இங்கிலாந்து அணியுடன் இன்று மோதல்- வெற்றி நெருக்கடியில் இந்திய அணி

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டி 20 கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணிவெற்றி நெருக்கடியுடன் களமிறங்குகிறது. ஏனெனில் இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் டி 20 தொடரை இழக்க நேரிடும்.

5 ஆட்டங்கள் கொண்ட கொண்ட டி 20 தொடரில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது. நேற்று நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. இந்நிலையில் 4-வது ஆட்டத்தில் இரு அணிகளும் இன்று மீண்டும் மோதுகின்றன. இந்திய அணி தோல்வியடைந்த இரு ஆட்டங்களிலும் முதலில் பேட் செய்திருந்தது.

இந்த ஆட்டங்களில் பவர்பிளேவில் இந்திய அணி விக்கெட்களை இழந்து ரன்களை சேர்க்க தடுமாறியது. இதன் விளைவு ஒரே ஒரு பேட்ஸ்மேனை மட்டுமே நம்பி அணியின் ஒட்டுமொத்த ரன்குவிப்பும் அமைந்தது. முதல் ஆட்டத்தில் ஸ்ரேயஸ் ஐயர் 67 ரன்கள் சேர்த்த நிலையில் 3-வது ஆட்டத்தில் விராட் கோலி 77 ரன்கள் எடுத்தார். தொடக்க வீரரான கே.எல்.ராகுல் 3 ஆட்டங்களில் இரு முறை டக் அவுட் ஆனார். ஒருமுறை 1 ரன்னில் வெளியேறினார்.

ராகுலுக்கு ஓய்வு?

இதனால் இன்றைய ஆட்டத்தில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு சூர்யகுமார் யாதவ் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது. இது நிகழ்ந்தால் ரோஹித்துடன், இஷான் கிஷன் தொடக்க வீரராக களமிறங்கக் கூடும்.

மார்க்வுட், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோரது சீரான வேகம் பவர்பிளேவில் ரன்கள் சேர்ப்பதை இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக்கும் வகையில் உள்ளது.

அதேவேளையில் இந்திய அணியின் பந்து வீச்சு திறன் நிலையானதாக இல்லை. யுவேந்திர சாஹல் இந்திய அணி தோல்வியடைந்த இரு ஆட்டங்களிலும் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தார். ஹர்திக் பாண்டியா முழுமையாக பந்து வீசத்தொடங்கிய போதிலும் இதுவரை ஒருவிக்கெட் கூட கைப்பற்றவில்லை. புவனேஷ்வர்குமார் சற்று சிறப்பாக வீசிய போதிலும் புதிய பந்தில் அவர், விக்கெட்களை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

தொடரில் இந்திய அணி 1-2 என பின்தங்கியுள்ள நிலையில் இன்றைய ஆட்டத்தில் சில மாற்றங்கள் இருக்கக்கூடும். யுவேந்திர சாஹலுக்கு பதிலாக ராகுல் டிவாட்டியா அறிமுக வீரராக இடம் பெற வாய்ப்பு உள்ளது. இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் டி 20 தொடரை இழக்க நேரிடும் என்பதால் விராட் கோலி குழுவினர் கூடுதல் கவனத்துடன் செயல்படுவதில் முனைப்பு காட்டக்கூடும்.

மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி எல்லா நிலைகளிலும் வெற்றி பெற விரும்புகிறது. கடந்த ஆட்டத்தில் பெற்ற வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாக அமையக்கூடும். இந்த ஆட்டத்தில் 83 ரன்கள் விளயாசிய ஜாஸ் பட்லர், 40 ரன்கள் சேர்த்த ஜானி பேர்ஸ்டோ ஆகியோரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x