Published : 17 Nov 2015 02:53 PM
Last Updated : 17 Nov 2015 02:53 PM

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் வேகப்புயல் மிட்செல் ஜான்சன்

ஆஸ்திரேலிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நடைபெற்று வரும் பெர்த் டெஸ்ட் போட்டியே ஜான்சனின் கடைசி சர்வதேச போட்டியாகும்.

இதன் மூலம் டெஸ்ட் மற்றும் சர்வதேச ஒருநாள், டி20 போட்டிகளிலிருந்து ஜான்சன் ஓய்வு பெறுகிறார். ஆனால் தொடர்ந்து ஐபிஎல், பிக் பேஷ் லீக் டி20 போட்டிகளில் அவர் விளையாடுவார்.

பெர்த்தில் நியூஸிலாந்தின் 2-வது இன்னிங்ஸிலும் கூட லேதம் மற்றும் மார்டின் கப்தில் ஆகியோரை மணிக்கு 147-148 கிமீ வேகம் கொண்ட பந்தில் வீழ்த்தினார் மிட்செல் ஜான்சன்.

34 வயது மட்டுமே ஆன ஜான்சன், சில நாட்களுக்கு முன்பாக ஒவ்வொரு போட்டியுமே தனது கடைசி போட்டி என்ற எண்ணத்துடன் ஆடியதாக தெரிவித்தார். அதாவது ஓய்வு பெறும் எண்ணம் அவரிடம் தலைதூக்கியது இந்தக் கூற்றின் மூலம் தெரிய வந்தது. இதனையடுத்து மார்க் டெய்லர், மற்றும் இயன் சாப்பல் ஆகியோர் கூறும்போது, ஓய்வு பெறும் எண்ணம் வந்த பிறகே அவரை அணிக்காக இனி பரிசீலிப்பது கடினம் என்று கருத்து தெரிவித்திருந்தனர். ஒருவர் ஆடும் ஒவ்வொரு ஆட்டமுமே கடைசி ஆட்டம் என்ற எண்ணத்துடன் ஆடுவது கூடாது என்ற ரீதியில் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து நேற்று மார்க் டெய்லர், பெர்த் டெஸ்ட் போட்டியே மிட்செல் ஜான்சனின் கடைசி போட்டியாக இருக்கும் என்று கூறியிருந்தார், அவர் கூறியது தற்போது உண்மையாகியுள்ளது.

அவரது கர்ப்பவதி மனைவி ஜெசிகா, மகள் ரூபிகா ஆனி ஆகியோர் ஜான்சனின் கடைசி டெஸ்ட் போட்டிக்காக பெர்த் வந்துள்ளனர்.

தனது ஓய்வு குறித்து ஜான்சன் கூறும்போது, “பிரியா விடை பெற இதுவே சரியான தருணம். நாட்டுக்காக இத்தனை போட்டிகளில் ஆடியது எனது அதிர்ஷ்டமே. ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ச்சியுடன் ஆடினேன்.

பெர்த்தில் விளையாடி ஓய்வு பெறுவது சிறப்பு வாய்ந்தது. இந்தப் போட்டிக்கு அப்பாலும் நான் ஓய்வு குறித்த எனது எண்ண ஓட்டத்தை ஆராய்ந்து முடிவெடுத்தேன். ஆஸ்திரேலிய அணிக்காக இன்னும் கூட சிறப்பாக என்னால் ஆட முடியும் என்ற உறுதி என்னிடம் இல்லை. என்னுடைய கிரிக்கெட் வாழ்வு ஏற்றத்தாழ்வுகள் நிரம்பியது, ஆனால் நான் நேர்மையாக கிரிக்கெட்டுக்காக அனைத்தையும் கொடுத்தேன். நான் என்ன சாதித்தேனோ அது குறித்து பெருமை அடைகிறேன். ஆஷஸ் தொடர் வெற்றி, உலகக் கோப்பை வெற்றி எனது கிரிக்கெட் வாழ்வின் அரிய பொக்கிஷங்கள்” என்றார்.

கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறும்போது, “ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட் ஆடிய விதத்தை மாற்றியதில் ஜான்சனுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு” என்று கூற பவுலிங் பயிற்சியாளர் கிரெய்க் மெக்டர்மட், “டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு புத்துயிரூட்டியவர் ஜான்சன்” என்றார்.

முன்னாள் இங்கிலாந்து பேட்ஸ்மேன் பால் காலிங்வுட் தெரிவிக்கையில், “பேட்ஸ்மென்களை நோக்கி ராக்கெட் வீச்சு செய்தவர் ஜான்சன், உலகின் அனைத்து பேட்ஸ்மென்களின் அடிவயிற்றைக் கலக்கியவர் ஜான்சன்” என்றார்.

மிட்செல் ஜான்சன் சாதனைத் துளிகள்:

73 டெஸ்ட் போட்டிகளில் 311 விக்கெட்டுகள் சராசரி 28.1.

153 ஒருநாள் போட்டிகளில் 239 விக்கெட்டுகள் சராசரி 25.26.

30 டி20 சர்வதேச போட்டிகளில் 38 விக்கெட்டுகள் சராசரி 20.97.

12/127: ஜான்சன் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2014-ம் ஆண்டு சென்சூரியன் டெஸ்ட் போட்டியில் கைப்பற்றிய விக்கெட்டுகள். இவரது சிறந்த டெஸ்ட் பந்து வீச்சு.

2008-ம் ஆண்டு பெர்த் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிர்க்காவுக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் 61 ரன்களுகு 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது இவரது சிறந்த ஒரு இன்னிங்ஸ் பந்து வீச்சாகும்.

ஒருநாள் போட்டிகளில் இலங்கைக்கு எதிராக கண்டியில் 2011-ம் ஆண்டு 31 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது இவரது சிறந்த ஒருநாள் வீச்சாகும்.

2009 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரருக்கான இரண்டு கேரி சோபர்ஸ் டிராபிக்களை பெற்றார்.

2007 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வென்ற போது இவர் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடாவிட்டாலும் அணியில் இருந்தார்.

2013-14 ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா 5-0 என்று கைப்பற்றிய போது ஜான்சன் 37 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கெவின் பீட்டர்சன், ஜானதன் டிராட் ஆகியோரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததற்கு இவரது பந்து வீச்சும் ஒரு வித காரணம்.

2013-ம் ஆண்டு பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் மெல்பர்னில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஜான்சன் வீசிய ஒரு பந்து மணிக்கு 156.8 கிமீ என்று பதிவானது. இதுதான் அவரது அதிவேகப் பந்து.

2009-ம் ஆண்டு இவர் தென் ஆப்பிரிக்க கேப்டன் கிரேம் ஸ்மித்தின் கையை இரு முறை உடைத்தார். 2012-ம் ஆண்டு குமார் சங்கக்காராவின் கையும் இவரது வேகப்பந்துத் தாக்கத்தினால் உடைந்தது. 2014-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் நம்பிக்கை நட்சத்திரம் என்று கருதப்பட்ட ஆல்ரவுண்டர் ரியான் மெக்லாரனை பவுன்சரில் வீழ்த்தினார். இதிலிருந்து மெக்லாரன் இன்னமும் மீளவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x