Last Updated : 08 Nov, 2015 11:52 AM

 

Published : 08 Nov 2015 11:52 AM
Last Updated : 08 Nov 2015 11:52 AM

சேவாகின் அதிரடி அரைசதம் வீண்: வார்ன் வாரியர்ஸ் அணி அபார வெற்றி

நியூயார்க்கில் நடைபெற்ற கிரிக்கெட் ஆல்ஸ்டார்ஸ் முதல் டி20 போட்டியில் ஷேன் வார்ன் தலைமையிலான வாரியர்ஸ் அணி சச்சின் தலைமை பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தியது.

முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட சச்சின் பிளாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய வார்ன் வாரியர்ஸ் 17.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 141 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பலத்த ஆரவாரங்களுக்கு இடையே சேவாக்-சச்சின் ஜோடி களமிறங்கியது. சேவாக் மட்டையிலிருந்து பவுண்டரிகள் பறக்க இருவரும் இணைந்து தொடக்க விக்கெட்டுக்காக 48 பந்துகளில் 85 ரன்கள் விளாசித் தள்ளினர். சச்சின் டெண்டுல்கர் 27 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 26 ரன்கள் எடுத்து ஷேன் வார்ன் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை மிட் ஆஃபில் ஒரு வாங்கு வாங்க நினைத்தார் ஆனால் பந்து சரியாகச் சிக்கவில்லை. ஆனால் ஜாக் காலிஸ் எம்பிப் பிடித்த கேட்ச் அவரது உடல்தகுதியை இன்றும் நிரூபித்தது. ஸ்டன்னிங் கேட்ச் என்பார்களே அந்த வகையாறாவைச் சேர்ந்தது அது. சச்சின் ஆட்டமிழந்தார். சிரித்த படியே பெவிலியன் சென்றார்.

சேவாக் 22 பந்துகளில் 3 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 55 ரன்கள் விளாசினார். சச்சின் அவுட் ஆனவுடனேயே இவரும் வெட்டோரி பந்தில் பவுல்டு ஆனார். வாசிம் அக்ரம் தான் இன்னமும் ஒரு ஆள்தான் என்பதை நிரூபித்தார். 4 ஓவர்களில் 16 ரன்களை மட்டுமே அவர் விட்டுக் கொடுத்தார்.

சச்சினுக்குப் பிறகு லஷ்மண் (8), லாரா (1) ஆகியோரையும் வார்ன் வீழ்த்தி 4 ஓவர்களில் 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்று இதிலும் தன்னை நிரூபித்தார்.

பிறகு ஜெயவர்தனே 18 ரன்களையும், கார்ல் ஹூப்பர், ஷான் போலக் இருவரும் 11 ரன்களை எடுக்க 8 ஓவர்கள் 85/0 என்பதிலிருந்து 20 ஓவர்களில் 140/8 என்று ஆனது. டேனியல் வெட்டோரி மிகச் சிக்கனமாக வீசி 4 ஓவர்களில் 13 ரன்களுக்கு சேவாக் விக்கெட்டைக் கைப்பற்றினார். ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து ஆடிய வார்ன் வாரியர்ஸ் ஹெய்டன் (4), காலிஸ் (13) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். அதுவும் முத்தையா முரளிதரன் பாயிண்டில் ஓடிச் சென்று பந்தை எடுத்து விக்கெட் கீப்பர் முனைக்கு அடிக்க காலிஸ் ரன் அவுட் ஆனார். அருமையான த்ரோ அது. ஹெய்டனுக்கு நன்றாக வேகமாக ஒரு லெக் திசை பவுன்சரை ஷோயப் அக்தர் வீச ஹெய்டன் ஹூக் ஆட முயன்று எட்ஜ் செய்து மொயின் கானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஆனால் அதன் பிறகு சங்கக்காரா (41 ரன், 29 பந்து 2 பவுண்டரி 3 சிக்சர்), பாண்டிங் (48 ரன், 38 பந்து 3 பவுண்டரி 3 சிக்சர்) ஆகியோர் 17.2 ஓவர்களில் வெற்றியை உறுதி செய்தனர். முரளி 4 ஓவர்களில் 18 ரன்கள் 1 விக்கெட், ஷோயப் அக்தர் 4 ஓவர்கள் 26 ரன்கள் 2 விக்கெட். ஆம்புரோஸ் 3 ஓவர்கள் 36 ரன்கள் விக்கெட் இல்லை.

ஆட்ட நாயகனாக ஷேன் வார்ன் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x