Last Updated : 20 Jan, 2021 03:13 AM

 

Published : 20 Jan 2021 03:13 AM
Last Updated : 20 Jan 2021 03:13 AM

விளையாட்டாய் சில கதைகள்: ஒலிம்பிக் போட்டியை புறக்கணித்த அமெரிக்கா

நாடுகளுக்கு இடையிலான பிரச்சினைகள், சில சமயம் விளையாட்டுப் போட்டிகளை பாதிப்பதுண்டு. அப்படி ஒரு சம்பவம் 1980-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியின்போது நடந்தது.

1979-ம் ஆண்டில் சோவியத் யூனியன், ஆப்கானிஸ்தான் மீது படை எடுத்தது. இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து எதிர்ப்புக் குரலை எழுப்பி வந்தன. ஆனால் இதையெல்லாம் சோவியத் யூனியன் ஒரு பொருட்டாகக் கருதவில்லை. இந்தச் சூழலில்தான் 1980-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை மாஸ்கோ நகரில் நடத்த சோவியத் யூனியன் தயாராகி வந்தது. ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்ததால், சோவியத் யூனியனில் ஒலிம்பிக் போட்டியை நடத்தக்கூடாது என்று அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் எதிர்ப்புக் குரல் எழுப்பின. ஆனால் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டி அங்கு நடைபெறுவது உறுதியானதும் சில நாடுகள் அதைப் புறக்கணிக்கலாமா என்று யோசித்தன.

இந்தச் சூழலில்தான் 1980-ம் ஆண்டு, ஜனவரி 20-ம் தேதி மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியை தங்கள் நாடு புறக்கணிக்கப் போவதாக அப்போதைய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் அறிவித்தார். அத்துடன் இப்போட்டியை மற்ற நாடுகளும் புறக்கணிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இக்கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு குத்துச்சண்டை வீரர் முகமது அலியை சிறப்பு தூதராக அனுப்பினார்.

தங்களைப் பின்பற்றி நேட்டோ ஒப்பந்த நாடுகள் பலவும் இந்த ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்கும் என்று அமெரிக்கா நம்பியது. ஆனால் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளாக இருந்த பிரிட்டனும், ஆஸ்திரேலியாவும் தங்கள் விளையாட்டு வீரர்களை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பியது. இது அமெரிக்காவுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. அதே நேரத்தில் ஜப்பான், மேற்கு ஜெர்மனி உள்ளிட்ட 65 நாடுகள் இந்த ஒலிம்பிக் போட்டியைப் புறக்கணித்தன. அதனால் 1980-ம் ஆண்டில் நடந்த ஒலிம்பிக் போட்டி களையிழந்து காணப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x