Last Updated : 07 Oct, 2015 10:09 AM

 

Published : 07 Oct 2015 10:09 AM
Last Updated : 07 Oct 2015 10:09 AM

கட்டாக்கில் சர்வதேச போட்டி நடத்த 2 ஆண்டு தடை விதிக்க வேண்டும்: ரசிகர்களின் ரகளையால் கவாஸ்கர் காட்டம்

கட்டாக் மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த 2 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் என முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நேற்று முன்தினம் நடந்த இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருந்தபோது கோபமடைந்த ரசிகர்கள், தண்ணீர் பாட்டில்களை மைதானத்துக்குள் எறிந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் ஆட்டம் பாதிப்புக்குள்ளானது.

ரசிகர்களின் இந்த செயலால் கோபமடைந்த கவாஸ்கர் மேலும் கூறியிருப்பதாவது: ரசிகர்கள் பாட்டிலை தூக்கி எறிந்தபோது போலீஸார் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். பவுண்டரி எல்லையில் பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் போட்டியைப் பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. ரசிகர்களின் நடவடிக்கைகளை கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும்.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கட்டாக்கில் சர்வதேச போட்டிகளை நடத்த அனுமதி வழங்கக்கூடாது. ரசிகர்களின் அராஜக செயல்களை தடுக்கத் தவறிய ஒடிசா கிரிக்கெட் சங்கத்துக்கு பிசிசிஐ எவ்வித நிதியுதவியும் அளிக்கக்கூடாது.

அணியின் செயல்பாடு மோசமாக இருக்கிறது என்பதற்காக பொருட்களை மைதானத்துக்குள் எறிந்து போட்டியை சீர்குலைக்கும் உரிமை ரசிகர்களுக்கு கிடையாது. அணி சிறப்பாக விளையாடும்போது ரசிகர்கள் என்ன மதிப்புமிக்க பொருட்களையா எறிகிறார்கள்? அப்படியிருக்கையில் அணி மோச மாக விளையாடும்போது அவர்கள் மீது ரசிகர்கள் குப்பைகளை வீசுவது நியாயமற்றது என்றார்.

இந்திய அணியின் செயல்பாடு குறித்துப் பேசிய கவாஸ்கர், “இந்திய வீரர்கள் மெத்தன போக்கை கடைப்பிடிக்கக்கூடாது என்பதே எனது மேலான அறிவுரை. அவர்கள் ஒவ்வொரு போட்டியிலும் மேலும் சிறப்பாக ஆட முயற்சிக்க வேண்டும். அக்ஷர் படேல் மீது கேப்டன் தோனிக்கு நம்பிக்கையில்லாத பட்சத்தில் அமித் மிஸ்ராவை களமிறக்கியிருக்கலாம். அக்ஷர் விரைவில் சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலிப்பார் என நினைக்கிறேன்” என்றார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 92 ரன்களில் சுருண்டதன் மூலம் டி20 வரலாற்றில் தனது 2-வது குறைந்தபட்ச ஸ்கோரைப் பதிவு செய்தது இந்திய அணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x