Published : 13 Oct 2015 07:22 PM
Last Updated : 13 Oct 2015 07:22 PM

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோனியின் குறைவான சராசரி: வெற்றி நெருக்கடியில் இந்திய அணி

நாளை இந்தூரில் பகலிரவு ஆட்டமாக நடைபெறும் 2-வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்த வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி உள்ளது. குறிப்பாக அஸ்வின் காயமடைந்துள்ளதால் அணிக்கு இன்னும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மேலும், தோனி, விராட் கோலி ஆகிய முக்கிய வீரர்களின் பார்மும் இந்திய அணிக்கு கவலையளிப்பதாக உள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோனியின் பேட்டிங் சராசரி வெறும் 27.30 ரன்களே. 23 இன்னிங்ஸ்களில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோனி எடுத்துள்ள ரன்கள் 546. மற்ற அணிகளுக்கு எதிரானதை விடவும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோனியின் சராசரி குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக டிசம்பர் 2011-இல் இந்தோரில் போட்டி நடைபெற்ற போது மே.இ.தீவுகளை புரட்டி எடுத்த சேவாக் 219 ரன்களை விளாசினார். இந்தியா 400 ரன்களுக்கும் மேல் குவித்து வெற்றி பெற்றது. இந்த இன்னிங்ஸை விளையாட்டாக வர்ணித்த கிறிஸ் கெயில் “சைல்ட் அப்யூஸ்” என்று குறிப்பிட்டது நினைவுகூரத் தக்கது.

அதன் பிறகு இங்கு ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. மைதானம் சிறியது, நேர் பவுண்டரிகளும் சிறியது. எனவே ரன்விருந்து உண்டு, ஆனால் அது டிவில்லியர்சிடமிருந்தா அல்லது கோலி, ரெய்னா, தோனி, ரோஹித், தவண் ஆகியோரிடமிருந்தா என்பதுதான் தெரியவில்லை.

இந்த மைதானத்தில் நடைபெற்ற 3 போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது, எனவே இந்த புள்ளிவிவரம் இந்திய அணிக்கு ஆறுதல் அளிக்கும்.

அஸ்வினுக்கு பதிலாக ஹர்பஜன், அமித் மிஸ்ராவுடன் ஸ்பின் பந்து வீச்சை பகிர்ந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டிங்கில் ரோஹித் சர்மா நீங்கலாக அனைவரும் தங்களது ஆட்டத்தை மேம்படுத்த வேண்டியுள்ளது. பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் தென் ஆப்பிரிக்கா போல் ஆக்ரோஷமாக வீசுவதில்லை. புவனேஷ், ஸ்டூவர்ட் பின்னி ஆகியோர் பூ போல பந்து வீசுகின்றனர். உமேஷ் யாதவ் லைன் மற்றும் லெந்த் மேம்பாடு அடைய வேண்டிய தேவையிருக்கிறது. யார்க்கர்களை வீசுவதில் திறமை போதவில்லை.

டிவில்லியர்ஸுக்கு எதிராக ஏதாவது உத்தியை வகுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முதல் போட்டியிலேயே அவர் சதம் கண்டுள்ளதால் இந்திய அணிக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக திகழ்வார் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதே வேளையில் ஹஷிம் ஆம்லா, இந்தியாவுக்கு எதிராக 3 தொடர் சதங்களை அடித்த குவிண்டன் டி காக் -ஐயும் நாம் குறைவாக எடைபோட முடியாது. டுபிளெஸ்ஸிஸ் டி20 மற்றும் முதல் போட்டியில் நன்றாக ஆடியுள்ளார். டுமினி எப்போதுமே ஆபத்தான வீரர்.

பந்துவீச்சில் இம்ரான் தாஹிர் 2015-ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக திகழ்கிறார். மிட்செல் ஸ்டார்க், டிரெண்ட் போல்ட்டுக்குப் பிறகு 32 விக்கெட்டுகளுடன் இம்ரான் தாஹிர் உள்ளார்.

தோனியின் கேப்டன்சியும், டி20, மற்றும் கான்பூர் தோல்விகளுக்குப் பிறகு கடுமையாக கேள்விக்குட்பட்டு வருகிறது. பவுலர்களை இவர் பயன்படுத்தும் விதம் தென் ஆப்பிரிக்க அணியின் மீதான பிடியை நழுவ விட்டு விடுகிறது என்பதே உண்மை. தொடரை சமன் செய்ய வேண்டுமெனில் தோனி நிச்சயம் ஆக்ரோஷமாக கேப்டன்சி செய்து பேட்டிங்கிலும் கடும் ஆக்ரோஷம் காட்டுவது அவசியமாகியுள்ளது.

ஒன்று, இரண்டு ரன்களில் கவனம் செலுத்தும் வீரர்களிடத்தில் உள்ள பிரச்சினை என்னவெனில் பவுண்டரி, சிக்சர் அடிக்க வேண்டிய பந்துகளை இவர்கள் கவனிக்கத் தவறிவிடுவார்கள், இவ்வாறாகத்தான் ஒரு காலத்தில் போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்கும் தலை சிறந்த வீரராகக் கருதப்பட்ட மைக்கேல் பெவன் மீது விமர்சனம் எழுந்தது. அவரால் தேவைப்படும் போது பவுண்டரி, சிக்சர்களை அடிக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது தோனியினால் பெரிய ஷாட்களை அடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எதிரணி பவுலர்கள் அவர் கைவசம் வைத்துள்ள குறைந்த ஷாட்களை எளிதில் கட்டுப்படுத்தி வருகின்றனர், எனவே தோனி புதிய ஷாட்களை ஆட வேண்டும்.

இதனால் கடும் நெருக்கடி நிலையில் இந்திய அணி நாளை களமிறங்குகிறது. ஆட்டம் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x